

"மேல் கிளையிலே நாகம். கீழே வேங்கை. நடுக்கிலையை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. கை வலிக்கும் சகித்துக்கொள்ளுங்கள். நேரம் ஆக ஆக வேங்கை விடை பெற்றுக் கொள்ளும். சகிப்புத் தன்மையின் இறுதி மகிழ்ச்சிகரமான வெற்றியாக இருக்கும்"- கவிஞர் கண்ணதாசன்.
எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். அனுபவித்து சொல்லி இருக்கும் இந்த பொன்மொழி நம் அனைவருடைய வாழ்க்கைக்கும் மிக அவசியமான ஒன்று. வாழ்க்கை என்பதை விட வெற்றிகரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு கண்ணதாசனின் இந்த அனுபவ உரை மிகவும் கைகொடுக்கும்.
இதோ இந்தக் கதையின் ஹீரோ இதற்கு சான்று. ஒரு ஊரில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் புதையல் இருக்கிறது என்று ஒரு முனிவர் சொல்லிவிட்டு போய்விடுவார். அவர் சாது அல்லவா? அதனால் அவருக்கு அந்த புதையல் தேவையில்லை. இதை கேட்டு அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவராக மரத்தின் அடியில் சென்று சுற்றிலும் குழியை தோண்டிப் பார்ப்பார்கள். அங்கு எந்த புதையிலும் இருக்காது. சலித்துபோன மக்கள் அதை மறந்து விட்டு தங்கள் அன்றாட வாழ்க்கையில் மூழ்கி விடுகிறார்கள். இதில் இரண்டு நண்பர்கள் மட்டும் விடாமல் அந்த மரத்தடியில் தோண்டிக் கொண்டிருக் கிறார்கள். ஒரு கட்டத்தில் அதில் ஒருவன் "அடப்போப்பா புதையலாவது ஒண்ணாவது அந்த சாது நல்லா ஏமாத்திட்டார்" என்றபடி ஏமாந்து போனவனாக மேலே ஏறி விடுகிறான்.
பரம ஏழையான மற்றொருவன் உணவு நீரின்றி தோண்டுகிறான். அவன் தனது அத்தனை உபாதைகளையும் சகித்துக்கொண்டு முனிவரின் வார்த்தைகளை மட்டுமே நம்பி செயலில் இறங்கினான். அட என்ன இது… அவன் கைகளில் ஒரு செப்புக்குடம். அது முழுக்க தங்க நாணயங்கள் புதையல் அவனுக்கு சொந்தமானது.
வயிறு முழுக்க பசி வேதனை. உடலில் கற்களின் காயங்கள். எங்கே அருகிலிருக்கும் மரம் விழுந்து இறக்கும் நிலை வருமோ என்ற அச்சம். இத்தனையையும் சகித்துக் கொண்டு தனக்கு அந்தப் புதையல் கிடைத்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் முயற்சி செய்த அவன் இப்போது வெற்றி பெற்ற பெரும் பணக்காரன். இவன்தான் நமது ரோல்மாடல்.
யாருக்குத்தான் பிரச்னை இல்லை? அவைகளை சகித்துச் செல்வதிலேதான் ஒவ்வொருவரும் மாறுபடுகிறோம். சிறு துன்பம் என்றாலும் துவண்டு போய் விடுவார்கள் சிலர். இவர்களுக்கு என்றும் வெற்றி என்பது எட்டாக்கனிதான். எதிர்வரும் விமர்சனங்களையும் சவால்களையும் சகித்து முன்னேறுபவர்களே வெற்றியை ருசிக்க முடியும்.
நம் எதிரி ஒருவர் நமக்கு எதிரான விமர்சனங்களை வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அதை சகிக்காமல் எதிர்வாதம் புரிந்தால் மனதில் நிம்மதி இன்றி பாதிக்கப்படப் போவது நாம்தான். எவ்வளவு நேரம் அந்த எதிரியால் பேசமுடியும்? சலித்துப் போய் ஒரு கட்டத்தில் விலகி விடுவார்.
இதேபோல்தான் பிரச்னைகளும். தகுந்த காலம் வரும் வரை சகித்துக் கொண்டால் இறுதியில் வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.
-சேலம் சுபா