

ஆங்கிலத்தில் short term goals, long term goals என்று கூறுவது, குறுகிய காலக் குறிக்கோள்கள், நீண்ட காலக் குறிக்கோள்கள் என்று பொருள்.
குறுகிய காலக் குறிக்கோள்களை அடைந்து அடைந்து, நீண்ட காலக் குறிக்கோளினை அடைய முடியும். அதற்கு ஏற்றவாறு நாம் குறுகிய காலக் குறிக்கோள்களை வகுத்துக் கொண்டு, எதிர்கால குறிக்கோள்களுக்குத் தயாராக வேண்டும்.
இது குறித்து ஒரு கதையைப் பார்ப்போம்:
ஒரு நாட்டில் அரசனை தேர்ந்தெடுக்கும் விதம் சற்று வித்தியாசமானது. பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் அரசர் பதவிக்கு முயலலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அரசர் பதவி ஐந்து வருடங்கள் மட்டுமே. ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு அந்த அரசன் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அருகில் உள்ள கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காட்டிற்கு கொண்டு செல்லப்படுவான். அந்தக் காடு காட்டாற்றைத் தாண்டி இருந்தது. அதனை நீந்திக் கடப்பது கடினம்.
இத்தகைய கடினமான நிபந்தனை காரணமாக அரசர் பதவிக்கு நாட்டில் இளைஞர்கள் செல்ல பயந்தனர். ஐந்து ஆண்டுகள் அரச பதவியில் இருக்கலாமே என்றாலும் கூட, ஐந்து ஆண்டுகள் கழித்து காட்டில் வாழப்போகும் வாழ்க்கையை எண்ணி நடுங்கினர்.
இந்த முறை ஒரு இளைஞன் அரசர் பதவிக்கு முயற்சி செய்தான். ஐந்தாண்டுகள் அவன் சிறப்பாக ஆட்சி செய்தான். அவனுடைய ஆட்சி முடிவடையும் காலம் வந்தது. அவன் மற்றவர்களைப் போல் அழாமல் தைரியமாக மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்தான். அவனை அழைத்துச் செல்வதற்கு ஒரு தேர்ப் படை வந்தது. அதன் பிரதானத் தேரில், ராஜ மரியாதையுடன் அவன் ஏறினான்.
அவனைச் சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று அவர்கள் கேட்டனர். அவன், "நான் அரசனாக இருந்த, கடந்த ஐந்து ஆண்டுகளில் அருகில் இருந்த காட்டினை திருத்தி, சாலைகள் அமைத்து, ராஜபாட்டை அமைத்து, அரண்மனை, கோட்டைகள் கட்டி, அங்கே ஒரு புதிய நாட்டை உருவாக்கி விட்டேன். அந்த நாட்டின் அரசனாக நான் இன்று பதவி ஏற்க போகிறேன். இந்த நாட்டிற்கு நீங்கள் புதிய அரசனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், இப்பொழுது உங்களுக்கு அரசனை நாடு கடத்த காடு கிடையாது. அங்கும் நாடு தான் உள்ளது. எனவே இங்கு இருக்கும் அரசனும் நல்லதொரு அரசனாக நீண்ட நாள் நாட்டை ஆள வாழ்த்துகள்," என்று சொல்லி தனது நாட்டை நோக்கி பயணப்பட்டான்.
மேலே சொன்ன கதையில், எதிர்காலத்தில் தன்னைக் காட்டில் விடப்போகிறார்கள் என்று அந்த இளைஞன் அறிந்தபடியால், அந்த காட்டினை நாடாக்கும் குறிக்கோளில் இறங்கினான். குறுகிய காலக் குறிக்கோள்களை வகுத்துக் கொண்டான். முதலில் காட்டைத் திருத்தினான். சாலைகள் போட்டான். ராஜபாட்டை அமைத்தான். கோட்டைகள், அரண்மனைகளை கட்டினான். குறுகிய குறிக்கோள்களை அடைந்து, புதிய நாட்டை 5 ஆண்டுகளில் உருவாக்கி விட்டான். தனது நீண்ட காலக் குறிக்கோளினை அடைந்து விட்டான்.
நாமும் நமது எதிர்காலக் குறிக்கோள் என்ன என்று அறிவோம். அதற்கேற்றவாறு முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். உதாரணமாக, நாம் சம்பாதிக்கும் காலத்தில் மாதாமாதம் சம்பளம் வருவதால் அரசனைப் போல வாழ்க்கை நடத்துகிறோம். ஆனால், சம்பாதிக்கும் காலம் முடிந்த பிறகு, நமது ஓய்வு காலத்திற்கு பணம் தேவைப்படும். அதற்கு முன்கூட்டியே பணத்தை சேமித்து முதலீடு செய்து வைத்தால் ஓய்வு காலம் வரும்போது அந்த முதலீட்டின் பணம் நமது வாழ்க்கையை அரசனைப் போல வாழ உதவும்.
குறுகிய காலக் குறிக்கோள்களை வகுத்து, எதிர்காலக் குறிக்கோளை அடைவோம். எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வோம்.