
ஏகப்பட்ட செயல்பாடுகள். எல்லாவற்றிலும் ஈடுபடுவது. இது ஒரு பிரச்னை. இதிலிருந்து விடுபட வேண்டும். இது மட்டும்தான் பிரச்னை என்றால் இல்லை. முன்னேற்றம் அடைவதில் வேறு விதமான பிரச்னைகளும் இருக்கின்றன.
வாழ்க்கையில், ஏதே ஒன்றே ஒன்றுதான் முக்கியம் என்று அதன் பின்னாலே ஓடுவது. சோர்வு, அயர்வு ஏற்படும்வரை,விடாமல், அந்த ஏதோ ஒன்றின் பின்னாலேயே ஓடுவது. வாழ்க்கை முழுக்க அதையே துரத்துவது. இப்படி இருப்பதுகூட பிரச்னைதான்.
சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு, எந்நேரமும், தங்கள் வியாபாரம் பற்றிய சிந்தனைதான். எப்பொழுதும் எதிலும் அதே யோசனைதான். வியாபாரம், வியாபாரம், வியாபாரம்.
வேறு சிலருக்குக் கேளிக்கைகளில் ஈடுபாடு. இன்னும் சிலருக்கு குடும்பமும் அவர்களின் நல்வாழ்வும் அல்லது கலை அல்லது விளையாட்டு. இப்படி ஏதேனும் ஒன்றின்மீது வலுவான பிடிப்பு.
அப்படியிருப்பதில் தவறில்லை. அதில் மட்டுமே பிடிப்பு கவனம் இருப்பதுதான் தவறு. வேறு ஒன்றுமே உலகத்தில் இல்லாததுபோல, அதே குறி. அதே நினைப்பாக இருப்பது அதற்கே அத்தனை முக்கியத்துவமும், நேர ஒதுக்குதலும் பண ஒதுக்குதலும் செய்வது. இதுவும் பிரச்னைதான்.
வாழ்க்கைச் சமன்பாடு பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் அதாவது வெறும் வேலை வேலை என்று இருப்பது அதுவல்ல வாழ்க்கை. அது மட்டுமேயல்ல வாழ்க்கை. அதேபோல வாழ்க்கை வாழத்தான் என்று முழுவதும் அனுபவிப்பதிலேயே கழிப்பதும் தவறு. அது மட்டுமே வாழ்க்கை இல்லை.
நாம் என்கிற அடையாளம் காட்டுகிற செயல்பாடுகள். வாழ்க்கை வசதிகளுக்குப் பொருளீட்டுச் செயல்பாடுகள் குடும்பம், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள் நமது திருப்திக்கான செயல்பாடுகள்.
நமது கடமைகள், பொறுப்புகளை முடிப்பதற்கான செயல்பாடுகள். இப்படி ஒன்றல்ல. சில முக்கியப் பகுதிகள் உள்ளன. நமது வாழ்க்கையில் இவை அனைத்துமே முக்கியம். அப்பொழுதுதான் வாழ்க்கை முழு திருப்தியாக, பூரணமாக அமையும். நிறைவாழ்வுதான் முன்னேற்றம்.
வாழ்க்கையில் ஒருவர் இருக்கும் நிலை, அவரது வயது, சூழ்நிலைகள் பொறுத்து அவரது தேவைகள் மாறும். மற்றவர்களின் பட்டியல்களில் இருக்கக்கூடிய தேவைகள் முற்றிலும் வேறாக இருக்கும். அவற்றை விட எண்ணிக்கையில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் காரணமாக அவற்றின் வரிசை மாறலாம்.
மொத்தத்தில் முன்னேற்றத்திற்கு முதல் தேவை ஒரு சரியான பட்டியல். அதில் நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட தேவைகள். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. அதை திறம்பட செயல்படுத்துவதில் தான் வளர்ச்சி இருக்கிறது.