
நமது மூளை இயக்கம் நல்ல ஊக்கம் பெற்று இயங்கினால் நமது வாழ்வு இன்னும் சிறக்கும். அதற்கான சின்னச் சின்ன வழிகள் ஏராளம் உள்ளன.
முதலில் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அதுவே முதல் படியாகும். மூளை என்பது ஒரு அடர்ந்த காடு போல. அங்கே அபூர்வமான உயிர் காக்கும் மூலிகைகள் உள்ளன. ஆகவே அவற்றை முதலில் நாம் இனம் காண வேண்டும். பின்னர் அவற்றைப் பயன்படுத்தலாம்.
மூளையில் நூறாயிரம் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் .... எண்ணற்ற நியூரான்கள் உள்ளன. அவற்றின் செயல் திறம் மலைக்க வைக்கும். ஆகவே மூளையைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மூளை ஒருவரின் எடையில் சுமார் 2 விழுக்காடு அளவே தான் உள்ளது. ஆனால் அது 20 விழுக்காடு ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக் கொள்கிறது. ஆகவே அதை நலம் பெற, இயங்க வைக்க இந்த ஊட்டச்சத்தைத் தவறாது அளிக்க வேண்டும்.
முதலில் தேவையற்ற உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அதை 'நோக அடிக்கக்’ கூடாது. ஆகவே ஊட்டச்சத்து பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு அவற்றை நமது சமச்சீர் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை நமது உடல் அங்கங்களில் முக்கியமான பகுதி. ஆகவே உடல் பயிற்சி செய்யும் போது அதுவும் நன்மை அடைகிறது. ஆகவே உடல்பயிற்சியை ஒரு போதும் விடக்கூடாது. நடைப்பயிற்சியால் உடல் நலம் பெறும் என்றால் மூளையும் அதில் அடங்கியது என்பதால் மூளையும் வலிமை பெறும் ஒரு பெரிய ரகசியம் எண்ணங்களைப் பற்றியது.
ஒரு நாளைக்கு சுமார் நாற்பதினாயிரம் எண்ணங்களை ஒவ்வொருவரும் எண்ணுகிறோம். இந்த எண்ணத்தில் பல தரங்கள் உண்டு. அனைத்துமே வலிமையானவை அல்ல. ஆகவே பாஸிடிவ் திங்கிங் எனப்படும் ஆக்கபூர்வ சிந்தனையை அதிகப்படுத்தல் வேண்டும். மன அழுத்தமும் கவலையும் நியூரான்களைக் கொல்வதால் எதிர்மறை எண்ணங்களை விலக்க வேண்டும். நியூரான்கள் அழிந்துபடும் போது புது நியூரான்கள்களை இந்த மன அழுத்தமும் கவலையும் உருவாக்க விடுவதில்லை.
மூளையில் புதிய நியூரான்கள் தோன்றும் போது அவற்றை நல்ல விதமாக உபயோகிப்பது நம் கையில் தான் இருக்கிறது. அதை எவ்வளவு காலம் நமது மூளையில் பாதுகாக்கிறோம் என்பதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆகவே பயனுள்ள புதிய நல்ல செயல்களைச் செய்து மூளைக்கான சவால் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். புதிய திட்டங்கள், புதிய செயல்பாடுகள் ஆகியவை வெற்றிக்கான வழிகளாகும்.
மனிதனின் இறுதி வரை கூட வருவது அவனது கல்வியே ஆகும். படிக்க வேண்டும். புதிதாக நிறையப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் மூளை ஆக்கபூர்வமாக வளர்கிறது. வயது ஒரு தடையல்ல. அந்தஸ்து, ஆண் பெண் என்பதெல்லாம் ஒரு தடையல்ல. புதியனவற்றைக் கற்பதால் நாளும் நாம் முன்னேறுகிறோம். இந்த அதிசயமான பூமியில் நம்மை நாமே வளர்த்துக் கொள்ளலாம் என்பது மறுக்க முடியாத ஒரு அதிசய உண்மை!
புதிய சூழ்நிலைகளை உற்றுப் பார்க்க வேண்டும். ஓர்ந்து தெளிய வேண்டும். பல புதிய இடங்களுக்குப் பயணப்படுவது புதிய சூழ்நிலைகளைப் பார்க்க உதவி செய்யும். எல்லாவற்றையும் அறிவால் ஆராய்ந்து உணர பயணம் ஒரு அபாரமான நல்ல வழி.
ஒருவர் தனது மூளையை ஒரு போதும் அடகு வைக்கக் கூடாது. அரசியல்வாதிகள், நல்லவர் போல நம்மிடையே நடமாடுவோர், தேவையற்று நேரத்தை வீணடிப்போர் ஆகியோரின் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க நேர்ந்தாலும் கூட அவற்றை நமது மூளைத் திறனால் ஆராய்ந்து தெளிய வேண்டும். ஒரு போதும் ஆமாம் சாமியாக ஆகி விடக் கூடாது. இது நமது மூளைக்கு மட்டும் கெடுதல் அல்ல, நாம் வாழும் சமூகத்திற்கே கூட கெடுதலாக அமையக் கூடும்.
நாம் சமூகத்தில் கூட்டாக இணைந்து வாழ்பவர்கள் என்பதால் நல்லோர் இணக்கத்தை நாட வேண்டும். இது ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தரும்; மூளையை வளர்க்கும். நல்லவர்களை நண்பர்களாகக் கொள்பவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமே இல்லை!
சிரியுங்கள், சிரித்து மகிழுங்கள். வாழ்க்கை என்னும் மஹா பயணத்தில் நாமும் சிரிப்போம்; நமது நல்ல பண்பாலும் நகைச்சுவை மனதாலும் அனைவரையும் சிரிக்க வைப்போம். மலர்ந்த மூளையை எப்போதும் கொண்டிருக்க இதுவே வழி.
இசை கேட்பது, இசைப்பது போன்ற பல நல்ல வழிகள் மனிதர்களுக்கே மட்டும் கிடைக்கக் கூடிய அரிய பேறுகளாகும். இதை நல்ல முறையில் பயன்படுத்தினால் மன நிம்மதியும் ஆரோக்கியமும் நீண்ட வாழ்நாளும் அடைவது திண்ணம்.
மூச்சுள்ளவரை மூளை இயக்கம் திறம்பட இருக்க இவை சின்னச் சின்ன வழிகள் தாம்! ஆனால் பலனோ பெரிய அளவில் இருக்கும்.
வாழ்த்துக்கள் வளம் பெற!