

துஷ்டனைக் கண்டால் தூர விலகலாம்… ஆனால் பொறுப்புகளைக் கண்டால்? சின்னசின்னப் பொறுப்புகளைக்கூட ஏற்க மனம் தடுக்கிறதா அல்லது தயங்குகிறார்களா? அப்போ உங்களுக்கான அல்லது அவர்களுக்கான பாதை எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்...
பொறுப்புகள்: பொறுப்புகளைத் தவிர்ப்பதோ அல்லது அவற்றைப் பற்றிய பயத்தை வளர்த்துக்கொள்வதோ சிலருக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகத் (Temporary solution) தோன்றலாம். ஆனால், உண்மையில் அது அவர்களுக்குப் பல ஆழமான சவால்களை (deeper challenges) உருவாக்குகிறது. தனிநபர்கள் தங்கள் கடமைகளுக்குப் பயப்படும்போது அது வேலையிலோ, வீட்டிலோ அல்லது சமூகத்திலோ என்று எதுவாக இருந்தாலும்; இறுதியில் அவர்கள் யோசிக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் தாமதப்படுத்தும்.
இதனால் வாய்ப்புகளைத் தவறவிடுவார்கள், படிப்படியாக எதிர்காலத்தைப் பற்றிய பதட்டத்தை வளர்த்துக்கொள்வார்கள். இந்தத் தவிர்ப்பு(Avoiding) அவர்களுக்குள் குறைந்த தன்னம்பிக்கை(low confidence), குறைந்த உற்பத்தித்திறன்( reduced productivity) மற்றும் உறவுகளில் விரிசலுக்கு வழிவகுக்கும்.
இதனால் மற்றவர்கள் இந்த மனநிலையில் உள்ளவர்களை நம்பகத்தன்மை அற்றவர்களாகவோ(unreliable) அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ(disengaged) கருதக்கூடும். காலப்போக்கில் இத்தகைய மனநிலை அவர்களின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கலாம், நிதி நிலைத்தன்மையை பலவீனப்படுத்தலாம், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இறுதியில் இந்த மனநிலை அவர்களைப் பயத்தில் தொடரவைத்து ஏதோ ஒரு உதவியற்ற தனிமையில் இருப்பதாக உணர வைத்துவிடும்.
நாம் நம்மையே கொஞ்சம் மாற்றினால்…? நம்மை நாமே மாற்றிக்கொள்ள முதல்படி, சுய விழிப்புணர்வுதான் (Self awareness). பயம் எப்போது நமது தேர்வுகளில் தலையிடுகிறது என்பதை அறிந்துகொள்வது, ஆழ்மனத்துடன் செயல்படுவது, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது இந்தப் பொறுப்பற்ற உணர்வை உடைக்க உதவும். காலப்போக்கில் பொறுப்பு என்பது ஒரு அச்சுறுத்தலாக இல்லாமல், நமக்கான புதிய பாதையைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும்.
இந்தப் பொறுப்புகளை தைரியத்துடன் ஏற்றுக்கொள்வது நம் மன உறுதியை வளர்க்கிறது. அதாவது பணிகளை(tasks) நேரடியாக எதிர்கொள்ளும்போது, அது கடினமாக இருக்கும் போது கூட, சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும்(problem-solving skills), உணர்ச்சி வலிமையையும்(emotional strength) நம்முள் வளர்க்க உதவுகிறது.
பின் நம்முள் வளரும் பயமற்ற மனநிலை எந்த ஒரு காரியத்திலும் ரிஸ்க் எடுக்கவும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், தலைமைப் பதவிகளுக்கு வளரவும் அனுமதிக்கிறது.
செழிப்பாக வாழ்பவர்களுக்கும் (Successful persons) சிரமப்படுபவர்களுக்கும் (Strugglers) இடையில் உள்ள வேறுபாடே அவர்கள் ஒரு பொறுப்பை(Responsibility) எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காரணம் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சுமையாகப் பார்க்கமாட்டார்கள்; மாறாக அதைப் பரிணமிப்பதற்கான(evolve) ஒரு வாய்ப்பாக கணிப்பார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை எப்படி வெளிக்கொண்டு வரலாம்?: மற்றவர்களின் மனநிலையைக்(Mindset) கவனிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைக் கண்டறிய முடியும். தொடர்ந்து பொறுப்புகளைத் தவிர்ப்பவர்கள், சிறிய பணிகளைப் பற்றி கவலைப்படுபவர்கள் அல்லது குழுப்(Group) பணிகளிலிருந்து விலகிக்கொள்பவர்கள் பெரும்பாலும் பொறுப்பு தொடர்பான பயத்தின் அறிகுறிகளை வெளிகாட்டுபவர்கள்.
நண்பர்களாக அல்லது சக ஊழியர்களாக நாம் அவர்களுக்கு ஆதரவான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலமும், தேவைப்பட்டால் பணிகளைச் சிறிய படிகளாக அவர்களுக்குப் பிரித்து கொடுப்பதன் மூலமும்; அதோடு நேர்மறையான(Positive) ஊக்கத்தை அளிப்பதன் மூலமும் உதவலாம். தவறுகளைத் தோல்விகளாகக் கருதாமல், கற்றல் வாய்ப்புகளாக அவர்களுக்குள் உருவாக்குவது; படிப்படியாக அவர்களின் கண்ணோட்டத்தையே மாற்றும்.