
படிக்கும் பொழுது ஏற்படும் கவனச்சிதறல்களை குறைப்பதற்கு முதலில் படிப்பதற்கென்று ஒரு தனி இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொள்ள வேண்டும். படிப்பிற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். படிப்பு சூழலை மேம்படுத்துவதற்கு ஒரு இடம் அல்லது அறையை தேர்ந்தெடுத்து, எந்தவிதமான சத்தமும் இல்லாமல் அமைதியான சூழலில் அமர்ந்து படிக்கும் பொழுது நம் கவனம் முழுவதும் படிப்பில் செல்லும்.
நாம் படிக்கும் அறையில் மின்னணு சாதனங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொலைபேசியை சைலன்ட் மோடில் போட்டுவிடவும். தனி அறை அல்லது நூலகம் போன்ற இடத்தை தேர்வு செய்து படிப்பில் கவனம் செலுத்தலாம்.
தொடர்ந்து கவனம் சிதறாமல் இருப்பதற்கு படிக்கத் தூண்டும் எளிமையான பகுதிகளை முதலில் படிக்கவேண்டும். இரவில் படிப்பதைவிட அதிகாலை நேரத்தில் படிப்பது நல்லது. அதிகாலையில் படிப்பது, படிப்பவற்றை மனதில் எளிதில் பதிய வைக்க உதவுவதுடன் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும்.
நேர மேலாண்மை என்பது கவனச்சிதறலை தடுக்க உதவும் சிறந்த வழி. படிப்பதற்கென்று ஒரு நேர அட்டவணையை உருவாக்கி, அந்த அட்டவணையை பின்பற்றவும். அதன் மூலம் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும். 'என்னால் முடியும்' என்ற நேர்மறை எண்ணம் கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகரிக்க உதவும்.
ஒவ்வொரு மணி நேர படிப்பிற்குப் பிறகும் 20 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது. அந்த நேரத்தில் தொலைபேசி, கணினி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்காமல் எழுந்து காலாற நடப்பதும், சிறிது தண்ணீர் பருகுவதும் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.
இலக்குகளை நிர்ணயிப்பதும் கவனச்சிதறலை போக்க உதவும். படிக்க தொடங்குவதற்கு முன்பு ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு படிப்பது அவசியம். உதாரணத்திற்கு இன்று இந்த அத்தியாயங்களை (chapters) முடிக்க வேண்டும் என்று மனதிற்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டு படிக்க உட்காரலாம். அதேபோல் ஒரு பெரிய பாடத்தை சிறிய பகுதிகளாக பிரித்து படிப்பது, படிப்பில் கவனம் செலுத்த உதவுவதுடன், தகவல் களையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
சில மாணவர்கள் அன்றைய பாடத்தை அன்றே படிக்காமல் தேர்வின் பொழுது கடைசி நேரத்தில் அமர்ந்து விறுவிறு என்று படிப்பார்கள். அப்போது அவர்களுடைய முழு கவனமும் படிப்பில் மட்டும் தான் இருக்கும். அது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? நம் கவனத்தை நாம் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சிறந்த வழி குறித்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். அவ்வளவுதான்!
படிப்பில் ஈடுபடும் பொழுது ஒரே இடத்தில் அமர்ந்து படிக்காமல் சிறிது இடைவெளி விட்டு எழுந்து நடந்து, சிறிது உடற்பயிற்சி செய்யலாம். இது நம் கவனத்தை மீட்டெடுக்க உதவும். சத்தான உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதும் நம் கவனம் மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்த உதவும். முக்கியமாக போதுமான அளவு தூக்கம் அவசியம்.
படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் போதுமான அளவு தூக்கம், குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது அவசியம். அப்பொழுது தான் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன், உற்சாகமாக தங்கள் பணியை செய்ய ஒத்துழைக்கும்.
மொபைல் ஃபோன் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் நம் கவனத்தை சிதறடிக்கும். அவற்றைப் பார்க்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாமல் போவதுடன், நம்முடைய இலக்கை அடைய முடியாமல் போய்விடும். சாதாரண மெசேஜ்தான் வந்திருக்கும். ஆனால் அது என்ன மெசேஜ் என்று பார்த்துவிட்டு அதோடு நின்றுவிடத் தோன்றாது. அதன் பிறகும் வேறு ஏதாவது நோட்டிபிகேஷன் வந்துள்ளதா என்று பார்ப்பதும், பேஸ்புக், வாட்ஸ் அப் என்று சென்று விடுவதுமாக இருக்கத் தோன்றும்.
எனவே தொலைபேசி போன்ற மின்னணு சாதனங்களை அணைத்து விடுவது நல்லது. அல்லது சைலன்ட் மோடில் போட்டு வேறு இடத்தில் வைத்து விடுவது நம் கவனத்தை சிதறடிக்காமல் படிக்க உதவும்.