
கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் பயனளிக்காது முழுவதுமாக விசாரித்து அறிந்துகொள்வதே மேல் என்று சொல்லி கேள்விப்பட்டது உண்டு.
உண்மை நிகழ்வின் அடிப்படையில் நடந்ததை என்னவென்று காண்போம். பல வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் தானே பகுதியில் ஒரு நகரத்தில் நடைப்பெற்றது.
அங்கு இருந்த வங்கி கிளைக்கு புதிய மேனேஜர் சில நாட்களுக்கு முன்பு வந்து ஜாயின் செய்து இருந்தார். அவர் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் இருந்து மாற்றல் ஆகிவந்தவர்.
மகாராஷ்டிராவும், மராட்டி மொழி இரண்டும் அவருக்கு புதிது. இந்தி மொழி ஓரளவுக்கு மேனேஜ் செய்வார்.
அன்று ஸ்டேஷனிலிருந்து வங்கி கிளைக்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்த நபரை பார்த்தார். நேற்றும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் அந்த நபரை பார்த்தார்.
அந்த நபர் புன்னகைத்தப்படி இவருக்கு வணக்கம் கூறினார். இந்த மேனேஜர் அவர் வங்கியின் வாடிக்கையாளர் என்ற எண்ணத்தில் இவரும் வணங்கினார். உரையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஆனால் இன்று அதே நபர் வணங்கிவிட்டு மேனேஜரிடம் உரையாடினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு மேனேஜர் தலையாட்டி பதில் கூறினார். சிறிது நேரம் கழித்து அவர் வணங்கிவிட்டு மந்தகாசப் புன்னகையுடன் சென்றுவிட்டார்.
மேனேஜர் இப்படி ஒரு சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்காததால் சிந்தித்தபடி வங்கி கிளைக்குள் நுழைந்தார்.
நேற்றும், இன்றும் நடந்த இந்த நிகழ்வுகளை உள்ளூர் மனிதர் ஒருவர் கவனித்துவிட்டார். அவருக்கு பகீர் என்று இருந்தது. புதிய மேனேஜருக்காக வருத்தப்பட்டார்.
அவரும் தமிழ் நாட்டின் ஒரு பகுதியைச் சார்ந்தார். ஆனால் பல வருடங்களாக இந்த நகர பகுதியில் வசிப்பவர். அவரும் அந்த வங்கி கிளையின் நீண்ட நாள் வாடிக்கையாளர்.
வெளியூர் சென்றிருந்த அவர் திரும்பி வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. இன்னும் அவர் வங்கி கிளையின் புதிய மேனேஜரை சந்திக்கவில்லை.
அதற்குள் இரண்டு நாட்கள் கண்ட காட்சிகள், என்ன நடந்திருக்கும் என்பதை (அனுபவத்தின் அடிப்படையில் கண்களால் கண்டதை ஊகித்து கிரகித்துக் கொள்ள வைத்தது.)
வங்கியில் மேனேஜர் தனது கேபினில் உட்கார்ந்துக் கொண்டு ஏதோ வங்கி சம்மந்தப்பட்ட லெட்டர் படித்துக்கொண்டிருந்தார்.
இந்த நபர் மேனஜர் கேபினுக்கு சென்றார். மேனேஜர் வந்தவரை வணக்கம் கூறி வரவேற்று அமர சொன்னார்.
வந்தவர் தன்னை தமிழ் மொழியில் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரால் முடிந்த உதவி செய்வதாக கூறி மேனேஜரை அசத்தினார். மேனேஜருக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி கூறினார்.
மேனேஜர் வர வழைத்த காபியை பருகினார். சிறிது நேரம் உரையாடியபடி அவர் வந்த மேட்டருக்கு (matter) வந்தார்.
வந்தவர் கூறினார், "நான் உங்களைவிட வயதில் மூத்தவன், அனுபவத்திலும். தாங்கள் தப்பாக நினைக்கவில்லை என்றால் ஒன்று கூறலாமா என்று பீடிகையுடன் இழுத்தார்..!"
மேனேஜருக்கு ஒன்றும் புரியவில்லை. "பரவாயில்லை கூறுங்கள்.!" என்றார் வந்தவர் என்னதான் கூறப்போகிறார் என்பதை அறியும் ஆவலில்.
வந்தவர் தொடர்ந்தார், "நீங்கள் இந்த இடத்திற்கு புதிது. எல்லோரையும் நம்பி விடாதீர்கள். அது சரி நீங்கள் சமீபத்தில்தான் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் வங்கியில் உங்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு கடன் வசதியும் இருக்கும் அல்லவா, அப்படி இருக்க. நீங்கள் இப்படி செய்து அவதிப்படலாமா?
நேற்றும், இன்றும் கண்ட காட்சிகள் என்னை திடுக்கிட வைத்தன. அதனால்தான் உங்களை சந்தித்து எச்சரிக்கையாகவும், பாது காப்பாகவும் இருங்கள் என்று கூற வந்தேன்..!" என்று நிறுத்தினார்.
திடுக்கிட்டார் மேனேஜர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போய்விட்டார்.
வந்தவர் தொடர்ந்து அவர் பார்த்த நிகழ்வுகள் பற்றி கூறியதும் மேனேஜருக்கு புரிந்தது.
வந்தவரிடம், நடந்தது என்ன என்பதை மேனேஜர் விலாவாரியாக விவரிக்க வந்தவருக்கு நடந்தது என்ன என்றும், பார்த்ததை வைத்து என்ன புரிந்துக்கொண்டார் என்பதும் விளங்கியது.
மேனேஜருக்கு நன்றி கூறிவிட்டு சென்றார். மேனேஜரும் அவர் மீது அக்கறை எடுத்துக்கொண்டதற்கு நன்றி கூறி வணங்கினார்.
நடந்தது இதுதான். இரண்டு தினங்கள் மேனேஜரை சந்தித்தவர் பட்டாணிவாலா என்னும் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் ஆசாமி. அவரது உடை, தலையில் அணிந்திருக்கும் முண்டாசு அவர் என்ன தொழில் செய்கிறார் என்று எல்லோருக்கும் காட்டி கொடுத்துவிடும்.
அந்த பட்டாணிவாலா இந்த வங்கி கிளையில் பணிபுரியும் பியூன் ஒருவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். அந்த பியூனோ பணம் எதுவும் திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தான்.
அது விஷயமாக வங்கிக்கிளை மேனேஜரை நிறுத்தி உரையாடிக் கொண்டிருந்தார் அந்த பட்டாணிவாலா.
இருவரும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காதுகளால் கேட்காமல், எதிர் பிளாட்பாரத்திலிருந்து கண்களால் பார்த்துவிட்டு அவராகவே மேனேஜர்தான் அந்த பட்டாணிவாலாவிடம் வட்டிக்கு கடன் வாங்கி விட்டார் என்ற ஒரு முடிவுக்கு வந்ததன் ரிசல்ட்தான் அந்த நபர் மேனேஜரை மீட் செய்து அட்வைஸ் செய்தது.
இதைதான் ஆங்கிலத்தில் கூறுவார்கள் 'Don't jump to the conclusion without due understanding' தீர விசாரிக்காமல் தன்னிச்சையாக முடிவிற்கு வராதீர்கள் என்று.