
தடைகள் தவிர்க்க முடியாதவை என்று ஆகிவிடுகின்ற போது அவற்றைத் தாண்டிச் செல்லுகின்ற மனோபாவமும் நமக்கு இருக்க வேண்டும். போகும் பாதையில் ஒரு பெரிய மேடு இருக்கிறது என்பதற்காக நாம் நம் பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பி விடுவதில்லை. மூச்சு இரைக்க அந்த பயணத்தை நாம் தொடர்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு கஷ்டங்களும், தடைகளும் தோன்றவே செய்கின்றன. ஆனால் அவற்றைக் கண்டு மலைத்து நின்றுவிட்டால் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
மனிதன் தன்னுடைய லட்சியத்தை நோக்கி ஒவ்வொரு அடியாகத்தான் முன்னேற வேண்டியுள்ளது. அப்படி முன்னேறுகின்றபோது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவனுக்குத் தடை ஏற்படலாம். அந்தக் கட்டத்தில் ஏற்படுகின்ற தடையை அவன் அங்கேயே நின்று சமாளிக்க வேண்டும். அப்படிச் சமாளிக்கின்ற போதுதான், எந்த இடம் வரையில் அவன் முன்னேறி வந்திருக்கிறானோ அந்த இடத்தை அவனால் உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.
தடைகளைப் பார்த்து, அல்லது தடைதோன்றிவிட்டதே என்று பயந்து பின்னுக்குச் சென்றுவிடவும் கூடாது. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் சொல்லுவார்கள், "களங்களை இழந்தாலும், போரில் வெற்றி பெறுவோம்" என்று சில களங்களில் ஏற்படுகின்ற தோல்விகளே இறுதித்தோல்வி ஆகிவிடுவதில்லை.
ஒரு காரியத்தைச் செய்கின்றபோது, ஒரு குறிப்பிட்ட நிலையில் தோல்வி ஏற்படுவதால், அந்தக் காரியமே தோல்வியில் முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது.
வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் இடைக்காலத் தோல்விகளைச் சந்தித்தவர்கள்தான்.
உண்மையில் தோல்விகளை அனுபவப்பாடங்களாக எடுத்துக் கொண்டால் சோர்வுக்கு இடமில்லை. தோல்விகளைக் கண்டு துவளாதவர்களே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார்கள். ஆகவே தோல்விகளைக் கண்டு நாம் மனத்தளர்ச்சி அடையவேண்டிய அவசியம் இல்லை.
தடைகளும், இடையூறுகளும் குறுக்கிடும் காரணத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று மூக்கால் அழுது கொண்டிருப்பவர்கள் வாழவே லாயக்கற்றவர் களாவர். போராடித்தான் வெற்றி பெறவேண்டும். போராடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. இந்த சுகம் எப்போது தோன்றும் என்றால், ஏற்பட்ட கஷ்டங்களை, சவால்களாக ஏற்று கண்டு சந்திக்கும் போதுதான். போராடி அதிலிருந்து கிடைக்கக்கூடிய சுகத்தை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.