

தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும் என்பது பலரின் லட்சியம். இன்றைய போட்டிகள் நிறைந்த கால கட்டத்தில் அது அவ்வளவு சுலபமில்லை என்றும் அறிவார்கள்.
அதே சமயம் முன்னேற முடியாதது ஒன்றும் இல்லை என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணினால், நினைத்தால் மற்றும் கனவு கண்டால் மட்டும் போதாது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் முழு நம்பிக்கை மற்றும் முழு மூச்சுடன் எடுக்க வேண்டியது அவசியம். முன்னேற்ற பாதையில் முன்னேறி செல்ல உதவும் மூன்று முத்தானவை பற்றி இங்கு காண்போம்.
சூழ்நிலை, காலம், மனிதர்கள் - (Keys to success)
முன்னேற வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது? அவற்றின் பலன்கள், இழப்புகள் என்ன என்ன? என்பவற்றை கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை வலுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் ஏன் அப்படி நடந்தது, அதற்கு உரிய காரண காரியங்களை சரிவர புரிந்துக் கொள்வது முன்னேற்றத்தில் ஈடுபடுபவருக்கு தக்க சமயத்தில் உதவலாம்.
சூழ்நிலை, காலம், மனிதர்கள் ஆகிய மூன்றும் நடைமுறையில் இருப்பதால் ஒவ்வொரு நடவடிக்கையும் மாறுபட்டு இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்த மூன்றில் பொதிந்து இருக்கும் முக்கிய விவரம் இவற்றிற்கு மறு ஒளிபரப்பு இருக்காது. (Replay)
நடந்து முடிந்த சூழ்நிலையோ அல்லது கடந்து சென்ற காலமோ மறுபடியும் திரும்ப வராது, திரும்ப பெற முடியாது. அதே போல் சந்தித்த மனிதர்களின் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையிலோ, நேரத்திலோ வெளிப்படுத்தப் பட்ட குணாதிசியங்கள், நடத்தை முறை (Behaviour pattern) மறுபடியும் நடைப் பெற்ற முறையில் நடைப் பெறாது. எனவே ஒவ்வொரு தருணமும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது.
முன்னேற சிந்தித்து செயல்படுத்த முனைவோர் தங்களை சுற்றி என்ன என்ன? எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை சூழ்நிலை பொருந்திய அறிவை அதிகரித்துக்கொள்வது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகின்றது.
அதே போல் நேரம் ஒருவரின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். எல்லோருக்கும் நேரம் ஒரே மாதிரி இருக்கின்றது. மேலும் மேலும் வளர்ந்து சாதித்து முன்னேற நினைப்பவர்கள் இருக்கும் நேரத்தை சாதூர்யமாக பயன்படுத்தி பெரும் பலனை அதிகரித்துக் கொள்கின்றனர்.
அப்படிபட்டவர்களுக்கு நன்றாக தெரியும் கை விட்டு செல்லும் நேரம் திரும்ப வராது, கிடைக்காது என்று. எனவே இருக்கும் நேரத்தை விரயம் செய்யாமல், வீணடிக்காமல் முன்கூட்டியே சிந்தித்து எப்படி லாபகரமாக உபயோகிக்கலாமோ அவ்வாறு செய்து அதிகபடி பலன்களை அறுவடை செய்து முன்னேறி செல்வதில் முனைப்பாக இருப்பார்கள்.
இப்படிபட்டவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். பிறர் வீணடிப்பதையும் விரும்ப மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள்.
இவர்களுக்கு நேரம் மிக அரிய மூலதனம் ஆகும். அதற்கு உரிய மரியாதை எப்பொழுதும் கொடுக்கப் படும் இவர்களால் சூழ்நிலை, நேரம் இவைகளின் ஊடே முன்னேற துடிப்பவர்கள் பயணிக்கும் சமயத்தில் இவை இரண்டும் நடைமுறையில் கற்பித்தவைகளில் இருந்து தெரிந்துக் கொள்ளும் இவர்கள் தாங்கள் சந்திக்கும், பழகும் பிற பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடமிருந்து மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களை நழுவ விடமாட்டார்கள்.
இத்தகைய பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு திறன், பிரச்சனைகளை எதிர் கொண்டு முறியடிக்கும் திறமை, முடிவுகள் எடுக்கும் மற்றும் செயல் படுத்தும் முறை, விதம் என்ற பல்வேறு அம்சங்களை பிற மனிதர்களிடம் அறிந்துக் கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு.
முழுமையாக பார்த்து, கேட்டு, விவாதித்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் மட்டும் அல்லாமல், இன்றைய போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில், வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தின் இடையே வாழும் மனிதர்களும் முன்னேறி செல்ல உதவுகிறார்கள் என்பதும் உண்மை.
சூழ்நிலை, நேரம், மனிதர்கள் என்ற மூன்றும் நடைமுறை படிப்பை உரிய வகையில் கற்றுக் கொள்ள வழிவகுக்கின்றன முன்னேறி செல்ல.