கிசுகிசுக்களின் அபாயம்: வதந்திகளைப் புறக்கணிப்போம்!

Motivational articles
Let's ignore the rumors!
Published on

டிஷிங் அழுக்கு என்பது ஒருவர் மற்றவர்களைப் பற்றி அறிந்த ரகசியங்கள், வதந்திகள் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களை மற்றவர்களிடம் தெரிவிப்பதாகும். இது பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான தகவல்களை பரப்புவதை குறிக்கிறது. நல்லதை சொல்ல நம்மிடம் எதுவும் இல்லையென்றால் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. நாம் ஏன் கிசுகிசுக்கிறோம்? சிலருக்கு கிசுகிசுப்பது ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது. இதனால் ஏற்படும் பின் விளைவுகளை நினைத்துப் பார்த்தால் கிசுகிசுக்கவோ, வதந்திகளை பரப்பவோ தோன்றாது.

வதந்திகள் நேரடியாக மனிதர்களை அழிப்பதில்லை என்றாலும் அவை மன மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி தனி நபர்கள் மற்றும் சமூகத்தின் அமைதியை குலைக்கும் ஆற்றல் கொண்டவை. தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் உறவுகளை சீர்குலைக்கலாம்.

ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம்; கவலை, மன அழுத்தம், பதட்டம் போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டலாம்; சில சந்தர்ப்பங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதன் மூலம் பெரும் அழிவைக் கூட ஏற்படுத்த முடியும். எனவே அடக்கி வாசிப்பதுதான் நல்லது!

வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை. அது ஒருவரின் நம்பகத்தன்மையை அழித்து சமூகத்தில் அவர்களுக்கு ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கலாம். சமூகத்தில் உள்ள உறவுகளை சிதைத்து பிளவுகளை ஏற்படுத்தலாம். பணியிடங்களில் வதந்திகளைப் பரப்புவது ஊழியர்களிடையே சச்சரவுகளை உருவாக்கி வேலைத்திறனைக்கூட பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தோல்வியை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.... தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்!
Motivational articles

எனவே வதந்திகள் நேரடியாக அழிவை ஏற்படுத்தாவிட்டாலும், அவற்றின் விளைவுகள் தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டால் அந்த விவரம் உண்மையா என்று நாம் பொதுவாக சிந்திப்பதில்லை. சிலர் வதந்திகளை பரப்புவதில் சலிப்படைவதில்லை. ஆர்வமுடன் பரப்புகிறார்கள். காரணம் அவர்கள் தொடர்ந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள். கிசுகிசுக்களின் பொருளாகிவிட்ட பெரும்பாலான மக்களின் மனதில் இரண்டு விதமான எண்ணங்கள் சுழல்கின்றன.

"என்னைப் பற்றி யார் அப்படி சொல்ல முடியும்"? என்றும், "திடீரென்று எல்லோரும் இந்த மோசமான வதந்திகளை நம்பி என்னுடன் பேசுவதை நிறுத்தி விடுவார்களோ"? என்ற பயமும் ஏற்படும். இதன் காரணமாக மனஉளைச்சலும், எதிர்மறையான எண்ணங்களும் ஏற்படும். எனவே இது போன்ற வதந்திகளை பரப்பாமல் இருப்பதுதான் நல்லது.

அப்படியே பரப்பினாலும் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த மன அழுத்தமும், பாதிப்பும் இல்லாமல் அதிலிருந்து வெளிவருவதற்கு முக்கியமாக நாம் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதே நல்லது. வதந்திகளை பரப்புபவரை அடையாளம் கண்டுகொண்டாலும் நாம் கொடுக்கும் தன்னிலை விளக்கம் நிலைமையை மேம்படுத்தாது.

இதையும் படியுங்கள்:
மனிதனின் ஆசைகளும் வாழ்வின் நெறிகளும்!
Motivational articles

எனவே யாருக்கும் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு ஒரே வழி வதந்தியையும், அதை பரப்புபவரையும் முற்றிலும் புறக்கணிப்பதேயாகும். மற்றொரு வழி அவற்றை நகைச்சுவையாக மாற்றுவது. ஒன்றுமே நடக்காதது போல் ஒரு புன்னகையை வீசிப்பாருங்கள். தன்னைப் பார்த்து சிரிக்கும் நபரின் செயல் அவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும்.

மனக்காயங்களை உண்டு பண்ணும் வதந்திகளை பரப்ப வேண்டாம். யாரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே சிறந்தது என்பதை மறக்க வேண்டாம். நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com