
சில நேரங்களில் பணிக்குச்செல்லும் ஆணோ பெண்ணோ அலுவலகம் சென்று பணிசெய்ய ஆரம்பித்ததும் தூக்கக் கலக்கமும் சோம்பேறித்தனமும் உடலை அழுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கும். அதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது: உடலில் சக்தியின் அளவு குறையாமல் இருக்க உடலை நீரேற்றத்துடன் வைப்பது அவசியம். உடலை டீஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். உங்கள் மேஜையருகே ஒரு லிட்டர் பாட்டில் முழுக்க நீர் நிரப்பி வைத்து அவ்வப்போது அருந்துவது உங்களை சோர்வடையாமல் வைக்க உதவும்.
2.அடிக்கடி முகம் கழுவுதல்: முகத்தில் குளிர்ந்த நீரை வீசியடித்து கழுவிக்கொள்தல் உங்கள் நாடி நரம்புகளை விழித்தெழச் செய்து சுறு சுறுப்பூட்ட உதவும். எப்பொழுதெல்லாம் நீங்கள் மந்த நிலையை உணர ஆரம்பிக்கிறீர்களோ அப்போதெல்லாம் ரெஸ்ட் ரூம் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
3. வேலைக்கிடையே சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளல்: ஒரு மணிக்கு ஒருமுறை வேலையிலிருந்து விடுபட்டு சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு ரூமுக்கு வெளியே வந்து கை கால்களை நீட்டி மடக்கி சிறிது தூரம் நடந்துவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். அது உங்கள் மனநிலையை தெளிவுறச் செய்து சக்தியை மீட்டுத் தர உதவும்.
4.உடன் பணி புரிபவருடன் பேசுதல்: அவ்வப்போது உடன் பணி புரிபவருடன் சில நிமிடங்கள் சிரித்துப்பேசுவது, வேலையிலேயே முழுகிக் கிடக்கும் உங்களின் மனோபாவத்தை மாற்றவும், சிறிது நேர மகிழ்ச்சிக்குப் பின் மீண்டும் தெளிவுற்ற மனதோடு வேலையைத் தொடரவும் உதவும். அவர்களோடு வார இறுதி நாட்களை எவ்வாறு கழிக்கலாம் என்பது பற்றி கலந்தாலோசிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
5. பாட்டு கேட்பது: பாட்டுக் கேட்டுக்கொண்டே பணியாற்றுவது உங்களுக்கு இயலும் என்றால், உங்களுக்குப் பிடித்த பாடல்களை இயர் போன் உதவியுடன் மெல்லிய தொனியில் கேட்டவாறே வேலையை ஸ்ட்ரெஸ்ஸின்றி செய்யலாம். அது கவனத்தை திசை திருப்பக் கூடுமானால், வேலைக் கிடையே சிறிது பிரேக் எடுத்து சில பாடல்களைக் கேட்டுவிட்டு புத்துணர்வுடன் பணியைத் தொடரலாம்.
6. பணிபுரியும் இடத்தின் பிரகாசமான சூழ்நிலை:
உங்கள் இருக்கையிலிருந்து வேலை செய்யும்போது அந்த அறை போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருப்பது ஆரோக்கியம் தரும். ஜன்னல்களின் திரைச் சீலைகளை விலக்கி இயற்கை வெளிச்சம் பரவச் செய்வதும், தேவைப்பட்டால் பிரகாசமான டெஸ்க் லாம்ப் உபயோகிப்பதும் சோம்பலை விரட்ட உதவும்.
7.பணியை ஆரம்பிக்கும் முன் ஒரு கப் காபி அருந்துவது: காலை ஷிப்ட்டில் பணியை துவங்கும் முன் ஒரு கப் காபி அருந்திவிட்டு வேலையை ஆரம்பிப்பது சுறுசுறுப்பு தரும். மதிய நேரம் காபி குடிப்பதை தவிர்ப்பது நலம். ஏனெனில் அது உங்கள் ஸ்லீப் சைக்கிளை பாதிப்படையச் செய்யலாம்.
8.சிறிய அளவில் உடற்பயிற்சி செய்தல்: வழக்கமான பணியை துவங்கும் முன் சிறிதளவு நடைப் பயிற்சி அல்லது சுலபமான ஒர்க் அவுட் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கி சோம்பலில்லாமல் வேலையை தொடர்ந்து செய்ய உதவும்.
9.இடை இடையே ஹெல்த்தி ஸ்னாக்ஸ் உட்கொள்ளுதல்: வால்நட், பாதாம் போன்ற தாவர வகைக் கொட்டைகள் மற்றும் நறுக்கிய பழத் துண்டுகளை கைவசம் இருப்பில் வைத்துக்கொண்டு அவ்வப்போது உண்பது உடலில் சக்தி குறையாமல் பாதுகாக்கவும், சோர்வைத் தடுக்கவும் உதவும்.
10.இருக்கையை மாற்றியமைத்தல்: ஒரே பொசிஷனில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவதும் சோம்பலை உண்டாக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கையின் உயரத்தை மாற்றியமைத்து அல்லது வேறு வகையில் மாறுதலை உண்டுபண்ணிக்கொள்வது இரத்த ஓட்டத்தை சீராக்கி சுறுசுறுப்பு பெற உதவும்.