
ராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் நல்ல ஞானத்தை வழங்கும் சிறந்த நிகழ்வுகள் நிறைந்த புனிதமான இதிகாசங்களில் ஒன்று. அதில் ஒரு கதை தான் பகவான் ஸ்ரீராமர் மற்றும் சிறிய அணில் பற்றியது. ஒரு பெரிய பணியின் பங்களிப்பில் எந்த முயற்சியும் சிறியதல்ல என்பதை இக்கதை நமக்கு கற்பிக்கிறது.
ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்க ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக, இந்தியப் பெருங்கடலின் குறுக்கே ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. வானரர்கள் பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கடலில் போட்டு பாலம் கட்டத் தொடங்கினர். கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமபிரானுக்கு உதவ விரும்பின. எனவே, அனைத்தும் தன்னால் முடிந்த வழியில் இராமருக்கு உதவி செய்தன. மீன்களும், மற்ற கடல் உயிரினங்களும் பாலத்தை ஒழுங்குப்படுத்தவும், இடைவெளிகளை நிரப்பவும் உதவின. பறவைகள் அவைகளால் முடிந்த கற்களை தூக்கி வந்து பாலத்தின் மீது வைத்தன.
சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய விரும்பியது. என்ன செய்யலாம் என்று யோசித்த அணில் கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது. இந்த சிறிய அணில் கரைக்கும், தண்ணீருக்கும் இடையே ஓடிக்கொண்டே இருந்தது. பெரிய பாறைகளை தூக்கி கொண்டு வந்த வானரங்களுக்கு அணில் இடைஞ்சலாக இருந்தது. எனவே அவர்கள் அதனை விரட்டினர். அதற்கு அணில் “நானும் என்னால் முடிந்த இந்த சிறு மணல் துகள்களை சேர்த்து பாலம் கட்ட உதவுகிறேன்” என்று கூறியது.
அணில் கூறியதை கேட்ட வானரங்கள் சிரிக்கத் தொடங்கின. “இந்த சிறிய மண்துகள்கள்தான் நாங்கள் கட்டும் இந்த மாபெரும் பாலத்தை வலிமைப்படுத்த போகிறதா? எங்கள் பாதையிலிருந்து விலகி போய் உன்னுடைய வேலையை பார்” என்று விரட்டின. ஆனால் அணில் அவர்களின் பேச்சுக்களை காதில் வாங்கி கொள்ளாமல் அதன் வேலையை தொடர்ந்தது. இறுதியில் கோபமுற்ற வானரம் ஒன்று அணிலை கரையிலிருந்து தூக்கி வீசியது.
இதனை பார்த்த ஸ்ரீஇராமர் அணில் கீழே விழுவதற்கு முன் அதனை பிடித்து பத்திரமாக கீழே வைத்தார். மேலும் வானரங்களை பார்த்து "நண்பர்களே நீங்கள் மாபெரும் பலசாலிகள்.
நீங்கள் மிகப்பெரிய பாறைகளை கொண்டு வந்து பாலத்தை அமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கட்டும் பாலத்தில் இருக்கும் இடைவெளிகளை இங்கிருக்கும் இந்த சின்ன உயிரினங்கள் கொண்டு வந்து வைத்த கற்கள்தான் நிரப்புகின்றன. அதனால்தான் உங்கள் பாலமும் பலம் பெற்றிருக்கிறது. இந்த சிறிய துகள்களில் இந்த அணிலின் பங்கும் இருக்கிறது” என்று கூறினார்.
ராமபிரான் அணிலை மெதுவாக எடுத்து அதன் முதுகில் தன் விரல்களால் அன்புடன் தடவி ஆசீர்வதித்தார். மூன்று தெய்வீகக் கோடுகள் இன்றும் அணில்களின் மீது காணப்படும். அணிலின் சிறிய பங்களிப்பை நன்றியுடன் ஏற்றுக்கொண்டார் ஸ்ரீராமர். பாலம் கட்ட பெரிய பாறைகளைத் தூக்கிச் சென்ற வானரர்களின் முயற்சிகளுடன் ஒப்பிடும்போது உற்சாகமான அணிலின் பங்களிப்பு மிகக் குறைவு என்றாலும், அந்த உன்னதமான நோக்கத்திற்கு பங்களிக்க அணில் தயங்கவில்லை. ஸ்ரீராமர் பாராட்டியது அணிலின் இந்த மனப்பான்மையைத்தான். மற்றவர்களுக்கு உதவும் இந்த மனப்பான்மையை வளர்க்க வேண்டும், இது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது.
மேலும் எந்தவொரு முயற்சியும் அற்பமானதல்ல என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.
தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் சிறிய பங்களிப்புகளை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம். அவை பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடினும் அணிலின் முயற்சியைப் போலவே நமது சிறிய செயல்கள் கூட பெரிய நோக்கத்திற்குப் பங்களிக்கின்றன.
பணியிடங்களில் அந்தஸ்து, பதவிபேதம் பார்க்காமல் அனைவரும் இணைந்து நேர்மையான பங்களிப்பைத் தரும்போது குழுப்பணி சிறப்பாக இருக்கும். குடும்ப உறவு முறைகளிலும் அன்புடன் கூடிய சிறிய செயல்கள் பிணைப்பை வலுப்படுத்தும். சமுதாயத்திலும் ஒரு நல்ல செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒவ்வொரு பெரிய அல்லது சிறிய பங்களிப்பையும் மதிக்கவும், அங்கீகரிக்கவும் பகவான் ராமபிரான் நமக்கு கற்றுத் தந்த பாடமாகும் இந்தக் கதை. அணிலின் கூழாங்கற்கள் பெரிய பாலத்தைக் கட்ட உதவியது போல் நமது சிறிய முயற்சிகள் நம்மை சுற்றிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்.
எனவே நமது முயற்சிகள் மற்றும் செயல்கள் சிறியவைகளாக இருப்பதாக எண்ணாமல் ராமபிரானால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கதையை நினைவில் கொண்டு நம் பங்களிப்பை நேர்மையாக தொடர்ந்து அளித்து வந்தால் அது நிச்சயம் பிறரால் அங்கீகரிக்கப்படும்.
ஜெய் ஸ்ரீராம்!