
உங்களிடம் ஆற்றல் இருக்கிறது. திறமை இருக்கிறது. எல்லாவற்றையும்விட உங்களிடம் பலமான விருப்பு வெறுப்பு இருக்கிறது. உங்களிடம் உள்ள தனித்திறமை ஆற்றல் இவைகளைப் பயன்படுத்தி என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். மற்றவர்கள் ஏன் உங்கள் பெற்றோரே உங்களைச் செய்யச் சொன்னதைச் செய்வதைவிடுத்து உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்.
நம்மில் பலர் வேலையை அது கொடுக்கும் பொருளாதார பாதுகாப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம். வேலையின் இன்னொரு முகம் அது நமக்குக் கொடுக்கும் ஆத்மதிருப்தி. உண்மையில் சொல்லப் போனால் நம்மை வேலை செய்ய உற்சாகப்படுத்துவது நம்முடைய விருப்பம்தானே தவிர அது தரும் பணமல்ல என்பதை நாம் நாள் கடந்தே உணருகிறோம்.
நம்முடைய சொந்த விருப்பங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பணத்திற்காக மட்டும் நாம் வேலை செய்யும்போது காலப்போக்கில் அது நம் வேலையின் தரத்தை பாதிக்கும். நம்முடைய ஆற்றலை முழுமையாக பயன்படுத்தும் வேலையை நாம் செய்யவேண்டும் .
உங்களை நீங்கள் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திறமையை ஆற்றலை எண்ணி மகிழுங்கள். உங்களுக்கே உங்களைப் பிடிக்கவில்லை என்றால் அடுத்தவருக்கு உங்களை எப்படி பிடிக்கும்? அப்புறம் உங்களை வேலைக்கு அமர்த்தப் போகிறவர் உங்களுடைய திறமைகளை எப்படி பாராட்டுவார்.
தன்னிடம் திறமை ஆற்றல் எதுவுமில்லை என்று எண்ணும் மனிதர் கடைசியில் எதையும் திறமை ஆற்றல் எதுவும் இல்லாத மனிதராகத்தான் போவார்.
நம் எண்ணங்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. உங்களிடம் ஆற்றலும் திறமையும் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் ஓட்டப்பந்தயத்தில் ஓடத் தொடங்குங்கள். யாருக்காகவும் காத்திருக்காதீர்கள் யாரும் உங்களுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் பாதையில் ஓடத்தொடங்குங்கள்.
ஆற்றல்களை 'தனித்தன்மை' வாய்ந்தவைகளாக மாற்றி நம்முடைய நண்பர்கள் தெரிந்தவர்கள் மூலம் நம் தனித்தன்மைகளை தெரியப்படுத்த வேண்டும். வெளியுலகிற்குத் எப்பவுமே எந்தப் பொருளை விற்கும் போதும் அந்தப் பொருளைப் பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நீங்கள்தான் விற்பனை பொருள் என்பதால் உங்களைப் பற்றி நீங்களே நன்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் தனித்திறமைகள் ஆற்றல்கள் இவற்றில் உங்களுக்கே முழு நம்பிக்கை இருந்தால் இந்த உலகை ஆளும் நிலை கூட எட்டிவிடும் தூரம்தான்.