நம் அனைவரின் மனதிற்குள்ளும் எப்பொழுதும் ஒரு எண்ணம் அல்லது ஆசை இருந்துகொண்டேயிருக்கும். அது, நன்கு படித்து முதல் ரேங்க் வாங்கணும் அல்லது அலுவலகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி உயர் பதவியை அடையணும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த ஆசைக்கு இன்னொரு பெயர் கனவு.
நாம் உயிரோடு வாழ்வதற்கு உணவு உட்கொள்ளுதல் அவசியம் என்பது போல் நம் கனவுகள் நிஜமாக செயலில் இறங்குவது முக்கியம். செயலற்ற கனவு உடைக்கப்படும். ஒருபோதும் நிஜமாகாது. நம் கனவு நிஜமாக, விரும்பியதை அடைய, உடனடியாக செயலில் இறங்கி, என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக வாழ்க்கையில் எடுத்த தொழிலை சிறப்பாக செய்து வெற்றியாளனாக வாழ்ந்துகொண்டிருப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. கடின உழைப்பு மற்றும் பல தியாகங்களை செய்தே ஒருவர் வெற்றிகரமான நிலைக்கு சென்றடைய முடியும்.
வெற்றி பெற்ற சிலரைப் பார்க்கும்போது, "நானும் அதே அளவு கடின உழைப்பை நாள் தோறும் செய்கிறேன். ஆனால் அந்த அளவுக்கு செயல் திறனின் வெளிப்பாடு இருப்பதில்லையே", என பிறர் நினைப்பதுண்டு. இங்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல. செய்யும் வேலையின் தன்மை எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் ஸ்ட்ரெஸ் உண்டாவது இயல்பு. ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க, முடிக்க வேண்டிய வேலையை பகுதி பகுதிகளாக பிரித்துக்கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய வேலையில் முழு கவனம் செலுத்தி முதலில் முடித்து விட வேண்டும். பிறகு அந்த இடத்தை விட்டு அகன்று, வராண்டாவிலோ அல்லது மரம் செடி உள்ள இடத்திலோ பத்து நிமிடம் நடந்து விட்டு வந்து மீண்டும் வேலையை தொடரலாம்.
இப்படி செய்வதால் மூளையும் உடலும் ரிலாக்ஸாகி மீண்டும் செயல் புரிய தயாராகிவிடும். இவ்வாறு ஒவ்வொரு பகுதி வேலையை முடித்ததும், பத்து நிமிடம் ஓய்வறைக்கு சென்று மைண்ட்ஃபுல் மெடிடேஷன் செய்வது பின் வேலையை தொடர்வது, மீண்டும் ஒரு இடைவெளியில்,
அடுத்த பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சக ஊழியர்களிடம் அலுவலக தொடர்பில்லாத, நகைச்சுவையான, சமூக அக்கறையுள்ள சில விஷயங்களைப் பேசிவிட்டு வருவது என மனதுக்கு ஓய்வு கொடுத்து வேலையை செய்து முடிக்கும்போது அந்த வேலை தரமானதாக செய்து முடிக்கப்படும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும், இரவில் போதுமான அளவு தரமான தூக்கமும் பெறும்போது மூளையும் உடல் தசைகளும் இழந்த சக்தியை மீண்டும் பெற்றுவிடும்.
வேலையை முடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனதில் இறுத்தி, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களின் உடலும் மனமும் அசதிக்குள்ளாகுமே தவிர முடித்த வேலையில் தரமிருக்காது. உதாரணமாக, ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடிக்க வேண்டும் என நினைப்பது முடியாத காரியம். புத்தகத்தை படிக்க ஆரம்பித்து, இடை விடாமல் தினமும் கொஞ்சம் கொஞ்சம் படித்து வந்தால் நம் விருப்பம் வெற்றிகரமாக நிறைவேறி விடும்.
உழைப்பும் ஓய்வும் தேவையான விகிதத்தில் இணைந்து செயல்படும் போது வெற்றி உங்கள் கையில்!