
எளிமையின் மறுபெயர் வலிமை. எளிமையாக வாழ்வது என்றைக்கும் நமக்கு நிம்மதியை தரும். சமுதாயத்தில் நமக்கு மரியாதையையும் பெற்றுத்தரும். எளிமையையும் நேர்மையையும் நமக்கு போதித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள். மகாத்மாவின் வாழ்வில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.
காந்திஜியின் வாழ்க்கை மிகவும் சிக்கனமானது. எளிமையானது. அவர் சபர்மதி ஆசிரமத்தில் வாழ்ந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. காந்திஜி குளிக்கச் சென்றபோது குளிக்கும் இடத்தில் ஒரு சிறிய சோப்புத்துண்டு விழுந்து கிடப்பதைப் பார்த்தார். உடனே கோபமடைந்த காந்திஜி ஆசிரமத்தில் இருந்த அனைவரையும் அழைத்தார்.
தனக்கு முன்னால் குளித்துவிட்டுப் போனது யார் என்று விசாரித்தார். அந்த நபரை அழைத்து சோப்புத்துண்டை வீணாக்கியது குறித்து எடுத்துரைத்து கோபித்துக்கொண்டார்.
“ஒரு சாதாரண சோப்புத் துண்டுதானே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த சிறிய சோப்புத்துண்டு கூட கிடைக்காமல் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் வாழ்கிறார்கள். நம் வாழ்வில் எக்காரணத்தைக் கொண்டும் எதையும் வீணாக்கக் கூடாது. எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்”
காந்திஜியின் அறிவுரை அங்கிருந்தோரின் மனதில் ஆழப்பதிந்து பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.
திருமதி. வை.மு.கோதைநாயகி அம்மையார் பல துறைகளில் சுடர்விட்டு பிரகாசித்தவர். சுதந்திரப்போராட்ட வீரர், பத்திரிகை ஆசிரியை, நாவலாசிரியை, இசைக்கலைஞர் மற்றும் சமூகசேவகி என்ற பல துறைகளில் இவர் தனது முத்திரையை திறம்பட பதித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அது. ஒரு சமயம் சென்னைக்கு காந்திஜி விஜயம் செய்திருக்கிறார் என்ற செய்தி கோதைநாயகி அம்மாளுக்கு கிடைக்க அவரும் உடனே அவரை சந்திக்க விரும்பினார். 1925 ல் சென்னை மயிலாப்பூருக்கு காந்திஜி வருகை தந்தார். மயிலாப்பூரில் திரு.சீனுவாச அய்யங்காரின் வீட்டில் காந்திஜி தங்கினார். கோதைநாயகி தனது சிநேகிதியான அம்புஜம்மாளை அழைத்துக் கொண்டு மயிலாப்பூருக்குச் சென்று காந்திஜியை சந்திக்க தீர்மானித்தார்.
காந்திஜி ஒரு மாபெரும் மனிதர். அவரை சந்திக்க எளிமையாக செல்வது சரியாக இருக்காது என்று நினைத்த கோதைநாயகி அம்மாள் விலை உயர்ந்த பட்டுப்புடவை ஒன்றை அணிந்து கொண்டார். அத்துடன் நில்லாது தன்னிடமிருந்த ஏராளமான நகைகளையும் அவர் அணிந்து கொண்டு சென்றார். கோதைநாயகி அம்மாளின் நீண்டகால ஆசை நிறைவேறியது. காந்திஜியை சந்தித்தார். தன்னை சந்திக்க வந்திருந்த கோதைநாயகி அம்மாளை காந்திஜி பார்த்தார்.
“இந்திய நாடு இன்று இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் ஆடம்பரமாய் உடைகளையும் நகைகளையும் அணியலாமா? பல உயிர்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டுச்சேலையை அணியலாமா? நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு கதராடையை உடுத்துவதே சிறந்ததாகும்.”
தன்னிடம் காந்திஜி இப்படிப் பேசுவர் என்று அவர் நினைக்கவில்லை. காந்திஜி சொன்ன சொற்களில் இருந்த உண்மை அவரை யோசிக்க வைத்தது.
வீட்டிற்குத் திரும்பியதும் தான் அணிந்திருந்த நகைகள் பட்டாடை போன்றவற்றை களைந்தார். ஒரு கதராடையை உடுத்திக்கொண்டார். மூக்குத்தி, கம்மல், தாலி இரண்டு வளையல்கள் இவற்றை மட்டுமே அணிந்து கொண்டார். தன் வாழ்நாள் முழுக்க கோதைநாயகி அம்மையார் இவ்வாறே மிக எளிமையாக வாழ்ந்தார். காந்திஜியின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை இருந்தது.
நாமும் சிக்கனமாக எளிமையாக வாழப் பழகுவோம். அது என்றைக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தரும். உங்கள் வாழ்வை படிப்படியாக உயர்த்தும் என்பது நிச்சயம்.