

மனித வாழ்க்கையில் அகமும் புறமும் இருகண்கள் போன்றது. அகத்தின் பார்வை முகத்தில் தெரியும். புறத்தின் பார்வை செயலில் தெரியும். முகத்தில் அன்பான பார்வையும், புறத்தில் ஆழமான, மற்றும் புதுமையான செயல் திறன் படைக்கும் ஆற்றலும் நம்மிடையே இருந்தால், இந்த உலகம் நம்மை போற்றிப் புகழ்பாடும்.
அகம் எப்போதும் தெளிந்த நீரோடை போன்று இருக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கையில் முன்னேறும் சிந்தனைகள உருவாகும் என்பதை உணர்வோம். அகத்தில் வன்மத்தின் ஆதிக்கம் மூடுபனிபாக உறைந்து விட்ச் செய்தால், அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்து, நம் வாழ்க்கையை சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளது என்பதை உணர்வோம்.
ஒவ்வொருவருக்கும் அகத்தூய்மை இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். அது இல்லை யென்றால், உள்ளத்திலும் உண்ர்வுகளிலும் தீய்மை சார்ந்த எதிர்மறை தோன்றும் எண்ணங்களால் நம்மை கெட்ட திசையில் பயணிக்க வைக்கும் நிலை உருவாகும். அறநெறி பற்றும் நல்ல சிந்தனைகளை என்றும அகத்தில் விதைப்போம்.
வாழ்க்கையில் நிறைந்த மனமும், மதிப்பு மிக்க வார்த்தைகளும், முகத்தில் அன்பும், ஒரு அழகு ஓவியமாக அகத்தின் அடையாளமாக இருக்கும் பண்புகள் நமக்குள் கிளர்ந்து எழட்டும். உள்ளம் மாசற்ற சுவாசம் சுவாசிக்கட்டும். அகத்தின் உள்ளமும் உணர்வுகளும் பண்படும் போது, வாழ்க்கை சிறக்கும்.
வாழ்க்கையில் அகத்தின் பார்வையை விட புறத்தின் பார்வை மற்றவர்கள் முன் விமர்சிக்கப் படுகிறது. அதற்கு காரணம் புறத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை செயல் பாடுகள், முகம் காட்டும் கண்ணாடி போன்று, ஒருவருடைய புறக் காரணிகளால் மற்றவர்கள் கண்கூடாக காணலாம் என்பது தான் காரணம்.
வாழ்க்கையில் அகத்தின் தோன்றும் உள்மனம், மலர்களைப் போல் இருக்க வேண்டும். மலர்ந்ததும் வாசம் வீசுவது என்ற தனது இயல்புநிலை மாற்றவில்லை. அதுபோல் நம்முடைய உள்மனம் இயங்கும் நேரத்தில், அழகான அதிர்வு அலைகளை ஏற்படுத்தி, தன்னுடைய இயல்பான குணமாக இருந்தால், நம்முடைய மூச்சுக்காற்று நம்மை விட்டு நின்றாலும், மற்றவர்கள் சுவாசத்தில் இரண்டறக் கலந்து, நம் வாசம் எப்போதும் வீசும்.
புற ஒழுக்கம் இப்போது போதையில் சிறைப்பட்டு, நம்முடைய வாழ்க்கை முறையையும், உளவியல் முறையும் மாற்றம் செய்து, அல்லது மாற்றிவிடும் காலமாக மாறிவிட்டது. அதனை சீரழிக்கும் முதன்மை காரணமாக இருப்பது போதைப் பொருள் கலாச்சாரம் தான் என்பது வேதனை அளிக்கிறது. இதனால் குடும்பம் மற்றும் சமூகம் கெட்டுப்போய் கொண்டிருப்பது வெக்கக் கேடானது.
நல்வினை தீவினை இரண்டையும் ஆராய்ந்து, செயல்படும் நல்வினை அகத்தில் விதைத்து, புறத்தில் ஏற்படுத்தும் தீயவினைகளை புறம் தள்ளி, உயர்வான நிலையில் வான் வரை புகழும் மனிதர்களாக வாழ்ந்து, நிறைவான வாழ்க்கையில் சிறப்பாகவும், உலகத்தில் நிலையான புகழோடும் வாழ்ந்து காட்டுவோம்.
சமீபத்திய ஆய்வு சொல்லும் கூற்று என்னவெனில், கோபம், பொறாமை மற்றும் குற்றவுணர்ச்சி கொண்ட மனிதர்களுக்கு, பல நோய்கள் தேடி வந்து பிடித்துக் கொள்கிறதாம். நாம் விழிப்புடன் இருக்க, அகத்தில் அறமும், புறத்தில் தூய்மையும் கொண்டு, வாழும் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக அமைத்து வாழ்வோம். அகம் சிறக்கட்டும், புறம் அதனோடு கைகோர்த்து நடக்கட்டும்!