ஆடம்பரப் பாதையில் பயணிப்பவர்கள் சந்திக்கும் 'அந்த' விபரீதம்... உஷார்!

ஆடம்பரத்தின் மாயையில் சிக்கி கடனும் அவமானமும் நோக்கி தள்ளப்படும் வாழ்க்கையை எளிமை, சிக்கனம், திருப்தி மட்டுமே காப்பாற்றும் என எச்சரிக்கும் கட்டுரை
Luxurious Life Financial Pitfalls
Luxurious Life Financial PitfallsCredit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஆடம்பரம் எனும் பாதையில் சென்றவன்தான், அடமானம் என்னும் பாதையில் சிக்கித் தவிக்கிறான்.

தினசரி உடுத்தும் ஆடையிலிருந்து, தினுசு தினுசாய் அணியும் நகைகள் மட்டுமல்ல; வீட்டு உபயோகப் பொருட்களும் சந்தைக்கு வந்த நிமிடமே முதல் ஆளாய்—தேவையோ இல்லையோ—வாங்கி, அடுத்த வீடுகளின் பிரமிப்பான பார்வைக்குள்ளாக்குவதே தங்களுடைய மதிப்பை உயர்த்தும், தங்களுடைய தகுதியை உயர்த்தும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் இன்று அதிகமாக உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமே அடிப்படைத் தேவையாகப் போய்விட்டது. ஆடம்பரமாக இருப்பதை நம்மால் சிறிதும் தவிர்க்க முடிவதில்லை; எளிமையான வாழ்வு என்பது அறவே போய்விட்டது என்றே சொல்லலாம்.

ஆடம்பரம் என்பது இயல்பானது அல்ல. தொடக்கத்தில் பெருமை தருவது போல இருக்கும்; போகப் போகத்தான் அனைத்துச் சிறுமைகளையும் தானாகக் கொண்டு வந்து சேர்க்கும். ஆடம்பரம் என்பது ஆபத்தானது; அது நம்மை அவமானத்தில் சிக்கித் தவிக்க வைக்கும். "அகலக் கால் வைக்காதே, ஆபத்து!" என்று எச்சரிக்கும் பெரியவர்களையும் நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

கௌரவம் என்ற போலியான, தேவையற்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு வலம் வருகிறோம். தேவையற்ற பொருட்களை வாங்கிக்குவித்து விட்டு, பின்பு அவசரத் தேவைக்கு மிகவும் தேவையான பொருட்களைக் கூட விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

ஆடம்பரம் என்பது ஒரு மனநோய்; அதனை ஒரு தொற்றுநோய் என்று கூடச் சொல்லலாம். எனவே, எதை வாங்க எண்ணினாலும், எதனைச் செய்யத் தொடங்கினாலும், "இது நமக்குத் தேவையா?" என்று நம் மனதிற்குள்ளேயே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, மிகவும் தேவையானவற்றை மட்டுமே வாங்குவது சிறப்பு. "இந்தப் பொருள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது, இது மிகவும் அவசியத் தேவை" என்று எண்ணினால் மட்டுமே அதனை வாங்கத் துணிய வேண்டும். வாழ்வில் சிக்கனமாக இருப்பதும், எளிமையைக் கையாள்வதும் நம்மை ஆடம்பரம் என்னும் அவமானத்தில் சிக்கித் தவிக்க விடாது.

ஆடம்பரம் ஒருவரை அவமானத்திலும், நிம்மதியற்ற நிலையிலும் தள்ளிவிடும் என்பது பலரால் உணரப்பட்ட நிதர்சனமான உண்மை. ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது; அது எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து அவமானத்தைத் தேடித்தரும். ஆடம்பரப் பாதையில் செல்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய சொத்துக்களையும், மன நிம்மதியையும் அடமானம் வைத்து கடனாளியாகத் தவிக்கும் நிலை ஏற்படலாம். எளிமையே சிறந்தது. எனவே, முடிந்த அளவு ஆடம்பரத்தைத் தவிர்த்துவிட்டு, எளிமையான வாழ்க்கை வாழ்வது மன அமைதியையும் நிம்மதியையும் தரும்.

இதையும் படியுங்கள்:
திறமையானவர்களை விட 'பக்குவமானவர்களுக்கே' உலகம் அடிமை! ஏன் தெரியுமா?
Luxurious Life Financial Pitfalls

"விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்" என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள்; அது முற்றிலும் உண்மை. ஆடம்பரத்தைத் தவிர்ப்பதற்கு இன்றிமையாத தேவை எது என்று அறிந்து நடந்தாலே ஆடம்பரம் தானே போய்விடும். அதேபோல், மற்றவர்களைப் பார்த்து எதையும் வாங்குவதற்கு முன்பு, "இது நமக்கு அவசியம் தானா?" என்று ஒன்றுக்கு இரண்டு முறை நமக்கு நாமே கேட்டுக்கொள்வது ஆடம்பரத்தைத் தவிர்க்க உதவும்.

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்றொரு பழமொழி உண்டு. திருப்தியும் மகிழ்ச்சியும் இதயத்தின் ஆழத்திலிருந்து வருபவை; அதனை வெளியில் எங்கும் தேடத் தேவையில்லை. பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், கௌரவத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்தால், அது நம்மை குப்புறத் தள்ளிவிடுவது மட்டுமல்லாமல், குழிதோண்டிப் புதைத்தும் விடும்.

தேவைக்கு மீறி, பிறர் கவனத்தைக் கவர அல்லது பெருமையடித்துக் கொள்வதற்காகச் செய்வது எல்லாமே ஆடம்பரம்தான். ஆடம்பரம் எனும் பாதை(financial-traps-of-luxury-lifestyle) அவமானத்தில் சிக்கித் தவிக்கவிடும்; எளிமையாக வாழ்வதே நிரந்தரம்!

logo
Kalki Online
kalkionline.com