
“எல்லோரும் வளமான வாழ்க்கை அமைய வேண்டுமென்று விரும்புவார்கள். அத்தகைய வாழ்க்கை அமைந்து விட்டால் …. சொர்க்கம் நம் வீட்டில்தானே. அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்....
* முதலில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுவரில்லாமல் சித்திரமில்லை என்பது முதுமொழி. “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்ற பாடலை மனதிலிருந்து அழித்து விடுங்கள். அது துறவிகளுக்கானது. நமக்கானது அல்ல. உடல் ஆராக்கியமே மகத்தான செல்வமாகும். அத்தகைய உடல் ஆரோக்கியத்தைப் பேண தியானம், யோகா ஆகியவற்றை மேற்கொண்டு உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் பலமும், பலவீனமும் உங்கள் கைகளில். எனவே பலத்தைப் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். பலவீனத்தை அப்புறத்தப்படுத்துங்கள். எப்பொழுதும், உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவுடம் இயங்குங்கள்.
* உங்கள் வாழ்க்கையை சற்று பின்னோக்கி, முன்னோக்கி மனதளவில் ஒரு காட்சியாக ஓடவிடுங்கள். அதில் நீங்கள் இதுவரை செய்த தவறுகள், தெரியவரும். அவற்றை எதிர்காலத்தில் தவிருங்கள். வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றுங்கள். வசந்த காற்று உங்கள் வீட்டு ஜன்னலில் வந்து வீசும்.
* நாம் வாழும் காலம் குறுகியது. அந்த காலகட்டத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். முடியாவிட்டால்….. உபத்திரமாக இருக்காதீர்கள். ஒதுங்கி நின்று விடுங்கள்.
* மன்னிக்க கற்று கொள்ளுங்கள். மன்னிக்கும் மனசு உங்களுக்கு இருந்தால் அந்த மகேசனே உங்கள் மனதில் குடி கொள்வான்.
* உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணருங்கள். அது கவிதையாக இருக்கலாம். ஓவியமாக இருக்கலாம், இசை அல்லது பாடலாக கூட இருக்கலாம். இவையெல்லாம் மனதிற்கு உற்சாகமூட்டிகள் ஆகும்.
* கருணையோடு வாழுங்கள். ஏசுவை போல் வள்ளலார் போல இல்லாவிட்டாலும்… சாதாரணமாக அனைத்து உயிர்களிடத்திலும் கருணைக் காட்டுங்கள்.
* மகிழ்ச்சிக்கான பாதை என்று இது எந்த அரசாங்கமும் உருவாக்கவில்லை. அதை நீங்கள் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். எண்ணமே வாழ்வு என்பார்கள். எண்ணங்கள் சுத்தமானால் மகிழ்ச்சி தன்னால் பெருகி ஊற்றெடுக்கும்.
* நாள் தோறும் இசையைக் கேளுங்கள். சில ராகங்கள் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
உங்களுக்கு மனச்சிக்கலா?
ஆபேரி ராகம் மனச்சிக்கலை கரைத்து விடும்.
இரத்த அழுத்தமா?
ஆனந்த பைரவியை ஆனந்தமாக கேளுங்கள். உங்களுக்கு பாடத் தெரிந்தால் இன்னும் சிறப்பு. இரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கும் வந்து விடும்.
மூக்கு மேலே கோபம் வருகிறதா?
ஆரபியை ஆராதியுங்கள். கோபம் காணாமல் போய்விடும்.
தன்னம்பிக்கை வேண்டுமா?
ஆசாவேரி ராகம் அற்புதமான ஒன்றாகும்.
உடல் சுறுசுறுப்பில்லாமல் சோம்பலாக இருக்கிறதா?
சோனா ராகம் கேளுங்கள்.
உங்கள் வயது ஐம்பதுக்கு மேலா? உறக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கும் ஆளா?
நீங்கள் பாகேஸ்வரி ராகம் கேளுங்கள். அருமையாக தூக்கம் வரும்.
எனக்கு ராகமெல்லாம் தெரியாது என்கிறீர்களா?
மெல்லிய திரைஇசைப்பாடல்களைக் கேளுங்கள்.
* நாள்தோறும் குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகள் கடவுளின் செல்லங்கள். அவைகளின் கள்ளமில்லா சிரிப்பே பல கவலைகளைப் போக்கிடும் அருமருந்தாகும். எனவே குழந்தைகளிடம் நீங்களும் குழந்தையாகவே மாறி விளையாடுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.
* நகைச்சுவை திரைப்படங்களைப் பாருங்கள். சிறுவர்களுக்கான கார்ட்டூன்களை நீங்களும் பார்க்கலாம். தடையேதுமில்லை. சார்லி சாப்ளின் திரைப்படங்கள், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைகளை பாருங்கள். கேளுங்கள். மனம் இலவம் பஞ்சு போல இலேசாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.