செத்தவன் கைக்கு எதற்கு வெற்றிலை பாக்கு? வாங்க தெரிஞ்சுக்கலாம்...
1) காவும் வரை காவிக் கடப்புக்குள் போட்டுடைப்பது:
கிராமப்புறங்களில் மதில் சுவரும் கேட்டும் உள்ள வீடுகள் தான் இருக்கும் என்றில்லை. வீட்டை சுற்றி எல்லை அமைத்தது போல் தாவரங்கள், நெடுமரங்களால் ஆன ஒரு வேலியை போட்டிருப்பார்கள். இதற்குப் பெயர் 'கதியால் வேலி'. இந்த கதியால் வேலியில் ஒரு சிறிய பாதையை விட்டு அந்தப் பாதை வழியாக சிறு மிருகங்கள் வராமல் இருக்க கீழே ஒரு தடையையும் கட்டியிருப்பார்கள். அந்த தடை கட்டிய பாதையை 'கடப்பு' அல்லது 'கடவை' என்பார்கள். அதைத் தாண்டி செல்ல காலை கொஞ்சம் மேலே தூக்கி எட்டி வைத்து கடக்க வேண்டும்.
கடப்பு, கடவை இவையெல்லாம் பாதையில் உள்ள தடைகள். அதைத் தாண்டும் பொழுது முழு கவனம் தேவை. அதேபோல் எந்த கவனக்குறைவான நிகழ்வுக்கும் நாம்தான் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தப் பழமொழி அமைந்துள்ளது. மிகுந்த சிரமப்பட்டு ஒரு பாரமான சுமையை வெகு தூரம் சுமந்து வந்தாலும் இந்த கடப்பில் கவனமாக காலை வைத்து தாண்டினால்தான் கால் தடுக்கி சுமையை கீழே போடாமல் பத்திரமாக கடக்க முடியும். இல்லையெனில் அவ்வளவு முயற்சியும் வீணாகிவிடும்.
அதுபோல்தான் நீண்ட காலமாக பெரும் சிரமம் எடுத்து ஆசையோடு மேற்கொண்ட ஒரு திட்டத்தை முடித்து விடுவோம் என்று எண்ணுகின்ற தருவாயில் அதை தவறவிட்டால் அதற்கு நாம் தான் காரணம். அதை ஒருவரை நம்பி பொறுப்புக் கொடுத்தாலும், நம்முடைய சிரத்தை இன்மை தான் காரணம் என்று இந்த பழமொழி கவனக்குறைவால் நடக்கும் நிகழ்வுக்கு நாம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை அழகாக சுட்டிக்காட்டுகிறது. கடப்பு, கடவை இவையெல்லாம் பாதையில் உள்ள தடைகள்; அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள்.
2) வெண்கலப் பூட்டை உடைத்து வெளக்கமாத்தை திருடுவதற்கு சமம்:
மற்றொரு பயனுள்ள பழமொழி 'வெண்கலப் பூட்டை உடைத்து வெளக்கமாத்தை திருடுவதற்கு சமம்' என்பது. விலைமதிப்பற்ற விளக்குமாற்றை திருட விலை மதிப்பு மிக்க வெண்கலப் பூட்டை உடைப்பது அறிவீனம் என்பதை குறிக்கும் படி அமைந்துள்ள பழமொழி இது. அதாவது பயனற்ற ஒரு செயலை செய்வதற்காக, பயனுள்ள பொருளை, அதாவது பொன்னான நேரத்தை, வீணாக்க கூடாது என்று பொருள். வெண்கல பொருளுக்கு விலை மதிப்பு எப்பொழுதும் உண்டு. மதிப்பு ஒன்றும் இல்லாத ஒன்றை பெறுவதற்காக மதிப்புள்ள ஒன்றை அசட்டை செய்வதன் அறிவிலித்தனத்தை சுட்டிக்காட்டும் பழமொழி இது.
3) செத்தவன் கைக்கு எதற்கு வெற்றிலை பாக்கு:
'செத்தவன் கைக்கு எதற்கு வெற்றிலை பாக்கு' பழமொழியின் பொருள் மிகவும் அர்த்தம் பொதிந்தது. அந்தக் காலத்தில் ஒருவர் வீட்டில் நடக்கும் திருமண விசேஷங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து விஷயத்தை கூறி அவசியம் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பது வழக்கம். ஆனால் இறந்தவன் கையில் வெற்றிலை பாக்கு அளித்தால் அவன் என்ன வரவா போகிறான்? இது காலம் கடந்த ஞானம் என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஒருவர் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய உதவியை அவர் இந்த உலகத்தை விட்டு சென்ற பின்பு அந்த உயிர் அற்ற உடலுக்கு செய்வதால் என்ன பயன்? பயனற்ற செயலை செய்வதை குறிக்க பயன்படுகிறது இப்பழமொழி.