

சிரிப்பு அனைவருக்கும் பொதுவானது. சிரிப்பு பல விதமானவை. நாம் ஏன் சிரித்து வாழ வேண்டும் தெரியுமா?(Laughter the medicine of life) நல்ல ஆரோக்கியத்தின் மாமருந்து அதுதான்.
இப்பொழுதும் சினிமா பார்க்கும் பொழுது, நகைச்சுவையைப் பார்த்துச் சிரிக்காமல் இருப்பதில்லை. சிலரின் நகைச்சுவையை ரசித்துப் பார்ப்போர் ஏராளம் உண்டு. பண்டைக்காலத் தமிழ் மன்னர்கள், தன்னைச் சிரிக்க வைப்பதற்காக 'விகடகவிகளை'த் தமது ஆஸ்தானங்களில் வைத்திருந்தனர் என்று படித்திருக்கிறோம். ஆகவே, மனித சமுதாயத்தில் சிரிப்பு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அவரவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே சிரிக்கிறோம். நமது உடலில் எந்த உறுப்பும் நம்மைத் தானாகச் சிரிக்க வைக்கவில்லை. ஆனால், மெய்க்கூச்சலை நமக்கு உண்டு பண்ணும் போது சிரிக்கிறோம்; எனினும், இந்தச் சிரிப்பு 'செயற்கைச் சிரிப்பு' என்னும் சாரம் இல்லாத சிரிப்பு என்றுதான் கூற வேண்டும்.
நமக்குச் சிரிப்பு எப்படி வருகிறது என்றால், சில உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக நாம் வாய்விட்டுச் சிரிக்கிறோம்; உள்ளத்தைக் கொட்டிச் சிரிக்கிறோம். எப்பொழுதோ ஒரு வித்தியாசமான கோணத்தில் ஒன்றைப் பார்த்த பார்வை, அவற்றைப் பற்றிய நினைவு வரும்போது ஏதேனும் ஒன்றைப் பற்றி கற்பனை செய்தல் அல்லது சிந்தித்தல் ஆகியவை உணர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. எனவே, சிரிப்பை உண்டு பண்ணுவதற்கு நமக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த 'ஏதேனும் ஒன்றுக்குத்' தான் சிரிப்பை உண்டு பண்ணும் சக்தி இருக்கிறது.
சிரிப்பு என்பது ஒரு விதமான சமுதாய உணர்வு சம்பந்தப்பட்ட செயல் என்பது ஒரு கருத்து. நாம் தனியாக அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது, நகைச்சுவை உணர்வுள்ள ஒரு பகுதி நமது கவனத்திற்கு வந்தாலும், நாம் அப்போது உரக்கச் சிரிக்க மாட்டோம். ஆனால், மற்றவர்களுடன் சேர்ந்து அதனை ரசித்தால், அவர்களுடன் சேர்ந்து உரக்கச் சிரிப்போம்.
சிலர் சிரிப்பதே இல்லை; மற்றும் சிலரிடம் எப்போதுமே இயல்பான புன்முறுவலைக் காணலாம். சிலர் சிரித்த பிறகுதான் பேச வேண்டிய பேச்சுக்களையே ஆரம்பிப்பார்கள். சிரிப்பில் பல வகைகள் உள்ளன:
இடி முழக்கத்தைப் போன்று சிரிப்பவர்கள்,
அடக்கமாகச் சிரிப்பவர்கள்,
நையாண்டியாகச் சிரிப்பவர்கள்,
பாராட்டு முறையில் சிரிப்பது,
வலுக்கட்டாயச் சிரிப்பு
எனப் பல உண்டு. பொதுவாகச் சிரிப்பு நம் வாழ்வுக்கு இன்றியமையாதது என்பதைப் பழங்காலத்திலிருந்தே உணர்ந்து வந்திருக்கிறோம். உள்ளத்திலே ஏற்படும் உணர்ச்சிகளை வெளியிடுவதற்குச் சிரிப்புதான் மிகவும் உதவுகிறது.
சிலருடைய சிரிப்பிலே பொருள் புதைந்திருக்கும். பிறருடைய உள்ளத்தைக் கவர்வதற்குச் சிறந்த சாதனம் சிரிப்புதான். நகைச்சுவை ததும்பப் பேசுகிறவர்கள், வாழ்க்கையில் வெற்றி முரசு கொட்டுவதைக் காணலாம்.
சிரிப்பு, ஒவ்வொரு காரணத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபாடு அடைகிறது. சிலரின் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கும்; அதைப் பார்த்துச் சிரிப்போம். கோமாளித்தனமாக உடையணிந்து இருப்பதையும், கோமாளி வேஷம் போட்டு வருபவர்கள் நகைச்சுவையாகப் பேசுவதையும் பார்த்ததும் சிரிப்பு வரும். சிலர் அருவருப்பைக் காட்டுவதற்காகவும் சிரிக்கலாம். கோபத்தை வெளிப்படுத்தும் போது அந்த முகம் படும் பாட்டைப் பார்த்துச் சிரிப்பவர்களும் உண்டு.
அதேபோல், விளையாடும் பொழுது சறுக்கி விழுந்து விடுவதைப் பார்த்துக் குழந்தைகள் விளையாட்டுத்தனமாகச் சிரிப்பதுண்டு. வீட்டில் யாராவது ஒரு பொருளை மெல்ல வைப்பதாக நினைத்து அதைக் கீழே போட்டுவிட்டால், கள்ளம் கபடம் இல்லாமல் ஒரு சிரிப்பு வரும். 'அ' முதல் 'ஃ' வரை ஒவ்வொரு விதமாகச் சிரிப்பவர்களைப் பார்த்தால், விபரம் அறியாத குழந்தைகள் சிரிப்பார்கள். பிறருக்குத் தற்செயலாக ஏற்படும் சங்கடம், சிலருக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும்; அந்தத் திருப்தியின் காரணமாகப் பலருக்குச் சிரிப்பு ஏற்படுகிறது.
இப்படிச் சிரிப்பின் பொருள் ஆழமானது. எப்படி இருந்தாலும், ஆணவமாகச் சிரிக்காமல் அன்பை வெளிப்படுத்தும் முறையில் சிரித்தால் சிரிப்பு அழகாகும்; இதனால் மிகுந்த ஆரோக்கியம் பெறலாம். ஆதலால், "நோய் விட்டுப் போக வாய்விட்டுச் சிரிப்போமாக!" அது நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்.