
பெண் ஆளுமை வகைகளை ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, சிக்மா, ஒமேகா என ஆறு வகைகளாக பிரித்திருக்கிறார்கள். இவை உளவியலாளர்களால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் சமூகத்தில் பிரபலமாக உள்ளன. இவற்றின் சிறப்பம்சங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆல்பா பெண்கள்:
ஆல்பா பெண்கள் குழுத் தலைவராக விளங்குவார். தன்னம்பிக்கை, நேர்மறைத்தன்மை, லட்சியங்களோடு திகழும் இவர் சவால்களை எதிர்கொள்ள அஞ்சுவதில்லை. கூட்டத்தில் இவர்கள் தனியாக தெரிவார்கள். சமூகத்தில் ட்ரெண்ட் செட்டராகவும் குறிப்பிடத்தக்க நபர்களாகவும் விளங்குவார்கள். சுயமாக முடிவெடுக்கும் தன்மை
பெற்றவர்கள், எனினும் பிறருக்கு உரிய மரியாதையை அளித்து, அவர்களை எந்த விஷயத்திற்கும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மிக உயர்ந்த சமூக அந்தஸ்து இவர்களுக்கு கிடைக்கும். பிறரால் எப்போதும் பாராட்டப்படுவார்கள். பலருடைய ரோல் மாடலாகத் திகழ்வார்கள்.
2. பீட்டா பெண்கள்:
பீட்டா பெண்கள் ஆல்பா பெண்களுக்கு மிகுந்த ஆதரவோடும் அனுசரணையோடும் நடந்துகொள்வார்கள். ஒரு குழுவை தோழமைத்தன்மையோடு தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார்கள். மிகச்சிறந்த நேர்மையான தோழியாக இருப்பார்கள்.
எளிதில் அணுகக்கூடிய வகையில் நட்புணர்வுடன் இருப்பதால் பிறரால் எப்போதும் விரும்பப்படுவார்கள். உறவு மேலாண்மையை மிகச் சிறப்பாக கையாளுவார்கள். பிறருடைய கருத்துக்களை பொறுமையாக கேட்பார்கள். மோதல் பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் சிறந்தவர்கள். அதே சமயத்தில் பிறரின் கவனத்தை ஈர்க்க விரும்ப மாட்டார்கள். அசைக்க முடியாத விசுவாசத்திற்கும் ஆதரவிற்கும் பெயர் போனவர்கள்.
3. காமாப் பெண்கள்:
தன்னம்பிக்கை கொண்டவர்கள், பீட்டா பெண்களைவிட சுதந்திரமானவர்கள் லட்சியவாதிகள். ஆனால் சமூக அக்கறையை விட தன்மேல் அதிக அக்கறை கொண்டவர்கள். நன்றாக திட்டமிடும் இயல்பும் செயல்படும் தன்மையும் இருக்கும். சமூக முன்னேற்றத்திற்கு விட தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் சாதனைகளில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
சுயமதிப்பும் சுயநலமும் அதிகம். தனது எதிர்காலத்திற்கான தெளிவான பார்வை கொண்டவர். மிகவும் திறமைசாலி, லட்சியவாதியாததால் பிறரால் பாராட்டப்படுவார்கள். பிறருடன் இருப்பதைவிட தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். தன்னுடைய முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள்.
4. டெல்டா பெண்கள்:
புத்திசாலிகளாகவும் மிகுந்த மனப்பக்குவம் மிகுந்தவர்களாகவும் அமைதியான இயல்புடனும் இருப்பார்கள். சுயவிழிப்புணர்வு அதிகம். தன்னைப்பற்றிய சொந்த மதிப்புகள் குறித்த வலுவான உணர்வு கொண்டவர்கள். சமூக முன்னேற்றத்தைவிட தனிப்பட்ட வளர்ச்சியின் மேல் அதிக ஆர்வம் இருக்கும். தனது கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வார்கள். தன்னை சுயபரிசோதனை செய்து, நிலையான அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவார்கள். கூச்ச சுபாவிகள் அல்ல என்றாலும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். பிறர் தன்னுடைய கருத்துக்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.
5. ஒமேகா பெண்கள்:
இவர்கள் பெரும்பாலும் இன்ட்ரோவர்ட் எனப்படும் உள்முக சிந்தனையாளர்கள். பாரம்பரிய சமூக விதிமுறைகளுக்கு இணங்க மாட்டார்கள். இவர்கள் தனிமையில் இருப்பதைத்தான் விரும்புவார்கள். சமூக அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். தனது சொந்த விருப்பு வெறுப்புகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பிறரால் விசித்திரமான மனிதர்களாக கருதப்படுவார்கள். மிகுந்த படைப்பாற்றல் மிக்கவர்கள், சுதந்திரமானவர்கள். பிரபலமாக இருக்கவேண்டும் என்பதைவிட தன்னுடைய மகிழ்ச்சியில் திருப்தி அடைகிறார்கள். நண்பர் கூட்டம் குறைவாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையுடனும் நடத்துவார்கள். உண்மையாக இருப்பார்கள்.
6. சிக்மா பெண்கள்:
இவர்கள் உள்முக சிந்தனை கொண்ட ஆல்பா ஆளுமைத்தன்மை நிறைந்தவர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்கள், ஆதிக்கம் செலுத்துவதில் ஆர்வமுள்ளவர்கள். ஆல்பா பெண்களைப்போல குழுத்தலைமைக்கு ஆசைப்படாமல் ஒன் மேன் ஆர்மியாக செயல்படுவார்கள். சுதந்திரத் தன்மை மிக்கவர்கள். என்றாலும் கலகம் செய்வதில் வல்லவர்கள். சமயோஜிதமாக நடந்து கொள்வதால் எந்த சூழலிலும் இவர்களால் சிறப்பாக வளரமுடியும். பிறரால் மர்மமானவர்களாக கருதப்பட்டாலும், பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. என்றாலும் சக்தி வாய்ந்தவர்கள்.