

மனிதர்களை புரிந்து கொள்வதற்கும், நட்பு மற்றும் உறவை வளர்ப்பதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் சில அவசியமான பண்புகள் தேவை. ஆனால் சில ஆண்கள் அடிப்படையான உணர்ச்சிக் கட்டுப்பாடு இல்லாமல் தாம் செய்யும் தவறுகள் பற்றித் தெரியாமலும், அது குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் வளர்ச்சியோ நட்பு மற்றும் உறவுகளில் மதிப்பு மரியாதையோ இருக்காது. சரியாக சிந்திக்கத் தெரியாத ஒரு ஆணின் ஏழு அறிகுறிகள் எவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
1. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாத மனிதன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, கோபத்தில் வெடித்து சிதறி நண்பர்களையும் உறவுகளையும் மிக எளிதில் இழந்து விடுவார். சோகமான மனநிலையில் இருந்தால் எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவார். உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, பிறருடன் தேவையற்ற மோதலைத் தவிர்க்க தெரியாமல் சிக்கலை வரவழைத்துக் கொள்கிறார்.
2. விதி/அதிர்ஷ்டத்தை நம்புதல்
வாழ்க்கையில் யாராவது வெற்றி பெற்றால் ‘அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது, அதனால் தான் ஜெயிச்சிட்டாங்க’ என்று சொல்வார். விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு காரணம் என்பதை அந்த மனிதன் ஒருபோதும் உணர மாட்டார். ‘எனக்கு அதிர்ஷ்டமும் இல்ல. விதியும் மோசமா இருக்கு. அதான் எல்லாமே தப்பாப் போகுது. எந்தக் காரியமும் உருப்படுவதில்லை’ என்று சுலபமாக விதி, அதிர்ஷ்டத்தின் மீது பழி போடுவார்.
3. தவறான நட்பு
புத்திசாலியான மனிதன் தனது வளர்ச்சிக்கு வழிகாட்டும் மனிதர்களுடன் பழகுவார். ஆனால் எப்போதும் புகார், சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்கும் ஆசாமி, தன்னைப் போலவே இருக்கும் மனிதர்களுடன் பழகுவார். அவர்கள் இவரை வளர விட மாட்டார்கள். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றமும் இல்லாமல் செயல் திறனும் இல்லாமல் அப்படியே இருப்பார்கள்.
4. சண்டைக் குணமும், பிடிவாதமும்
பைசா பெறாத விஷயங்களில் பிடிவாதமாக இருந்து வீண் வாதம் செய்வார். தேவையில்லாத அரசியல் கருத்துக்கள் பேசி எந்த மாற்றத்தையும் கொண்டு வராத விஷயங்களுக்காக சண்டை போடுவதில் சக்தியை செலவழிப்பார். தன்னுடைய கருத்து நியாயமானது என்று பிடிவாதமாக இருப்பார். புத்திசாலியான மனிதன் வீண் விவாதங்களில் தனது ஆற்றலை செலவழிப்பது இல்லை.
5. மீண்டும் மீண்டும் தவறு செய்வது
புத்திசாலிகள் ஒருமுறை தவறு செய்தால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டார்கள். ஆனால் அறிவு குறைந்த ஆண்கள் மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்து, அது தன்னால் நடந்து விட்டது, தான் அதற்கு காரணமில்லை என்று சாக்கு போக்கு சொல்வார்கள்.
6. அதிகமாக பேசுவதும் குறைவாக கேட்பதும்
பிறர் பேசுவதை ஒருபோதும் காது கொடுத்து கேட்கும் பழக்கமே இவர்களுக்கு கிடையாது. ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்கிறது போல பேசும் ஆண் எப்போதும் தன் வாய்க்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பார். இதனால் வாழ்க்கையில் இழப்புகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத சிக்கல்களையும் தேடிக் கொள்வார்.
7. பொறுப்புகளைத் தட்டிக் கழித்தல்
தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்யாமல் அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தப்பி ஓடுவது மனமுதிர்ச்சி இல்லாத ஆண்களின் முக்கியமான அறிகுறி. ஏதாவது தவறு நேர்ந்தால் அதற்கு அரசாங்கம், பெற்றோர், முதலாளி, சமூகம் என்று எல்லார் மீதும் பழி போடுவார்கள். ஒருநாளும் இது தன்னுடைய தவறுதான் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இந்த அறிகுறிகள் எல்லாம் தன்னிடம் இருப்பதை தெரிந்து கொண்டு, இவற்றை திருத்திக் கொள்ளும் ஆண்களால் புத்திசாலிகளாக திகழ முடியும்.