

ஒவ்வொரு மனிதனைக்குள்ளும் வேறு ஒரு மனிதன் வசித்து வருகிறான். அனைவரையும் ஒரே குடையின் கீழ் என பட்டியலிட முடியாது.
நமக்காக பேசுவதும் அதே நேரம் நாம் போன பிறகு புறம் பேசுவதும் நிறையவே காணப்படுகிறது.
நாமும் எவ்வளவு ஜாக்கிரதையாய் பழகினாலும் ஒரு சில விஷயங்களில் கோட்டை விட்டு விடுவதும் இயல்பு தான்.
இப்படி மனித மனங்களில் வஞ்சக எண்ணம் வந்து போவது சமீப காலமாக அதிகமாகிவிட்டது.
ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மனித மனங்களில் இந்த அளவிற்கு கெட்ட எண்ணம் இருந்ததாக தொியவில்லை.
அப்போதெல்லாம் பொியவர், சிறியவர் என்ற மட்டு மரியாதை இருந்தது. காலப்போக்கில் நாகரீகம் வளர வளர அதெல்லாம் காற்றில் கரைந்த சூடம் போல ஆகிவிட்டது.
பொதுவாக கூடப்பிறந்தவர்கள் பொியப்பா, சித்தப்பா என ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்ந்து வந்ததோடு, ஒருவருக்கு ஒருவர் பல வகைகளில் உதவி ஒத்தாசை செய்யும் மனப்பான்மையோடு வாழ்ந்துவந்த சூழல் நிலவியது.
அதுவே ஆரோக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. அநேக விஷயங்களில் மனித மனங்களில் விசால மனப்பான்மை குறைந்துவிட்டது. அவசர கதியில் எந்திர வாழ்க்கை என்ற ரீதியில் வாழ்க்கையே ஒரு பிடிப்பு இல்லாத நிலையில் காலசக்கரம் உருண்டு ஓடி பிடிப்பு இல்லாத இரண்டும் கெட்டான்போல வாழ்ந்துவருவது மாற்றப்படவேண்டும்.
மனித மனங்களில் ஆன்மிக நெறிமுறை வளரவேண்டும். சிலர் ஆன்மிக உணர்வில் அதிகம் வாழ்ந்தாலும், அவர்களுக்கும் நல்ல ஒழுக்கமும் நல்ல சிந்தனையும் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சிக்கல்கள் வந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டாலும் நாம் அவர்களுக்கு உதவும் வகையில் நமது எண்ணம் தூய்மையானதாக இருப்பது நல்லதே! பொதுவில் ஒரு தவறோ அல்லது வேறு பிரச்சனையில் உறவோ அல்லது நட்போ பாதிக்கப்பட்டால் நாம் மனமாச்சர்யம் களைந்து பிரச்சனையை பேசித்தீா்த்து முடிவுக்கு வருவது நல்லது.
எதுவும் நிரந்தரம் இல்லை யாரும் நிரந்தரமாக இறப்பே வராமல் வாழப்போவதும் இல்லை.
ஆக எந்த விஷயமானதாக இருந்தாலும் நிதானம் தவறாமல் அவசரமான பணிகளை தவிா்த்து அமைதியான முறையில் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, நிதானம் மற்றும் விவேகம் கடைபிடித்து அனைவருடனும் சகோதரத்துவமாய் வாழ உாிய வழிமுறைகளோடு வாழ்வதே சிறப்பான வாழ்க்கைக்கு வழியாகும்!