

தாழ்வு மனப்பான்மை இருக்கும்போது அங்கே எழுச்சியைக் காணமுடியாது. தாழ்வு மனப்பான்மை என்ற குறைபாடு ஒரு மனிதனிடம் அமைந்துவிட்டால் முதலில் அதைச் சரி செய்யாமல் வேறு என்ன செய்தாலும் வாழ்க்கை சீர்படாது . அதனால் முதலில் தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வதற்கான முயற்சியிலேயே முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. திகிலூட்டும் மர்மப்படங்களை எடுத்த உலகப்புகழ் பெற்றிருக்கும் ஹாலிவுட் பட இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் என்பவர் பெற்றோர்களால் மிகக் கண்டிப்பான முறையில் வளர்க்கப்பட்டவர். அவருடைய தந்தை எப்பொழுது பார்த்தாலும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே ஏன்று சதா மிரட்டிக்கொண்டே இருப்பார். அந்த கண்டிப்புக் காரணமாக ஆல்பிரட் ஹிட்ச்காக் தன்னம்பிக்கையை இழந்தவராகவும், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவராகவும் ஆகிவிட்டார்.
இளைஞராக வளர்ந்த பிறகும், ஹிட்ச்காக்கிற்கு பயந்த இயல்பும் தாழ்வு மனப்பான்மையும் மாறவில்லை. அவர்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த ஹிட்ச்காக்கின் மாமா அவருடைய கோளாறான மன இயல்பைக் கவனித்தார். அந்த இயல்பினை மாற்றி அமைக்காவிட்டால் ஹிட்ச்காக்கின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடும் என்று யோசித்தார்.
அதற்கு ஒரு தந்திரம் செய்தார். ஒருநாள் ஒரு கடிதத்தை அவர் ஹிட்ச்காக்கிடம் கொடுத்து, அதில் கண்ட முகவரியில் உள்ள மனிதரிடம் சென்று சேர்ப்பிக்கும்படிச் சொன்னார். இளைஞரான ஹிட்ச்காக் அந்தக் கடிதத்தை அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு எடுத்துச்சென்றார்.
அந்த இடம் ஒரு போலீஸ் ஸ்டேஷனாக இருப்பது கண்டு ஹிட்ச்காக்கிற்கு 'திக்' என்றது. அந்தக் கடிதத்திற்கு உரியவர் உயர் அதிகாரி என்று தெரிந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்த அந்த அதிகாரி ஹிட்ச்காக்கை ஏற இறங்கப் பார்த்தார். உடனே ஒரு போலீஸ் காரரை அழைத்து 'இந்தப் பையனை சிறைக்குள் தள்ளு' என்று உத்தர விட்டார். ஹிட்ச்காக் மிகவும் நடுநடுங்கிவிட்டார்.
தாம் செய்த குற்றம் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை அந்தப் போலீஸ் அதிகாரி ஹிட்ச்காக் மாமாவின் நண்பர். கடிதத்தில் அவர் ஹிட்ச்காக்கின் பயந்த இயல்பைப் பற்றிக் குறிப்பிட்டு அதைப் போக்குவதற்குப் பல வழிகளைத் தீர்மானித் திருப்பதாகவும், முதல் வழியாக அவனை நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்து அதிர்ச்சி வைத்தியத்தில் ஈடுபடுத்துமாறும் போலீஸ் அதிகாரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறையில் மற்ற கைதிகளுக்கு நடுவே திண்டாடிய ஹிட்ச்காக்கிற்கு முதலில் இருந்த குழப்பம் சிறிது நேரம் ஆக ஆகக் குறைந்தது. அத்துடன் மற்றக் கைதிகளைப் போன்று நடத்தாமல் நம்மைச் சற்று மரியாதையுடன் காவலர்கள் நடத்துவதையும், நல்ல உணவு கொடுப்பதையும் கண்டு அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
மாலையில் அவரைச் சிறையில் வைக்கச் சொன்ன பெரிய போலீஸ் அதிகாரியே நேரில் வந்து அவரை விடுதலை செய்து தமது அறைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வழங்கினார்.
உண்மையில் போலீஸ், சிறை இவற்றைப் பற்றியெல்லாம் ஹிட்ச்காக்கிற்கு இருந்த பயம் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதே மாதிரி பல அதிர்ச்சி வைத்தியங்களைச் செய்து ஹிட்ச்காக்கிற்கு இருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கினார் அவருடைய மாமா.
ஹிட்ச்சாக் சிறையில் இருந்த சமயம்தான் மர்மக் கதைகளைப் பற்றிய எண்ணங்கள் அவர் மனத்தில் உதயமாயிற்று. பின்னாளில் அதைச் செயற்படுத்திப் புகழும் பணமும் பெற்றார். ஆகவே தாழ்வு மனப் பான்மையை தள்ளிவிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.