
எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டில் அவரின் செல்ல மகன் பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறினான் . “என் பெற்றோருக்கு என்னைக் கவனிக்கவோ என்னிடம் பேசவோ நேரமில்லை. நான் ஏழைகளுக்கு சேவை செய்வதை அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்றதல்ல என்று நினைத்து என்னிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள். இனி நான் என் வழியில் செல்கிறேன்” என்ற காரணம் வாட்ஸ் அப்பில்.
இன்று மகன் எங்கு சென்றான் என்று தெரியாமல், அவன் மனதில் இருப்பதை அறியாமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் என்றாவது அவன் வருவான் என்ற நம்பிக்கையுடனும் வாழ்கின்றனர் அந்த உறவினர்.
* குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் மட்டுமே பிள்ளைகளுக்கு சிறந்த நண்பர்களாக இருக்க முடியும். அதன் பின் வாழக்கை அவர்களுக்கு என்று காட்டிய பாதையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நல்ல நட்புகள் இணைந்து மனம் விட்டுப் பேசி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். பெற்றோருக்காக சில ஆலோசனைகள் இங்கு.
* எவ்வளவு வசதி என்றாலும் அவர்களுக்குத் தனி அறை தருவது என்பது அவர்களை தனித் தீவில் தனிமைப்படுத்தி வைப்பது போல என்பதை உணருங்கள் .
* தினம் ஒரு அரை மணி நேரமாவது அவர்களிடம் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.
* அவர்களுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள் அவர்களின் மனதில் உள்ளதை அறிந்து சம்பாதித்ததை செலவிடுங்கள். அப்போதுதான் உங்கள் கஷ்டமும் பாசமும் நேசமும் அவர்களுக்கு புரிந்து அவர்களும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.
* டீனேஜ் என்பது ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் முக்கியமான பருவம் ஹார்மோன்கள் விளையாடும் காலம். கண்ணாடி போன்று அவர்களின் உணர்வுகளைப் புரிந்து நம் ஈகோவை விட்டுவீட்டு அவர்கள் முரண்டு பிடித்தாலும் தொடர்ந்து சகஜமாக பேசி நண்பர்களாக அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
* அவர்களின் நண்பர்கள் யார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
* ஆசிரியரை விட பெற்றோரையே இன்றைய குழந்தைகள் அதிகம் சார்ந்து உள்ளனர். எந்தப் பிரச்சினை என்றாலும். அப்பா அம்மாவிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் வந்து விட்டாலே அவர்கள் செல்லும் பாதை சீராகும். எல்லாவற்றையும் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள் எனும் துணிவை அவர்களிடம் விதைக்கவேண்டும்.
* ஆயிரம் கருத்து வேறுபாடுகள் பெரியவர்களுக்குள் இருந்தாலும் உறவுகளை விலக்காமல் பிள்ளைகளை அவர்களுடன் இணைந்து பழக விட வேண்டும். அவ்வப்போது குடும்ப விழாக்களுக்கு அழைத்துச்சென்று அளவளாவ நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயங்களில் பெற்றோரிடம் பகிர முடியவில்லை எனில் ரத்த உறவுகளிடம் மனம் விட்டுப் பேசும் சூழல் நன்மை தரும்.
* நெற்றி வியர்வை வழிய நீங்கள் பாடுபடுவது அவர்களுக்காக என்று வலுக்கட்டாயமாக “உனக்காகத்தானே இப்படிக் கஷ்டப்படுகிறேன்“ என்று சொல்லிப் புரியவைக்க முயல்வது நல்லதன்று. அதற்காக உங்கள் சிரமங்களை சொல்லாமல் தவிர்ப்பதும் சரியல்ல. இரண்டையும் பேலன்ஸ் செய்வது பெற்றோரின் தலையாய கடமை.
மனம் விட்டு பேசுங்கள்... மகிழ்வுடன் வாழுங்கள்!