
ஒவ்வொரு வருடம் தொடக்கத்திலும், நாம் ஒவ்வொருவரும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை செய்வதற்கான சத்தியத்தை செய்வோம். அது நமது இலட்சியமாக இருக்கலாம், ஒரு வேலையை செய்து முடிப்பதாக இருக்கலாம், ஒரு பொருளை வாங்குவதாக இருக்கலாம், பாடங்களை கற்றுக் கொள்வதாக இருக்கலாம், கெட்ட பழக்கங்களை கைவிடுவதாகவும் இருக்கலாம், உடல் பலத்தை மேம்படுவதற்கான உடற்பயிற்சியாகவும் இருக்கலாம். என்று இப்படி ஒவ்வொருவரும் தங்களின் நிலைமைக்கு ஏற்றார் போல் இலக்குகளையும் அதன் தன்மைகளையும் தீர்மானித்து வைத்துக் கொள்கிறோம்.
ஒரு சிலரே இதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் சபதம் எடுத்த புத்தாண்டு நாளன்று மட்டுமே இந்த பழக்கங்களை கடைபிடிக்கிறார்கள். மற்ற நாள்களில் மறந்து விடுகிறார்கள். இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் தான் உள்ளது. இனியும் வீழாதே... எடுத்த சபதத்தை நிறைவேற்ற இதுவே இந்த ஆண்டின் இறுதியும், உறுதியுமான தருணம்.
Peak End Rules: வெற்றி பெற உனக்கான இறுதி தருணத்திற்கான விதிகள்..!
சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை இப்போதே தொடங்கு!
உங்களின் இலக்கை நோக்கிய பயணத்திற்கு இப்போதே தயாராகுங்கள். சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை முதலில் தொடங்குங்கள். படித்து தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென்ற குறிக்கோள் இருந்தால் இப்போதே படிக்க ஆரம்பிங்கள். உடலை வலிமையாக்க எண்ணினால் உடற்பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள். காலையில் 5 மணிக்கு எழுங்கள். சின்ன சின்னதாக எழுதுவது, வரைவது, நடப்பது, ஓடுவது, தியானம் செய்வது, புத்தகம் வாசிப்பது, தீங்கற்ற உணவுகளை தவிர்ப்பது, மூச்சுப் பயிற்சி செய்வது. இப்படி ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிங்கள். இவை அனைத்தையும் இப்போதே தொடங்குங்கள்.
விழிப்புடன் செய்து முடியுங்கள்:
நாளை நாளை என்று எந்த ஒரு விஷயங்களையும் தட்டிக் கழிக்காதீர்கள். இன்று நாம் எடுக்கும் அல்லது நாம் செய்யும் செயல்தான் நாளை நாம் யார் என்பதை காட்டும். எனவே முன்னேற்றத்திற்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியம் அந்த முயற்சி எப்போதும் பின்னடைவை சந்திக்கக் கூடாது. முயற்சியும் முழு முயற்சியாக இருக்க வேண்டும் . விழிப்புடனும், நேர்மையுடனும், விருப்பத்துடனும் செயலாற்ற வேண்டும். விரும்பியது கிடைப்பதற்கு முதலில் நாம் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். உழைப்பதற்கு தயார் என்றால், நாம் போகும் பாதையும் ஒளி வீசக் கூடும்.
எண்ணங்களை செம்மைப்படுத்த வேண்டும்:
எண்ணங்கள் தான் நமது வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. எண்ணம் போல் தான் வாழ்க்கை அமைகின்றன. நல்லவற்றையே சிந்திக்க வேண்டும், கெட்ட எண்ணங்களை விட்டொழிக்க நல்ல சிந்தனைகளை புகுத்த வேண்டும். உதாரணமாக கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, அதனை விட்டொழிப்பதற்கு; மனதை அமைதி படுத்த வேண்டும், மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூற வேண்டும், நண்பர்களுடன் கலந்து பேச வேண்டும், இலக்கை நோக்கிய சவால்களை செய்ய வேண்டும் இப்படி நாம் நம் மனதை வேறொரு பக்கம் திசை திருப்ப வேண்டும். நாம் நினைத்தால் மட்டுமே நமது எண்ணங்களை செம்மை படுத்த முடியும். அறிவுரைகளும், ஆக்கங்களும் அப்போது கேட்பதற்கு வேண்டுமானால் உந்து சக்தியாக இருக்கலாம், ஆனால் எண்ணங்களை செம்மைப்படுத்துவது நமது ஒழுக்கத்திலேயே உள்ளது.
நேரத்தை கையாள வேண்டும்:
வாழ்வில் நேர மேலாண்மை மிகவும் முக்கியமானவை. காலத்தால் செய்த உதவிகளும், செயல்களும் தான் நாளடைவில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. நேரத்தை சரியான கால இடைவெளியில் அதாவது இப்போது எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை அல்லது முன்னேற்றத்திற்கான செயல்களை இந்த நேரத்திற்குள் செய்து முடிப்பேன் என்ற ஒரு திட்டத்தை தீட்டுங்கள். இந்த நேரத்திற்குள் தான் படிப்பது, எழுதுவது, உடற்பயிற்சி செய்வது, என்ற ஒரு அட்டவணையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு இடர்பாடுகளாக இருக்கும் மொபைல், டிவி, பொழுதுபோக்கு அம்சங்களை பார்ப்பதை தவிருங்கள். நேரத்தில் கவனம் வைப்பதாக எண்ணி ஒருபோதும் குறுக்கு வழியில் செல்லக்கூடாது.
அப்புறம் என்ன நண்பர்களே... இனியும் இந்த ரெண்டரை மாசத்தை வீணாக்க வேண்டாம்.
நமக்கான நேரத்தை பயன்படுத்தி, நமக்கான வெற்றியை நாமதான் அடையனும்... பொழுதுபோக்குகளை புறந்தள்ளி ஒதுக்கி வையுங்கள் வாழ்க்கையில் ஓங்கி நிற்க வேண்டும் என்றால்..!