ஒரு செயலை துவங்குவது எளிது. இறுதி வெற்றி பெரும் வரை அச்செயலை தொடர்ந்து செய்வது கடினம். குறிப்பாக திசை திருப்பக் கூடிய சந்தர்ப்பங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும்போது கவனம் சிதறாமலும் நோக்கம் பாழ்படாமலும் குறிக்கோளை நோக்கியே மனதை ஒருமுகப்படுத்துவது மிகவும் கடினமான செயலே, அமைதியான தருணங்களில் கூட தேவையற்ற சிந்தனைகள் மனதைச் சலனப்படுத்தத்தான் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நோக்கி மனதை முழுவதுமாக கவனம் செலுத்தி ஒருமுகப்படுத்துவது எளிதாகத் தோன்றலாம். முயற்சிக்கும் போதுதான் அது அவ்வளவு எளிதல்ல என்பது புரியவரும்.
மனதை ஒருமுகப்படுத்தி செயல்களில் ஈடுபடுவது மனிதனின் ஆக்கப்பூர்வ முன்னேற்றத்திற்கு முக்கியமானது. குறிக்கோள் நோக்கிய பயணத்தில் பலர் வெற்றியடையாததற்கு அவர்களின் கவனக்குறைவு காரணமாகிவிடுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தைக் குறிக்கோள் நோக்கித் தக்கவைத்துக் கொள்ளாத போது நேரம் விரையம் ஆவதுடன் செயல்களில் மந்தம் ஏற்படுகிறது. பயணத்தின் திசையும் மாறும் சூழல் ஏற்படும்.
மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது மனதில் எழும் சிந்தனைகளை ஒரு குறிப்பிட்ட திசையையே நோக்கித் தொடர்ந்து கவனம் செலுத்தும் திறனாகும். தேவையற்ற சந்தேகங்கள் மற்றும் ஐயப்பாடுகளால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்த்து மொத்தச் செயல்திறனும் குறிக்கோள் நோக்கியே இருப்பதற்கு இது உதவுகிறது. ஒரு முகப்படுத்தப்பட்ட மனம் திசை மாறாமல் இருக்கும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாகத் படிக்க, சிந்திக்க, வேலை செய்ய, தியானம் செய்ய, ஊக்குவிக்க மனதினை ஒருமுகப்படுத்தும் திறன் பயனுள்ளதாக அமைகிறது.
மனதை ஒருமுகப்படுத்தும்போது செயல்களில் கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கின்றது. மனதின் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சிந்தனைகளைக் களையவும், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கவும், மன அமைதியை நீடிக்கவும், நினைவுகூரும் திறனை அதிகரிக்கவும், படிக்கும் திறனை மேம்படுத்துவும், ஆற்றல்களின் திறனைப் பன்மடங்கு அதிகரிக்கவும், ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் முக்கிய தேவையாகிறது. மனம்தெளிவாகவும் அதில் சிந்தனைகள் ஒருமுகமாகவும் உள்ளபோது மன ஒழுக்கம் குறையும், சிந்தனை சிதறாதபோது செயல்களை செய்து முடிக்கும் உந்துதல் அதிகமாகும். பணிகளைச் செய்து முடிக்கும் நேரம் குறையும்.
மனதே மனிதனின் எல்லாச் செயல்களையும் இயக்குவதால் திறன் மிகுதியாக இருக்க மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற சிந்தனைகள் மீது கவனம் செலுத்தாவிட்டால் குறிக்கோள் நோக்கிய பயணங்கள் இடம் மாறிவிடும். வெற்றி பெறுவது தடுக்கப்படும். சிந்தனையும் செயலும் ஒரே குறிக்கோள் நோக்கி ஒத்துச் செயல்பட்டால் அரிய இலக்குகளைக் கூட எட்ட முடிவும் கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும் என்பது நாம் அனைவரும் அடிக்கடி கேட்கும் புத்திமதி. கவனம் சிதறினால் செயலின் வீரியம் குறையும் என்பது கண்கூடு. கவனம் சிதறாமல் இருப்பது மனத்தாலேயே.
மனதை ஒருமுகப்படுத்த ஆழ்ந்த தியானம் மிகவும் உதவி செய்யும். மனதை பாதிக்கக்கூடிய தகவல்கள் என்ன என்பதை அறிந்து அத்தகவல்களை முன்னேற்றம் தோக்கிப் பயன்படுத்துங்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் தொடரும் போது மனது இதமடையும். அத்தகவல்கள் தொடர்ந்து பெற விரும்பும். எந்த ஒரு நிகழ்வையும் நாம் பார்க்கும் கோணத்திலிருந்து அது நல்லதா தீயதா என்பதைத் தீர்மானிக்கிறோம். எல்லாவற்றிலும் உள்ள நல்லதைக் காணும் போது மனம் நிறைவடைகிறது. எந்த ஒரு நிகழ்வையும் நாம் பார்க்கும் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தலாம். இதன் மூலம் மனது வெற்றியை நோக்கியே செயலாற்றும்.