
தற்காலத்தில் ஒவ்வொரு நொடியும் நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பலரும் அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைத் திறந்தால் அதில் பெரும்பாலும் வரிசை கட்டி நிற்பது அறிவுரைகள்தான். பலரும் தங்களின் சொந்த கதை சோகக் கதைகளை அறிவுரையாக ஸ்டேட்டஸில் வைக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்புவரை பெரியவர்கள்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவார்கள். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நன்றாக வாழவேண்டும் என்ற அறஉணர்வே இதற்குக் காரணமாக அமையும். தாத்தா தன் பேரனுக்கு உரிய சமயத்தில் அறிவுரைகளை வழங்குவார். அப்பா தன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ அறிவுரைகளை வழங்குவார். ஒவ்வொரு அறிவுரையும் அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அமையும். ஆனால் தற்போது யார் வேண்டுமாலும் யாருக்கும் அறிவுரைகளை வழங்குவது என்பது சகஜமாகிவிட்டது.
யாராவது உரிய ஆலோசனை கேட்டால் மட்டுமே அறிவுரைகளை வழங்க வேண்டும். நொடிக்கு நொடி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தால் அதற்கு உரிய மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய்விடும். மேலும் அத்தகைய அறிவுரை வழங்கும் அன்பர்கள் மீது ஒருவித எரிச்சல் உணர்வே தோன்றும்.
தற்காலத்தில் பலரும் விவரமானவர்களாகவே இருக்கிறார்கள். யாருக்கும் அறிவரை என்பது தேவையில்லாததாகவே தோன்றுகிறது. இன்று பலர் தங்கள் நல்ல நட்புகளை இழக்க அவர்கள் தேவையின்றி வழங்கும் அறிவுரையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒருவர் தனது முதல் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி உயர்படிப்பு படிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவர் தனது நெருங்கிய நண்பரிடம் தனது இரண்டாவது மகனையும் வெளிநாட்டிற்கு அனுப்பி உயர்படிப்பு படிக்க வைக்க இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார்.
அவருடைய நெருங்கிய நண்பர் அவர்மீது உள்ள நல்ல எண்ணத்தின் காரணமாக “முதல் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டாய். சரி. இரண்டாவது மகனையாவது இங்கேயே படிக்க வைத்து இங்கேயே இருக்கும்படி பார்த்துக்கொள். உனது வயதான காலத்தில் ஒரு மகனாவது உன்னுடன் இருந்தால்தான் நல்லது” என்று அறிவுரை வழங்கினார். நெருங்கிய நண்பர் வழங்கிய அறிவுரை மிகவும் சரியானது. ஆனால் இது அவருடைய நண்பருக்குப் பிடிக்கவில்லை. அறிவுரை வழங்கிய நெருங்கிய நண்பரின் நட்பை உடனே துண்டித்துவிட்டார்.
அவரவர் செய்யும் செயல்கள் அவரவர்களுக்குச் சரியானதாகவேபடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நல்லதோ கெட்டதோ அதை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்குச் சரியானதாகவே தோன்றும். ஆனால் அது பிறருக்கு தவறாகத் தோன்றலாம். ஒவ்வொருவருடைய வாழ்வியல் சூழ்நிலையும் வெவ்வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் பிறர் தனது முடிவைத் தவறு என்று அறிவுரைகளின் மூலம் அறிவித்தால் அவர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்டேட்ஸ் முதலானவற்றில் வரும் அறிவுரைகளை தற்காலத்தில் யாருமே படிப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதாவது கோபப்பட்டால்தான் கோபத்திற்கு ஒரு மதிப்பு இருக்கும். அதேபோல எப்போதாவது உரிய நபரிடமிருந்து கிடைக்கும் அறிவுரைக்கும் மதிப்பு இருக்கும். எனவே நண்பர்களே!
யாருக்கும் இனி அறிவுரைகளை பரப்பாதீர்கள். யாருக்கும் அறிவுரைகளைக் கூறாதீர்கள். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் பிறருடைய வெறுப்பிற்கு ஆளாவதையும் நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.