கண்களை மறைத்த கோபம்! மாவீரன் செங்கிஸ்கான் செய்த அந்த ஒரு மிகப்பெரிய தவறு!

ஆத்திரம் அழிவைத் தரும் என்பதை உணர்த்தும் கதை
The life lesson of Genghis khan tamil motivation story
The life lesson of Genghis khan Credits: AI Image
Published on

'ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ அல்லது கோபம் நிறைந்தவனாகவோ இருப்பான். அப்போது அவன் செய்யும் எந்தச் செயலும் தோல்வியில்தான் முடியும். அந்த நிலையில், எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசிக்கும் மனநிலையில் அவன் இருக்க மாட்டான். இதனால், அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறாகவே முடியும்.

இதற்கு உதாரணமாக இக்கதையைச் சொல்லலாம்:

மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். அவர் தனது கரத்தில் ஒரு ராஜாளியை ஏந்தியிருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் அவருக்குக் களைப்பும் தாகமும் ஏற்பட்டது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழை போலத் தண்ணீர் ஒழுகி வழிந்து கொண்டிருந்தது.

உடனே அதைப் பார்த்த மாவீரன், ஒரு குவளையை எடுத்துக்கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்குச் சென்று நீரைப் பருக முயன்றார். அப்போது, அவர் கையில் இருந்த ராஜாளி வேகமாகப் பாய்ந்து சென்று குவளையைத் தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் இதுபோலவே ராஜாளி குவளையைத் தட்டிவிட்டது.

ராஜாளியின் இந்தச் செயலால் மாவீரனுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. உடனே, வாளால் ராஜாளியை வெட்டினார். அந்தப் பறவை துடிதுடித்துக் கொண்டிருந்தது.

செங்கிஸ்கான் மீண்டும் தண்ணீரைச் சேகரித்து அருந்த முற்பட்டார். துடிதுடித்துக் கொண்டிருந்த ராஜாளி, மறுபடியும் பாய்ந்து வந்து குவளையைத் தட்டிவிட்டது. இதனால் செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத ஆத்திரம் பீறிட்டெழுந்தது. உடனே ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கொன்றார்.

இப்போது பாறையின் மேலிருந்து தண்ணீர் கசிவது நின்றுவிட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டுவிட்டாலும், மேலே ஓரளவாவது தண்ணீர் இருக்கக்கூடும் என்று மாவீரன் அனுமானித்தார். அந்த குன்றின் வழியே மேலே ஏறிச் சென்றார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது.

ஆனால், அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய விஷப் பாம்புகள் செத்துக் கிடந்தன. அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதைச் செங்கிஸ்கான்(The life lesson of Genghis khan) அப்போதுதான் உணர்ந்தார். கீழே இறங்கி வந்த செங்கிஸ்கான், இறந்து கிடந்த ராஜாளியைத் தூக்கி இறுகத் தழுவிக்கொண்டார். தன் உயிரைக் காப்பாற்றிய அந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.

செங்கிஸ்கானின் விருப்பப்படியே தங்க ராஜாளி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் ஒரு சிறகில், "ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான்" என்று பொறிக்கப்பட்டது. மற்றொரு சிறகில், "ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும்" என்று பொறிக்கப்பட்டது.

நாம் கற்க வேண்டிய பாடம்:

நம்மில் பலருக்குக் கோபத்திலும் ஆத்திரத்திலும் அறிவு வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும் அழிவையே தருகிறது. இதனால்தான் 'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டம்' என்று பழமொழி கூறுகிறது.

1. எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பைக் கைவிடுங்கள்; மற்றவர்களை அன்போடு பாருங்கள்.

3. கோபமூட்டும் சூழ்நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். முடிந்தவரை அத்தகைய சூழல்களைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கோபம் வரும்போது உங்கள் மனதை வேறு செயல்களில் திருப்புங்கள்.

இதையும் படியுங்கள்:
இன்று உங்கள் நாள்! அதை வசப்படுத்தத் தயாரா?
The life lesson of Genghis khan tamil motivation story

5. அவசரம் ஒருபோதும் வேண்டாம்; பொறுமை, தன்னடக்கம் மற்றும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

6. கோபம் வரும் சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்; மௌனமாக இருங்கள்.

நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால், நாம் உறுதியாகக் கோபத்தைக் குறைத்தாக வேண்டும். ஆத்திரத்தைத் தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தால் எதிலும் வெற்றிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com