
அறப்பணிகள் ஏராளம் உண்டு. கோவில்களுக்கு குத்து விளக்குகள் வாங்கித் தருவது, டியூப் லைட்டுகள் வாங்கித் தருவது, படிக்கும் ஏழை எளியோர்க்கு பணஉதவி செய்வது, ஆதரவற்ற காப்பகங்களுக்கு காசு பணம் கொடுப்பது, ஒரு வேலை உணவை அவர்களுடன் அமர்ந்து உண்ணுவதற்கு ஏற்பாடு செய்வது என்று... இதுபோல் கூறிக்கொண்டே போகலாம்.
இது அனைத்தும் வசதி உள்ளவர்களால் பணம், பொருளால் செய்ய முடிவது. காலத்தின் கட்டாயம் என்று அறுதி இட்டுக்கூற முடியாவிட்டாலும் இதுபோல் செய்வதால் பல்வேறு மக்கள், பல்வேறு வகையான சூழலில் இருந்து வாழ்பவர்கள் பயனடைகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கைக்கு இது அத்தியாயவசியத் தேவையாகவும் கூட இருந்து விடுகிறது. இதுபோல் செய்பவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை இப்படி உதவிக்கரம் நீட்டுவது அவர்கள் மனதிற்கு இன்பம் அளிப்பதாக இருக்கும். மேலும் ஒரு கருணை உள்ளம் இருந்தால்தான் இப்படிப்பட்ட செயல்களையும் செய்யும் தர்ம சிந்தனை எழும்.
இன்னொரு பக்கம் பணமின்றி வாழ்க்கையில் தவிக்கும் எளியோர்களும் அறப்பணிகளில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
எதிரில் வரும் அன்பர்களைப் பார்த்து புன்முறுவல் பூப்பது அதுவும் ஒரு அறப்பணித்தான். இதனாவல் அன்றைய நாள் முழுவதும் சந்தோசத்துடன் நாளை கழிக்க முடியும்.
வழி தவறி நடப்பவர்களை பார்த்து நல் ஒழுக்கமுடன் வாழ நாம் அறிவுரை கூறுவது கூட அறப்பணிதான். திக்குத் தெரியாத காட்டில் வழிப்போக்கனுக்கு வழி காட்டுவதும் ஓர் அறப்பணிதான். இன்றும் கிராமத்திற்கு ஒருவர் புதிதாக வந்து குறிப்பிட்ட வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்களை அந்த வீடு வரை அழைத்து சென்று சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் தான் படிக்கவில்லை என்றாலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளாவது கல், முட்களில் கால் அடிபடாமல் செல்ல வேண்டும் என்று தினசரி அந்த வழியை சுத்தப்படுத்தி வைப்பவர்களும் உண்டு. விசாலமான எண்ணம் கொண்ட மிகப்பெரிய அறப்பணி அதுதான்.
தாகம் உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரிப்பதும் அறப்பணியே.
அன்புக்கு ஏங்கி தவிக்கும் ஆதரவற்றோர்களின் தலையை அன்புடன் தடவி கொடுப்பதும் ஓர் அறப்பணியே. நம்மிடம் அன்பு காட்ட மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு தன்னம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கும் தானே! ஆதலால் அதுவுமொரு அறப்பணிதான்.
விஷம் தீண்டிவிட்ட ஒருவரை காப்பாற்ற குலை தள்ளி இருந்த வாழை மரத்தை அப்படியே வெட்டி எடுத்துச்சென்று எந்தப் பகுதியில் சாறு பிழியலாமோ பிழிந்து காப்பாற்றுங்கள் என்று கூறி காப்பாற்றப் பட்டவர்களும் உண்டு.
இப்படி மனம் லயித்துசெய்யும் அன்பு எல்லாமே கருணையுடன் கூடிய அறப்பணியே.
ஆதலால் யாருக்கு எந்த அறப்பணியை செய்ய முடியுமோ அதை செய்து நிம்மதி பெறலாம்.
பணம் வாழ்க்கையின் ஆதாரம்..!
பாசம் வாழ்க்கையின் அஸ்திவாரம்...!
இவை இரண்டாலும் செய்ய முடிவதே அறப்பணி...!