விளக்குகளுக்கு இடையே போட்டி இல்லை... உண்மையான வளர்ச்சி தரும் ரகசியம்!

மற்றவர்களை வீழ்த்தாமல் நம் திறமையால் உயரும் எளிய வாழ்க்கை முறை.
வளர்ச்சி
வளர்ச்சிGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

யாரையும் வீழ்த்தியோ அல்லது பின்னுக்குத் தள்ளியோ நாம் முன்னேற நினைக்க கூடாது. இதுவே ஆரோக்கியமான மற்றும் நேர்மையான வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். உண்மையான வளர்ச்சி என்பது சுய முன்னேற்றத்திலும் ஆரோக்கியமான போட்டியிலும் மட்டுமே உள்ளது. வாழ்க்கையில் உண்மையான வளர்ச்சி என்பது மற்றவர்களுடன் அர்த்தமற்று போட்டி போடுவதில் இல்லை. மாறாக நேற்றைய நம்மை விட இன்று நாம் எவ்வளவு சிறந்தவராக மாறுகிறோம் என்பதில் தான் உள்ளது.

வாழ்க்கையில் நாம் உயர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது நல்லது தான். ஆனால் அந்த வளர்ச்சி அடுத்தவர்களைக் கீழே வீழ்த்துவதன் மூலமோ அல்லது அவர்களின் உழைப்பை தடுப்பதன் மூலமோ கிடைக்கக் கூடாது.

மற்றவர்களைக் கீழே தள்ளாமல் நாம் மேலே உயர்வதற்கு நம்முடைய தனிப்பட்ட திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை கெடுத்து அல்லது பின்னுக்குத் தள்ளி தற்காலிகமாக நாம் முன்னிலைக்கு வரலாம். ஆனால் நம்முடைய சொந்தத் திறமையும் உழைப்பும் மட்டுமே நம்மை எப்போதும் தலைநிமிர்ந்து வாழ வைக்கும்.

நம்மிடம் எவ்வளவுதான் திறமை இருந்தாலும், அடுத்தவர்களைக் குறைத்து மதிப்பிடும் அலட்சியப் போக்கு இருந்தால், நம்மால் நம்முடைய லட்சியத்தை அடைய முடியாமல் போய்விடும். அதேபோல் எல்லோரையும் அரவணைத்து யாருக்கும் துரோகம் செய்யாமல் நேர்வழியில் உழைத்துப் பெறும் வெற்றியே மனநிம்மதியையும் உண்மையான மகிழ்ச்சியையும் தரும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம் இலக்கை நோக்கி நாம் ஓட வேண்டுமே தவிர, மற்றவர்களின் கால்களை வாரிவிட்டு முன்னேற நினைக்கக் கூடாது. பிறருக்குத் தீங்கு செய்து முன்னேறும் பொழுது, சுற்றி உள்ளவர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் இழக்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.

வளர்ச்சி
வளர்ச்சிGemini image

எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிய பயமும், பொறாமையும் நம்முடைய மன நிம்மதியைக் கெடுத்து விடும். சுயநலமாக செயல்படுபவர்களுக்குத் தற்காலிகமாக வெற்றி கிடைத்தாலும், இறுதியில் அவர்கள் தனித்து விடப்படுவார்கள். நம் உழைப்பும் நேர்மையும் மட்டுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கும். நேற்றைய நம்மை விட இன்றைய நாம் சிறந்தவராக மாற கடினமாக உழைக்க வேண்டும்.

குறுக்கு வழிகளைத் தேடாமல் நம் தகுதியையும் உழைப்பையும் மட்டுமே நம்பவேண்டும். விதை தானாக வளர்ந்து மரமாகும் பொழுது அது எந்தச் செடியையும் பின்னுக்குத் தள்ளுவதில்லை. தன் திறமையால் மட்டுமே உயர்ந்து நிற்கிறது. நாமும் அதுபோல வாழ வேண்டும்.

ஒருவரைக் கீழே தள்ளி நாம் மேலே வர நினைத்தால், நாம் எப்போதும் கீழே இருப்பவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவே நம் பாதையில் நாம் கவனம் செலுத்தினால் நம் திறன்கள் வேகமாக வளர்வதுடன், நம் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இந்த நேர்மறையான எண்ணமே நம்மை மிகச் சிறந்த உயரத்திற்கு கொண்டு செல்லும்.

யாரையும் வீழ்த்தி முன்னேற நினைப்பதை விட நம்மை நாமே நல்ல முறையில் செதுக்கிக் கொண்டு முன்னேற முயலுவதே சிறப்பு. நாம் மேலேறும் பொழுது மற்றவர்களையும் தூக்கிவிடலாம். அவர்களின் வாழ்த்து நம்மை காக்கும். அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு மகிழும் பெருந்தன்மை நம் மனதை அமைதிப்படுத்தும். இந்த உலகம் மிகப்பெரியது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வளரும்போது ஏன் எல்லோரும் உங்களை எதிர்க்கிறார்கள்? தெரிந்துகொள்ளுங்கள்!
வளர்ச்சி

ஒருவரை வீழ்த்திவிட்டுதான் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. விளக்குகளுக்கு இடையே போட்டி இல்லை. ஒன்றின் ஒளியால் மற்றொன்று அணைவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விளக்குகளை அணைக்க நினைக்காமல் நம் விளக்கை இன்னும் பிரகாசமாக எரியவிடலாம்.

அடுத்தவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னேறுவதை விட நம் சொந்த பலத்தையும் திறமையையும் மூலதனமாக்கலாம். அடுத்தவர்களை வீழ்த்த நினைக்கும் போது மனதில் வஞ்சகம் பிறக்கும். நம் வழியில் நாம் நடக்கும் பொழுது மட்டுமே மன அமைதி நிலைக்கும். மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாமல், அதிலிருந்து நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

நாம் வளரும் பொழுது நம்மோடு இருப்பவர்களையும் அரவணைத்து, அவர்களது வளர்ச்சிக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். இப்படி பரஸ்பர உதவி செய்யும் பொழுது நாமும் உயர்வோம் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் வளர்ச்சி பெறுவார்கள். இந்த கூட்டு வெற்றியே நிலைத்து நிற்கும்.

இதையும் படியுங்கள்:
100 வருடங்களாக மறைக்கப்பட்ட வாழ்க்கை ரகசியம்… அதிர்ச்சி தகவல்!
வளர்ச்சி

வஞ்சகம் இல்லாமல் நேர்மையான வழியில் கிடைக்கும் வெற்றியே நமக்கு நிரந்தரமான நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். மெழுகுவர்த்தி மற்றுமொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அதன் ஒளி குறைந்து விடுவதில்லை. அதுபோல எல்லோரும் இணைந்து முன்னேறுவதே மிகச்சிறந்த வாழ்வியல் முறையாகும்.

மற்றவர்களுடன் அழிவுபூர்வமாகப் போட்டியிடுவதைத் தாண்டி, சுய முன்னேற்றத்திலும் உள் அமைதியிலும்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது என்ற புரிதல்.

logo
Kalki Online
kalkionline.com