
அது 1881 ஆம் ஆண்டு. அந்தக் கல்லூரிப் பேராசிரியர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்!
"இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்பது உண்மையா?"
மாணவர்கள் மத்தியில் சற்று நேரம் அமைதி.
ஒரு மாணவர் தைரியமாக எழுந்து, "ஆம்! அதில் சந்தேகப்பட ஏதுமில்லையே!" என்கிறார்!
"சரி! அப்படியானால், சாத்தானையும், அதாவது கெட்டவற்றையும் அவர்தான் படைத்தாரா?" என்று கேட்கிறார் பேராசிரியர்.
சற்றும் தாமதிக்காமல், அந்த மாணவர், "சார்! நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாமா?" என்று கேட்க,
"ஒய் நாட்! தாராளமாகக் கேட்கலாம். இது போன்ற நிலையைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். கேள்!"
"நன்றி சார்! 'குளிர்' என்ற ஒன்று உண்டா?"
"நீ ஏதோ வித்தியாசமாகக் கேட்கப் போகிறாய் என்று எதிர் பார்த்தேன். நீயோ மிகச் சாதாரணமாகக் கேட்கிறாய். குளிர் உண்டே... எங்களுக்கெல்லாம் குளிர்கிறது! ஏன்? உனக்கும் குளிருமே. நீ அதனை உணரவில்லையா?" என்கிறார் பேராசிரியர்.
"சாரி சார்! நீங்கள் தவறான விடையளிக்கிறீர்கள்! குளிர் என்பது தனியான ஒன்றல்ல. வெப்பம் முழுதுமாக மறைந்துவிட்ட ஒரு நிலைதான் குளிர்!"
பேராசிரியர் அதிர்ந்து போகிறார். அவர் முகத்தில் ஈயாடவில்லை!
"சார்! தவறாக எண்ண வேண்டாம். தங்களிடம் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்! கேட்கலாமா?" மாணவர் கேட்க, பேச நாவெழும்பாத நிலையில் 'கேள்' என்று பேராசிரியர் சைகையில் காட்ட, மாணவர் கேட்கிறார்...
" உலகில் 'இருள்' என்ற ஒன்று உண்டா?"
"உண்டே!" என்று பேராசிரியர் மென்று விழுங்க,
"மறுபடியும் தவறாகப் பதிலளிக்கிறீர்கள் சார். உலகில் 'இருள்' என்று ஏதுமில்லை. வெளிச்சம் மங்கி முழுவதுமாக இல்லாது போகும் நிலையே இருளாகும்!" என்ற மாணவரைப் பார்த்து பேராசியரே வியந்து நிற்கிறார்!
மாணவரே மேலும் பேசுகிறார்... "அதனால்தான் நாம் 'ஹீட் அன்ட் லைட்' பற்றிப் படிக்கிறோம். குளிரைப்பற்றியோ, இருளைப்பற்றியோ படிப்பதில்லை. இதே போலத்தான் சாத்தான் என்றோ, கெட்டவை என்றோ ஏதுமில்லை. மனதில் உண்மையான அன்பும், நம்பிக்கையும், கடவுள் மீது அசைக்க முடியாத பற்றும் கொள்ளாத நிலையே 'ஈவிள்' எனப்படுகிறது!
மாணவரின் விளக்கத்தைக் கேட்டு வகுப்பே ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டுகிறது! அதில் பேராசிரியர்தான் முதன்மையானவர்.
அந்த மாணவர்தான் நமது விவேகானந்தர்!
தான் வாழ்ந்த 39 ஆண்டுகளுக்குள்ளாக, இந்து மதத்தின் உயர்வினை உலகுக்குப் பறை சாற்றியவர். 1863 ஜனவரி 12 ல் பிறந்து, 1902 ஜூலை 4ல் உயிர் நீத்தவர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலகச் சமய மாநாட்டில் இவர் ஆற்றிய உரை, உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது!