
“தூக்கத்தில் வருவது கனவல்ல. உன்னை தூங்கவிடாமல் செய்வதே கனவு..!” என்றெல்லாம் கூறுவதை கேட்டிருப்போம். வாழ்வில் வெற்றியடைய தோல்வியை கண்டு பயந்து விடக்கூடாது, துன்பத்திற்கும் துன்பம் கொடுக்க வேண்டும். ஆயிரம் கயிறு உன்னை காலை வாரிவிட காத்துக்கொண்டிருக்கும். ஆனால், நீ அந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு காலில் மிதித்துவிட்டு ஓடிக்கொண்டே இரு, எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.. நமக்கு நமது முன்னேற்றமே முக்கியம்.!
அதைத் தவிர நமக்கு மற்றவரின் அவநம்பிக்கைகளும், பொய்களும், பெருமைகளும், புகழ்ச்சியும், இகழ்ச்சியும் தேவையில்லை. எண்ணத்தில் உறுதிகொண்டால் கருப்பு வண்ணமும், வெள்ளையாகும்! உன்னிடத்தில் நிலைக்கொண்டால் இந்த வானமும் உன் வசப்படும்! பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஜெயித்தால், “நான் அப்பவே நினைச்சேன் இந்த பையன்தான் முதல்ல வருவான்னு.. என்னமா ஓடுறான் அந்த பையன்..!”
அதே நீ தோற்றால், “முட்டி செத்தவன் எல்லாம் ஓட வந்தா இப்படித்தான் இருக்கும்.. முதல்ல இவன பாக்கும்போதே இவனோட லட்சணம் தெரிஞ்சிருச்சு!” என்று புரளி பேசத்தான் செய்வார்கள். இதை எவற்றையும் காதில் வாங்காமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தப் புரளிகளை நம் காதுக்குள் போகவிட்டால் நம்மால் எந்த ஒரு மகத்தான காரியங்களையும் செய்யமுடியாது.
நாளடைவில் அதுவே, அடுத்தவர்கள் நம்மை எப்படி நினைக்க போகிறார்களோ? என்ற பயம்தான் தலைத் தூக்கி ஆடும். “கல்லடிப் பட்டாலும், கண்ணடிப் படக்கூடாது..!” இந்த பழமொழி கேட்டு நடந்தால் வாழ்வில் முன்னேற்றம் துளி கூட இருக்காது. கற்றுக்கொண்ட பாடங்களை, மாணவர்களிடம் கரை சேர்ப்பதற்கு ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு அறிவும், தைரியமும் தேவைப்படுகிறதோ..! அதே அளவு நமது வாழ்க்கை வெற்றிக்கும், கஷ்டங்களை கடப்பது தேவைதான்.
அதேபோல் புரளி பேசுபவர்களிடம் தள்ளி இருப்பதும் தேவைதான். உனது தோல்விக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மிருகங்களுக்கு இரைக் கொடுக்க விரும்பினால், நீ கொடுக்கும் இரையானது அந்த மிருகங்களை காட்டிலும் பெரிதாக இருக்க வேண்டும். அந்த இரை எதுவென்றால் நீ அடையும் வெற்றிதான் தீர்மானிக்கும்.
தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, மற்றொருவரின் விதிகளுக்கு (இகழ்ச்சி, குறை கூறுதல்) கட்டுப்படுபவன் நீயல்ல..! உனக்கான சுதந்திரம் எல்லையற்றது, அதில் உலாவ உன்னை நீயே முதலில் நம்பு.! உயிரே போகும் நிலை வந்தாலும், தைரியத்தை கைவிடாதே.. குறைகளை காதில் கேட்காதே, உன்னை நீயே நம்பு.. எதிர்த்து செல்.. துணிந்து வெல்..! முயற்சியை ஒருபோதும் கைவிடாதே.
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை; மௌனம், எதிர்ப்பு, அங்கீகாரம். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமைப் படைத்தவன் ஆகிறாய். கோழை என்று நினைத்தால் கோழையாகிறாய்..! எல்லாம் நம் மனமே.
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்றுதான் “தட்டிக் கொடுப்பது மட்டுமே..!” காதுகளின் செவிகளுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டு உழைக்க ஆரம்பியுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உன்னை தொடும் அளவிற்கு அல்ல.., விண்ணை தொடும் அளவிற்கு!