
உங்களை உணராத இடங்களில் ஒதுங்கியே நில்லுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது. ஓர் உறவு தனக்கு முக்கியம் என்று ஒருவர் நினைத்திருந்தால் அந்த உறவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறியிருக்க மாட்டார்கள். உதாசீனப்படுத்துபவர்களை ஒரு நாளும் மன்னிப்பது சரியில்லை. நம்முடைய முக்கியத்துவம் உணராதவர்களை தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப் போவதால் அவமானம்தான் மிஞ்சும். நம்முடைய அருமையை உணராதவர்களிடம் அன்பைப்பெற கெஞ்ச வேண்டியதில்லை.
விதைத்ததுதான் முளைக்கும் என்பார்கள். விதைத்தது எதுவானாலும் அறுவடைக்கு வந்தே தீரும். அது விதையானாலும் சரி நாம் பிறருக்கு செய்யும் அவமதிப்பானாலும் சரி. நம்மை உணராத இடங்களில் இருந்து கடந்து செல்ல கற்றுக்கொள்வதுதான் நல்லது.
நம்மை வேண்டாம் என்று ஒதுக்கும் மனிதர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நம்முடைய பிரிவில் ஒருவேளை நம் நினைவுகள் அவர்களுக்கு வந்தால் அதை உணர்ந்து தேடிவரட்டும். இல்லை என்றால் விலகியே இருக்கட்டும். இதற்காக நம் மனதை காயப்படுத்திக் கொள்ளவேண்டாம்.
நம்மை உணராத இடங்களில் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. அன்பை கேட்டு வாங்காதீர்கள். நாம் அவர்களிடம் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லி அவர்களின் புரிதலை பெற முயற்சிக்காதீர்கள். யாரிடமும் நமக்கான நியாயத்தை எதிர்பார்த்து வாதிடுவதோ, வருத்தப்படுவதோ தேவையற்றது. ஏனென்றால் அவர்கள் வைத்திருப்பது அவர்களுக்கான நியாயத்தை மட்டும்தான்.
எனவே அதைப்பற்றி சிந்திப்பதை விட்டு விடுவது தான் நம் நிம்மதி நிலைக்க சிறந்த வழி. யாருடைய மாறுதல்களுக்காகவும் நம்மை வருத்திக் கொள்ளாமல் இருக்கப் பழகவேண்டும். இங்கு எந்த உறவும் நிரந்தரம் இல்லை என்பதையும் புரிந்துகொண்டால் நம்மை மதிக்காதவர்களிடமிருந்து தானாகவே ஒதுங்கி நிற்கும் குணம் வந்துவிடும்.
நம்மை ஒதுக்கும் சிலரிடம் நம்மைப் பற்றி புரியவைக்க கஷ்டப்படுவதைவிட அவர்களை ஒதுக்கிவிட்டு கடந்து செல்வதே நல்லது. ஒருவர் நம்மை புரிந்து கொள்ளாமல் இருப்பதை விட மிகவும் வருத்தமானது அவர்கள் நம்மை தவறாகப் புரிந்து கொண்டிருப்பதுதான். அவர்களின் எண்ணத்தை மாற்றுவது நம் வேலை அல்ல. கவலைப்படுவதை விட்டு நம் வேலையை பார்க்க வேண்டியதுதான்.
இது ஏன் எனக்கு நடக்கிறது என்று சிந்திப்பதற்கு பதிலாக இது எனக்கு என்ன கற்பிக்க நினைக்கிறது என்று நினைக்கும்போது எல்லாமே மாறிவிடும். மனம் புழுங்காது. எரிச்சலடையாது. நம்மை மதிக்காதவர்கள் இடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பழகிவிடுவோம். 'மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்ற ஔவையின் கூற்றை நினைவில் கொண்டால் எந்த வருத்தமும் ஏற்படாது.
நம்மை மதிக்காதவர்களுக்காக நம் நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர்களின் அன்பையோ, மரியாதையையோ, கவனிப்பையோ சம்பாதிக்க முயற்சி செய்யவேண்டாம். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நம் மனம் புண்படாமல் இருக்க உதவும்.
மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்தப்படுவதற்கு நாம் தகுதியானவர்தான் என்பதை அறிந்துகொண்டு அப்படி நடத்தாத எவரையும் நம் வாழ்விலிருந்து ஒதுக்கி விடுவதுதான் நல்லது.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!