பிரச்சினைகளை கண்டு ஓடாதீங்க! இந்த 3 நண்பர்களின் கதை தரும் அசாத்திய நம்பிக்கை!

கருத்துக்கணிப்பு தோல்வி தீர்ப்பை மீறி, தளராத முயற்சியால் மூன்றாவது நண்பர் மாபெரும் வெற்றி; போராடிய இரண்டாவது நண்பருக்கு நம்பிக்கை, ஒதுங்கிய முதலாமவர் அரசியலே விட்டு பின்வாங்கிய கதை
Three friends
Three friends election Motivational storycredit AI Image
Updated on

Three Friends Election Motivational Story:

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தார்கள். தேர்தல் காலம் வந்தது; மூன்று நண்பர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தனர். அதன்படி, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினர்.

அந்தச் சமயத்தில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அந்தக் கருத்துக்கணிப்பில், மூன்று நண்பர்கள் இருக்கும் கட்சிகளும் தோல்வியடையும் எனவும், வேறு ஒரு புதிய கட்சிதான் வெற்றி பெறும் எனவும் முடிவுகள் கூறின. இதனால் நண்பர்கள் மூவரும் சோர்வுற்றனர்.

அதன் பிறகு அவர்களுக்குள் நடந்த ஆலோசனையில்:

  • முதலாவது நண்பர்: "கருத்துக்கணிப்பில் தோல்வி அடைவோம் என்று தெரிந்த பிறகு, எதற்காகத் தேர்தலில் நிற்க வேண்டும்? போட்டியிடாமல் ஒதுங்கி விடலாம்," என முடிவெடுத்துத் தேர்தலில் போட்டியிடவில்லை.

  • இரண்டாவது நண்பர்: "இப்போது போட்டியிடவில்லை என்றால், தொண்டர்கள் அனைவரும் சோர்ந்து விடுவர். மேலும், நாம் பயந்து பின்வாங்கி விட்டோம் என வெளியில் பேசத் தொடங்கி விடுவார்கள்," என யோசித்து, தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துக் களமிறங்கினார்.

  • மூன்றாவது நண்பர்: கருத்துக்கணிப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், "என்னுடைய முழு முயற்சியைத் தந்து போட்டியிடுவேன்," என முழு மூச்சில் களத்தில் இறங்கி வேலை பார்த்தார்.

நாட்கள் செல்லச் செல்ல... முதலாம் நபரின் தொண்டர்களும், இரண்டாம் நபரின் தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து, மூன்றாவது நண்பருடன் சேர்ந்து தேர்தல் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.

வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தலில், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாயின. மூன்றாவது நண்பர் மாபெரும் வெற்றி பெற்றார்! இரண்டாம் நண்பர் தோல்வியடைந்தார். தேர்தலில் போட்டியிடாமல், தொண்டர்களின் நம்பிக்கையையும் இழந்த முதலாம் நண்பர், அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்குள் இருக்கும் பயத்தை விரட்ட இந்த கதையை படிங்க!
Three friends

ஆனால், தோல்வியே அடைந்திருந்தாலும் இரண்டாவது நண்பர் மிகவும் நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனெனில், போராடும் தைரியம் அவரிடம் இருந்ததால், எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி அடையலாம் என்ற நம்பிக்கை அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் வெகுவாக இருந்தது.

"மனிதன் இரண்டு சூழ்நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றான்: ஒன்று, அவன் ஒரு செயலைச் செய்யாமல் விடும்போது; அல்லது, ஒரு செயலைச் செய்து முடிக்கின்றபோது," என்பது புகழ்பெற்ற சிந்தனையாளர் மார்க் ட்வெய்ன் கூறிய கருத்து.

பகல் மட்டுமே இருந்தால், ஓயாத வேலையின் காரணமாக மனிதனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. அதே சமயம், இரவு மட்டுமே இருந்தால், அதிக ஓய்வு மனித குலத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே, இரவும் பகலும் மாறி மாறி வந்தால்தான் உலகம் திறம்பட இயங்கும்.

அதேபோல், மகிழ்ச்சியும் பிரச்சினையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மனதில் நிலைநிறுத்தி, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டால், 'முன்னேற்றம்' நம் கண் முன்னே தானாகத் தெரிய ஆரம்பிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com