

தோல்வி வந்தால் முகம் சுருங்கி, வாழ்க்கையில் இடி விழுந்தது போல் கருதாமல், அது அனுபவம் என்று நினைத்து இடி முழக்கம் இட்டு, மீண்டு வர முயற்சி செய்யுங்கள். வெற்றி வந்தால் பணிவாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள், அது உங்களுக்கான அடையாளம்.
தோல்வி என்பது பட்டாம்பூச்சி செயல்போன்றது. ஒரே பூவில் மயங்கி வாசம் செய்வது இல்லை பட்டாம்பூச்சி. அதுபோல் தோல்வியும் உங்களிடமே தங்குவது இல்லை. தோல்வி முதவிவ் உங்கள் கரங்களைப் பிடிக்கும், அதனை உதறிவிட்டு, முன்னேறினால், அதுவே அனுபவங்களாக தோள் ஏறும், சாதனைக்கு பின் விலகிச் செல்லும். எனவே தோல்வி ஒரு பொருட்டாக நினைத்து, கால விரயம் செய்யவேண்டாம்.
யாருக்கும் தோல்வி என்பது என்றுமே நிரந்தரமல்ல. அதனால் நீங்கள் தோற்ப்பதும் இல்லை; தோற்க்கடிக்கப் படுவதும் இல்லை. எனவே எதற்கும் தயங்காமல், உங்கள் வேலையைப் பாருங்கள். வெற்றிக்கான படிகளில் ஏறும்போது, அனுபவக் கரங்கள் உங்களை பிடித்து அழைச்சிட்டு மேலே போவதே நீங்கள் கண்ட முதல் தோல்வியே. ஆகவே முயற்சியில் அயர்ச்சி இல்லாமல் செயலாற்றும் துணிவே உங்களை முமுமனிதனாக மாற்றுகிறது.
சாதனையாளனுக்கு ஒவ்வொரு நொடியும் அருமையானது. அதை நினைத்து களமாடுங்கள். தடம் பதிக்கும் கால்களே, வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என்பதை உணருங்கள்.
தோல்விகளை தோள் சுமந்து, வெற்றிக்கு வழி தேடும்போது, பிரச்னைகள் மனதுக்குள் நுழைந்து கவலையை கூட்டிவிடும். அதனை எதிர்த்து நின்று நீங்கள் போராடினால், அண்டி வரும் அதன் தாக்கம் தணிந்து அது நழுவி, வெற்றி வென்று தழுவி வரும் நிலை மாறும். முயற்சித்து முன்னேறும் வழி தேடுங்கள்.
தோல்வி முகம் மாயை, வெற்றி முகம் வாகை இதை புரிந்து கொள்ளும் எவரும், வாழ்க்கையில் வீழ்ந்தது இல்லை. எனவே மாயையில் மண்டியிட்டு வீண் போகாமல், சிகரம் தொடும் தடங்கள் பதித்து வாகை சூடுங்கள்.
தோல்வியை அவமானமாக நினைத்துவிட்டால், கண்ணீரில் கரைந்து போகும் காலத்தின் வெகுமானங்கள். விடாமுயற்சி மந்திரக் கோல் பிடித்து, சாதனை படைக்கும் எண்ணங்களை உழைப்பில் உருவாக்கி, ஆற்றலில் வியர்வை துளிகளாக மாற்றுங்கள். உங்கள் கனவுகளுக்கு புத்துயிர் கொடுத்து, வெற்றி மலரை சூடுங்கள்.
தோல்வியில் துவண்டு போகாமல், இது பயிற்சியின் தளம், முயற்சியின் களம் என்று நினைக்கும் நேர்மறை எண்ணங்களை மனதில் பதிவிட்டு, உங்கள் வாழ்க்கையை வடிவமைத்து, இறுதியில் அதுவே வெற்றியின் முகம் என்பதை உணர்ந்து செயலாற்றி, வென்று சிகரம் தொடுங்கள்.
ஆழ் கடலில்தான் முத்துக்கள் இருக்கிறது. கரையில் நின்றால் உங்கள் கைகளுக்கு அவை வந்து விடாது. அதற்கென்று உழைப்பு வேண்டும். அப்படித்தான் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றியும். முயற்சியும் உழைப்பும் தேவை என்பதை உணர்ந்து, இலக்கின் பாதையில் பயணித்து, வெற்றி முத்துக்கள் எடுங்கள்.
உங்களின் மனவலிமை ஆயிரம் தோல்விகளை துவம்சம் செய்யும் என்பதையும், உங்களின் விடாமுயற்சி பல தடைகளை உடைத்து எறியும் வல்லமைக் கொண்டது என்பதையும் நினைவில் நிறுத்தி, உழைப்பில் சாதித்து உயர்வோடும் சிறப்போடும் வாழ்க்கை பயணத்தை அமைத்து, வெற்றி சிகரம் தொடுங்கள்!