
வாழ்க்கையில நாம எப்பவுமே ஒரே மாதிரியா இருக்க முடியாது. சில நேரம் இனிக்கும், சில நேரம் வலிக்கும், சில நேரங்கள் காயமாகும் இப்படித்தான் வாழ்கை எல்லாருக்கும் அமையும். ஆனா அதையும் தாண்டி தன்னோட மன தைரியத்தோடையும், உறுதியோடையும் முன்னேறி அடுத்த கட்டத்துக்கு போறது தான், நம்மள வாழவே கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்கிற பெரிய தண்டனை!
கஷ்டமான சூழ்நிலைகள்ல உடைந்து போவது சாதாரணம்தான், ஆனா அதிலே இருக்காம உறுதியோட முன்னேறி போறது தான் புத்திசாலித்தனம்! மத்தவங்க நமக்கு செய்ற கெடுதல்னாலதான் இங்க முக்காவாசி பேரு உடைஞ்சு போயிடறாங்க. உடையும் தருணத்தில் உறுதியாக போராட வேண்டும். நாம எங்கெங்கெல்லாம் உடைந்து போகிறோம், அதுல இருந்து எப்படி உறுதியோட வெளியே வருவது என்பத சின்னதா இந்த பதிவுல பாத்துருவோம்..!
துரோகம் (Betrayal):
தன் கூடவே இருந்து, தனக்கு நிகரானவன் இவன் மட்டுமே என்று நம்பிய பின், அவனே நமக்கு துரோகம் செய்யும் பொழுது, அப்போது நானாக இருந்தாலும் சரி நீங்களாக இருந்தாலும் சரி உடைந்துதான் போவோம். பணம், பதவி, ஆசை, ஏக்கம், போட்டி,பொறாமை, சுயநலம், அகங்காரம் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். துரோகம் செய்ய இவை எல்லாமே காரணமாகிறது.
துரோகம் செய்தவர்களை பழிவாங்க துரத்தாமல், அதிலிருந்து மீண்டு தனக்கான மனநிலையை பக்குவப்படுத்தி நிதானத்தோடு அடைய நினைக்கும் இலக்கை நோக்கி நாம் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். 'ஐயோ இப்படி பண்ணிட்டானே' என்று புலம்புவதை விட்டு, 'எனக்கு துரோகம் செய்தவனுக்கு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் இதுதான் நாம அவனுக்கு கொடுக்கிற பெரிய தண்டனை' என்று நாமே நமக்குள்ள சொல்லிக்கணும். அப்போதுதான் நாம் உடைந்து போகாமல் உறுதியோடு எழ முடியும். கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் வெல்வது உறுதி உறுதியோடு இருந்தால் மட்டுமே!
பண நஷ்டம் (Monetary Loss):
செய்யும் தொழிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு நாம் பெரும்பாலும் பல சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் பல இடங்களில் முதலீடுகளை செய்கிறோம். ஆனால் அது எதிர்பார்த்த அளவு எல்லோருக்கும் கை கூடுவதில்லை. எதிர்பாராத விதமாக முதலீடானது நஷ்டத்தில் முடியும்போது நமக்கு மிகப்பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படும்.
பண நஷ்டம் ஏற்படும் போது நாம் துவண்டு போகாமல் அதிலிருந்து எப்படி மேலே வர முடியும் என்பதை யோசிக்க வேண்டும். இப்போது உதாரணமாக ஒரு மளிகை கடையில் முதலீடு போட்டு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் நஷ்டமாக சென்றால், நாம் அதிலிருந்து மீண்டு நம் குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை சுருக்கிக் கொள்வது மிகவும் அவசியம். போதுமான சமமான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவு செய்து, பணத்தை சேமித்து மறுபடியும் உழைத்து முன்னேறினால் மட்டுமே இந்த பணநஷ்டத்திலிருந்து நாம் வெளியேற முடியும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டாலும், இது போன்று பிறர் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு அறிவுரை கூறுவதும் மிகவும் முக்கியமானது.
திடீர் மாற்றம் / இழப்பு (Sudden change / loss):
திடீரென்று நடக்கும் எதிர்பார்க்கக் கூடாத மாற்றங்களும், இழப்புகளும் நம்மை உடனே உடைத்து விடுகின்றன. உதாரணமாக தொழிலிலோ, குடும்ப சூழ்நிலைகளிலோ, உறவுக்காரர்களிடமோ அல்லது மிகவும் நெருக்கமானவர்களின் இழப்போ இதுபோன்ற சம்பவங்கள் உடைந்து போவதற்கு காரணமாக அமைகின்றன.
எதிர்பார்க்க கூடாத மாற்றங்களை கையாள நாம் மன உறுதியோடு இருக்க வேண்டும். பதட்டப்படாமல் பொறுமையுடனும், நிதானத்தோடும் சிந்தித்து அறிவார்ந்த பல பேரின் சிந்தனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை யோசிக்க வேண்டும். நெருக்கமானவர்களின் இழப்பு அனைவரையும் உடைத்து விடும், ஆனால் அவர்களின் நினைவுகள் நம்மை ஒருபோதும் உடைத்து விடாது என்ற மன உறுதி வேண்டும். ஆதலால் மன உறுதி வாழ்க்கையின் வெற்றி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
விமர்சனங்கள் (Reviews):
நாம என்ன செஞ்சாலும், இந்த ஊரு நம்மள பத்தி புரளி பேச தான் செய்யும். விமர்சனங்களுக்கு பலியாகாமல், வாழ்க்கைக்கு ஒளியாக வேண்டும். சொல்றவன் சொல்லிக்கிட்டு தான் இருப்பான். நமக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதுல நாம போய்க்கிட்டே இருக்கணும். உதாரணமாக, ஒருத்தன் மேடையில நல்லா பேசிட்டு கீழ வந்த போது அவனை பாராட்டினது நிறைய பேரு, ஆனா ஒரு சிலர் நீ இன்னும் கொஞ்சம் நல்லா பேசி இருக்கலாம், உன் காலு கையும் ஆடுறத நான் பார்த்தேன், மேடையில் இருந்து பேசும்போது உன்னோட வார்த்தை ஒழுங்கா வரல இப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. இத அவன் கேட்டு கேட்டு, ஒரு சந்தர்ப்பத்துல முதல் பரிசு பத்தாயிரம் கிடைக்கிற பேச்சு போட்டியில தன்னோட பேர அவன் கொடுக்கவே இல்ல. நல்ல விமர்சனங்களும் வரும் அதே போல கெட்ட விமர்சனங்களும் வரும். அதிலிருந்து நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு நாம முன்னேறி போய்கிட்டே இருக்கணும்.
கஷ்டமோ, நஷ்டமோ, போட்டியோ, பொறாமையோ உடையும் தருணத்திலயும் உறுதியோட இருக்கணும், இத எல்லாத்தையும் கடந்து வந்தோம்னா சிறப்பான வாழ்க்க நம்மள இரு கரம் கூப்பி அன்போட அழைக்கும்..!