மண்டைல சரக்கு இருந்தா மட்டும் பத்தாது… பாக்கெட்ல பணம் சேர இந்த டெக்னிக் வேணும்!

Think And Grow Rich
Think And Grow Rich
Published on

ம்மில் பலருக்கும் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது எப்படி சாத்தியம் என்று நாம் மலைத்துப்போய் நிற்கிறோம். கடினமாக உழைத்தால் மட்டும் போதுமா அல்லது அதிர்ஷ்டம் வேண்டுமா என்று பலவாறாக யோசிக்கிறோம். இதற்கெல்லாம் ஒரு தெளிவான விடையை நெப்போலியன் ஹில் எழுதிய 'Think And Grow Rich' புத்தகம் அளிக்கிறது. 

சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களை சந்தித்து, இருபது வருடங்கள் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட இந்த புத்தகம், பணக்காரனாவது என்பது வெறும் காகிதத்திலேயோ அல்லது வங்கிக் கணக்கிலேயோ இல்லை, அது நம் மனதில்தான் இருக்கிறது என்று ஆணித்தரமாக கூறுகிறது. இந்த புத்தகத்தின் சாராம்சத்தையும், நம்மை எப்படி செதுக்கிக் கொள்வது என்பதையும் விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

எண்ணங்களின் வலிமை!

ஒரு மனிதன் எதை நம்புகிறானோ, எதை ஆழமாக சிந்திக்கிறானோ அதை அவனால் நிச்சயம் அடைய முடியும் என்பதுதான் இந்த புத்தகத்தின் அடிப்படை. எட்வின் பார்னஸ் என்பவருக்கு தாமஸ் ஆல்வா எடிசனுடன் கூட்டாளியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருக்கு எடிசனைத் தெரியாது, கையில் பணமும் இல்லை. ஆனாலும், தனது எண்ணத்தில் உறுதியாக இருந்ததால், பல தடைகளைத்தாண்டி இறுதியில் எடிசனின் பிசினஸ் பார்ட்னராக மாறினார்.

இது அதிர்ஷ்டம் அல்ல, ஆழ்மனதில் விதைக்கப்பட்ட விதை. நாம் பணக்காரராக வேண்டும் என்றால், முதலில் நமக்கு எவ்வளவு பணம் வேண்டும், அதை எப்போது அடைய வேண்டும், அதற்காக நாம் என்ன உழைப்பைக் கொடுக்கப் போகிறோம் என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை தினமும் வாய்விட்டுச் சொல்லி நம் ஆழ்மனதிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

அறிவு, கற்பனை!

வெறுமனே படித்துப் பட்டம் வாங்குவது மட்டுமே அறிவு என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது தவறு. நமது அறிவை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. ஹென்றி ஃபோர்டு அதிகம் படிக்காதவராக இருந்தாலும், தனக்குத் தேவையான விஷயங்களை எப்படி மற்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வது என்ற கலையை அறிந்திருந்தார். 

அதேபோல, கற்பனைத்திறன் வெற்றிக்கு மிக முக்கியம். ஆசா கேண்ட்லர் என்பவர் ஒரு சாதாரண மருந்துக் கடைக்காரரிடம் இருந்து ஒரு ரகசிய ஃபார்முலாவை வாங்கினார். அந்த ஃபார்முலாவிற்குத் தனது கற்பனைத் திறனைச் சேர்த்து அவர் உருவாக்கியதுதான் இன்று உலகம் முழுவதும் விற்கப்படும் கோகோ கோலா. பழைய விஷயங்களை வைத்துப் புதியதாக ஒன்றை உருவாக்குவதே சிந்தெடிக் இமேஜினேஷன் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விடாமுயற்சி: தடைகளை உடைத்து சிகரம் தொடும் வல்லமை!
Think And Grow Rich

திட்டமிடல், விடாமுயற்சி!

எண்ணம் இருந்தால் மட்டும் போதாது, அதைச் செயல்படுத்தச் சரியான திட்டமிடல் அவசியம். தோல்வி அடைந்தால் திட்டத்தை மாற்ற வேண்டுமே தவிர இலக்கை மாற்றக்கூடாது. டார்பி என்பவர் தங்கத்தைத் தேடி சுரங்கம் தோண்டினார். பல நாட்கள் தோண்டியும் தங்கம் கிடைக்காததால் விரக்தியில் அந்த இடத்தை விற்றுவிட்டுச் சென்றார். ஆனால், அவர் விட்ட இடத்தில் இருந்து வெறும் மூன்று அடி தூரத்தில் தங்கம் இருந்தது. 

விடாமுயற்சி இல்லாததால் பெரும் செல்வத்தை அவர் இழந்தார். தாமஸ் எடிசன் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தும் முயற்சியைக் கைவிடாததால்தான் மின்விளக்கைக் கண்டுபிடிக்க முடிந்தது. தோல்வி என்பது நிரந்தரம் அல்ல, அது ஒரு தற்காலிகத் தடை மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

பயம்!

தனி ஒரு மனிதனால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. நம்மைச் சுற்றி புத்திசாலிகள் மற்றும் பாசிட்டிவான சிந்தனை கொண்ட மனிதர்களை வைத்துக்கொள்வது அவசியம். இதைத்தான் மாஸ்டர்மைண்ட் குழு என்கிறோம். அதே சமயத்தில், நம்மைத் தடுக்கும் மிகப்பெரிய எதிரி பயம்.

இதையும் படியுங்கள்:
வளர்ப்பில் வறுமை வேண்டாம்... உழைப்பின் மதிப்பு வேண்டும்!
Think And Grow Rich

வறுமை, முதுமை, விமர்சனம், நோய், காதல் தோல்வி மற்றும் மரணம் ஆகிய ஆறு விதமான பயங்கள் நம் முன்னேற்றத்தைத் தடுக்கும். இந்த பயங்களை வென்று, ஆறாம் அறிவான உள்ளுணர்வைக் கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம்.

நம் எண்ணங்களைச் சீர்படுத்தி, பயத்தைத் தூக்கியெறிந்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நாமும் கோடீஸ்வரர் ஆகலாம். எண்ணம் போல் வாழ்வு என்பது பழமொழி மட்டுமல்ல, அதுவே வெற்றியின் ரகசிய மொழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com