
இந்த உலகம் ஒரு நாடக மேடை! அதில் மனிதர்கள் கதாநாயகர்கள். அப்படிப்பட்ட இந்த உலகத்தில், ஒரு சிலர் வெகுளித்தனமாக இருப்பதால் பல கட்டங்களில் பல பேரால் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது காயப்படுத்தப் படுகிறார்கள். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற வெகுளித்தனம் ஒரு தடையாகவே இருக்கிறது. வெகுளித்தனத்தால் நாம் பிறருக்கு மட்டுமே பயன்படும்படியாக இருப்போம். புத்திசாலித்தனத்தை கையில் எடுத்தால் நமக்கு நாமே பயன் பட முடியும். வெகுளித்தனத்தை கைவிட்டு புத்திசாலித்தனம் கலந்த உத்வேகத்தை கொண்டு வரும் 10 மந்திர விதிகள்.
1. பலவீனங்களை வெளியே கூறுவதை நிறுத்த வேண்டும்.
நம்மால் முடியும் என்ற உறுதியே நம்மை வெல்ல வைக்கிறது. பலவீனங்களை வெளியே அடிக்கடி காட்டத் தொடங்கும் போது, நாம் ஓர் திறந்த புத்தகம் போல் மாறிவிடுகிறோம். எல்லோரும் சுலபமாக படிக்கும் அளவிற்கு, ஆதலால் முடிந்தவரை நமது பலவீனங்களை வெளியே காட்டாமல், தன்னம்பிக்கையோடு இருப்பதற்கு புத்திசாலித்தனத்தோடு முன்கூட்டியே பலவீனங்களை போக்க பயிற்சி எடுக்க வேண்டும்.
2. சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துவது.
பேச்சு என்பது ஒரு கலை, அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசுவது என்பது தவறு. சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் தங்களின் பேச்சு வழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் மற்றவர் பேசுவதை கவனிக்க வேண்டும். பின்பு தான் யோசித்துப் பேச வேண்டும், இதனை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
3. உங்களின் மதிப்பு, முதலில் உங்களுக்கு மட்டுமே சொந்தம். தன்னை இரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
மரியாதை என்பது நாம் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல, முதலில் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ள வேண்டும். என்னால் முடியும், இது சாத்தியம், நான் எப்போதுமே அழகுதான் என்று ஒரு நேர்மையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். பிறரோடு தன்னை எப்போதும் ஒப்பிட்டு பார்க்க கூடாது.
4. எதிர்ப்புதிரான கேள்விகளை சமர்த்தியமாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்மறையான கேள்விகள் வரும் பொழுது, நாம் கோபப்படாமல் நிதானத்தோடும் பொறுமையோடும் புத்திசாலித்தனத்தோடு பதில் அளிக்க வேண்டும். நீ எப்பவுமே தோத்துக்கிட்டே இருக்க என்று கூறும்போது, அதற்கு நீங்கள் புன்னகையோடு, எனது வெற்றிகள் உங்கள் கண்களுக்கு தெரியாத போது, தோல்விகள் மட்டும் தானே உங்களுக்கு தெரிய போகிறது. என்று கூறுவதே புத்திசாலித்தனம்.
5. சுயநலத்தோடு பழகுபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
தனக்கு தன் நலம்தான் முக்கியம் பிறர் எப்படி போனால் எனக்கு என்ன என்று இருக்கும் நபர்களிடமிருந்து நாம் எப்போதும் விலகி இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் பழகப் பழக நமக்கும் அந்த சுயநலம் ஒட்டிக் கொள்ளும். முடிந்த அளவிற்கு அவர்களிடமிருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
6. உபயோகப்படும் ஏமாளியாக இருக்கக் கூடாது.
தன்னை ஒருவர் அவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக பழகும் போது, நாம் அவரை விட்டு விலகி இருப்பதுதான் புத்திசாலித்தனம். இப்படிப்பட்டவர்கள் தன் நலத்திற்காக பிறரை ஏமாற்றி பழகுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நாம் நட்புக் கொள்வதை தவிர்க்க வேண்டும். காரணத்திற்காக பழகுகிறான் என்ற காரணம் தெரிந்ததும் விலகுவதுதான் சிறந்த காரணம்.
7. பொறுமையுடனும், நிதானமுடனும் செயல்படுங்கள்.
எந்த ஒரு காரியத்திலும் செயலிலும் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். பதறிய காரியம் சிதறும்.பொறுமையாக இருந்தால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
8. பேசுவதற்கு முன், வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும்.
வார்த்தை என்பது ஒருவனை உயர்த்தும், அதே ஒரு சில சமயம் ஒருவனே கொன்றே போட்டுவிடும். ஆதலால் வார்த்தைகளில் கவனம் வேண்டும். கல்லால் பட்ட காயம் கூட ஆறிவிடும், சொல்லால் பட்ட காயம் எப்பொழுதும் ஆறாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
9. விழிப்புடன் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
வருமுன் காப்பதே சிறந்தது. அதுபோல் விழிப்புணர்வோடு செயல்படுவது தான் வருமுன் பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது நோய்களுக்கு மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கும் சேர்த்து தான்.
10. இலட்சியம் இல்லாதவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.
கோழிக்குஞ்சு கூட்டத்தில் இருக்கும் கழுகு குஞ்சுக்கு தெரியாது நாம் ஒரு கழுகு என்று, அதுபோல்தான் இங்கு பல பேர் இலட்சியம் இல்லாதவர்கள் கூட்டத்தில் இருக்கும்போது, தமது திறமைகளை வெளிக்காட்ட முயற்சிப்பதில்லை. ஊக்குவிக்கும் நபர்களிடம் நாம் நட்பு பாராட்ட வேண்டும். நமக்கான இலட்சியங்களை தேர்ந்தெடுத்து அதற்கான வழியில் முன்னேற வேண்டும்.
வெகுளித்தனத்தால் வாழ்க்கை வெறுமனே செல்வதை விட, புத்திசாலித்தனத்தால் வாழ்க்கை சிறப்பாக செல்வதே சிறந்தது..!