

ஒரு சிலருக்கு புதிய நபர்களுக்கு மத்தியில் இருக்கும்போது பதட்டமாகவும், பயமாகவும் இருக்கும். அத்தகைய நபர்கள் யாருடனும் சரிவர பழகாமல் அமைதியாகவே இருப்பார்கள். இந்த பதிவில் நான் சொல்லப்போவதை நீங்கள் புரிந்துகொண்டால், நிச்சயமாக எப்பேர்ப்பட்ட கூட்டத்திற்கு நடுவே இருந்தாலும் நீங்கள் பயமாக உணரமாட்டீர்கள்.
பொதுவாகவே தன்னம்பிக்கை இருந்தால் ஒருவர் தைரியமாக இருக்கலாம் என சொல்வார்கள். தன்னம்பிக்கை என்பது உங்களின் பலத்தை அறிந்து, தேவையில்லாத கேள்விகளையும் சந்தேகங்களையும் உங்கள் மீது திணித்துக்கொள்ளாமல் இருப்பதே ஆகும். அதாவது நம்மால் செய்ய முடிந்த விஷயங்களை நினைத்து தைரியமாக இருப்பதே தன்னம்பிக்கை. இந்த உலகத்தில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நிர்ணயம் செய்வதே இதுதான்.
ஆனால் ஒருவருக்கு தன்னம்பிக்கை என்பது பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு விதமாக இருக்கலாம். சிலர் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து தன்னம்பிக்கையாக இருப்பர். ஒரு சிலர் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து, ஒருவேளை இது தவறாக முடிந்துவிட்டால் என்ன செய்வது? என நெகட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு, நான் ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது, அங்கே எப்படி பேசப்போகிறோம் என்ற குழப்பத்தில் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். அங்கே ஒரு கூட்டத்தின் நடுவே என்னை அமர வைத்து கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே நான் என்னை குறைத்து மதிப்பீட்டுக் கொண்டதால் என்னால் தைரியமாக எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. பயம் தொண்டையை அடைத்தது. இதுவே தனியாக நான் என்னுடைய திறமைகளைப் பற்றி சிந்திக்கும்போது தைரியமாகவும் தன்னம்பிக்கை கொண்டவனாகவும் உணர்கிறேன். எனவே தன்னம்பிக்கை என்பது இரு வேறு தருணங்களில் பாசிடிவாகவும், நெகட்டிவ்வாகவும் எனக்கு இருப்பதை உணர்ந்தேன்.
இதன் மூலமாக நான் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்னுடைய தன்னம்பிக்கை மாறுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஒருவேளை நான் அந்த நேர்காணலில் என்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக பேசியிருந்தால் அந்த வேலை கிடைத்து நான் பெரிய நிலையை அடைந்திருக்கலாம். பிறர் என்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என்ற பயம் காரணமாக, மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவியது.
என்னைப் பற்றி பிறர் கொடுக்கும் அங்கீகாரங்களை பெரிதாக நினைத்து, நான் என்னைப் பற்றி எப்படி நினைக்கிறேன் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எனவே நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சுற்றி இருப்பவர்களை கவனிக்கவேண்டாம்.
எல்லா தருணங்களிலும் நீங்கள் உங்களைப் பற்றி முதலில் தன்னம்பிக்கையாக நினைக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மற்றவர்களின் கருத்துக்களை பற்றி சிந்திக்காமல் இருப்பதே உங்களை தைரியமான மனிதராக மாற்றும்.
-கிரி கணபதி