
‘ச்சே என்னடா வேலை இது!’- என்று யோசிக்க தோன்றுகிறதா?
இன்றைய பணி கலாச்சாரத்தில் பலர் தங்களுக்குப் பிடிக்காத வேலைகளில் அதிகம் சிக்கிக்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் குடும்பக் கடமைகள், நிதி அழுத்தம் அல்லது தனிப்பட்ட காரணமாக 'கடமைக்கு' என்னும் போக்கில் அலுவலகங்களுக்கு வந்து செல்கிறார்கள். இது அவர்களுக்கு நன்மையா? தீமையா? என்பதைத் தாண்டி அவற்றிலிருந்து மீண்டு, வேலையில் ஸ்மார்ட்டாக இருப்பது எப்படி என இப்பதிவில் காண்போம்.
நிலையான இணைப்பு:
மிகவும் அழுத்தமான பிரச்னைகளில் ஒன்று நிலையான இணைப்பு (constant connectivity). ஸ்மார்ட்போன்கள், சில பணி சம்பந்தமான ஆப்கள் (work apps) மூலம் ஊழியர்களை சில அலுவலகங்கள் 24/7 தொடர்பு வைத்துக்கொள்வதால், ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையிலான பந்தத்தை சிதைத்துவிடுகிறது. இதை எதிர்கொள்ள நிபுணர்கள் இப்போது 'டிஜிட்டல் டீடாக்ஸ் விண்டோஸ்களை (digital detox windows)' பரிந்துரைக்கின்றனர். இதனால் தகுந்த அனுமதியோடு ஒருவரால் டிஜிட்டல் சாதனம் மற்றும் வேலை தொடர்பான அறிவிப்புகளிலிருந்து விலகிக் கொள்ளமுடிகிறது.
மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் :
மற்றொரு வளர்ந்துவரும் உத்தி வேலையின் நோக்கத்தை மறுவடிவமைப்பு செய்வது (purpose reframing). ஒரேயடியாக அதிருப்தியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தனிநபர்கள் தங்கள் வேலையில் உள்ள நுண் அர்த்தங்களை அடையாளம் காணலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு ‘குழந்தையின் கல்வியை ஆதரிப்பதற்கான நிதிப் பாலமாக இந்த வேலையைப் பார்ப்பது அல்லது எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை அடைய ஒரு படிக்கல்லாக செய்யும் வேலையைப் பார்ப்பது போன்றவை நம் உணர்ச்சியை சாந்தப்படுத்தும். இப்படி உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் தற்போது நினைக்கும் விதத்தை மாற்றுவது மன அழுத்தத்தைக் குறைத்து உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்.
சில ஸ்மார்ட் வழிகள்:
ஹெட்ஸ்பேஸ் (Headspace), காம் (Calm), மூட்ஃபிட் (Mood fit) போன்ற மன பயிற்சி ஆப்கள் அவற்றின் தியானங்கள் (Guided meditations), சுவாசப் பயிற்சிகள், மனநிலை கண்காணிப்பு அம்சங்களுக்காகப் பிரபலமடைந்து வருகின்றன. இந்த விஷயங்கள் அதிக மன அழுத்த தருணங்களில்கூட சிறிய அளவிலான நிவாரணத்தை வழங்குகின்றன; காலப்போக்கில் உணர்ச்சி ரீதியான நல்ல முடிவுகளையும் உருவாக்க உதவுகின்றன.
பணியிடங்களிலும் கடைபிடிக்கப்படும் சில நல்வாழ்வு போக்குகள் எல்லோருக்கும் நன்மை தருகின்றன. 'இல்லை' என்று அப்பட்டமாகச் சொல்வதற்குப் பதிலாக 'நான் தற்போது வேறு மனநிலையில் இருக்கிறேன்' என்று சுதந்திரமாக சொல்ல அனுமதிப்பது ஒரு ஊழியரின் உணர்ச்சியை பல நேரங்களில் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பெரும்பாலும் அதிகமாக மன சோர்வடையும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அனைத்து உரிமையாளர்கள் அல்லது பணியிடங்களில் இதை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தி வந்தால் அது ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் நன்மையைத் தரும்.
தொழில் திட்டமிடல் (career micro-planning) செய்வது, அதை பாரமாகக் கருதுபவர்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும். ஒரு பெரிய மாற்றத்திற்காக காத்திருப்பதற்குப் பதிலாக தனிநபர்கள் சிறிய அல்லது சீக்கிரம் அடையக்கூடிய இலக்குகளை அமைக்க தங்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆன்லைனில் ஒரு புதிய திறனைக் (new skill) கற்றுக்கொள்வது, அனைவரிடமும் இயல்பாக பழகுவது அல்லது தனிப்பட்ட விண்ணப்பத்தை (Resume) எப்படி புதுப்பிக்கலாம் போன்றவற்றைச் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் அவர்களின் வேலைப் பளு பற்றி யோசிக்க வைக்காமல் அவர்களுக்கு தேவையான உந்துதலையும் கட்டுப்பாட்டு உணர்வையும் உருவாக்குகின்றன.