காதல் உணர்வு என்பது காலங்கள் பல கடந்தும் மனிதர் வாழ்வில் கலந்திருக்கின்ற ஒன்று. இந்தக் காதல் எந்த அளவுக்கு வரவேற்று ரசிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு வெறுப்புகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காதல் கதைகளே பெருவாரியான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. காதலைப்பற்றிய திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் வணிக ரீதியாக வெற்றிபெறுகின்றன. அதில் வரும் காதலர்கள் எல்லாவிதமான தடைகளையும் தாண்டி, ஒன்று சேரவேண்டும் என்று படிக்கும் அல்லது பார்க்கும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் காதல், காலங்காலமாக ஒரு கடினமான போர்க்களத்தில் தான் வெற்றியையோ அல்லது தோல்வியையோ சந்தித்துக்கொண்டிருக்கிறது.
அதுவும் சமுதாய ஒற்றுமை, சமூக அறிவு, சமூக புரட்சி, இருபாலரும் இணைந்து பயிலும் கல்வி, அவர்கள் இணைந்து பணிபுரியும் தொழில்கள் என்று எவ்வளவோ நவீனமயமாக முன்னேறிவிட்ட உலகத்தில்… காதல் என்பது கொலை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதைக் காண்கின்ற நிலை இருக்கிறது.
காதல் என்பது காசு, பணம், கௌரவம், சாதி, மதம், இன வேறுபாடுகளில் சிக்கி திணறுகிறது. ஆக அவ்வப்போது காதலுக்கு எதிர்ப்பு என்பது பல காரணங்களால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதேசமயம் ஆங்காங்கே காதல் செய்வதும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
காதல் செய்யும் முன்பு பின்விளைவுகளைப் பற்றி யோசித்தல் என்பது காதலர்களுக்குள் நிகழ்வதில்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பவர்களுக்கு அந்தக் காதலே நிகழ்வதில்லை என்றும் சொல்லலாம்.
இப்போதைக்கு, இந்தக் காதல் குறித்த சமூக குற்றங்கள் இல்லாமல் போக வாய்ப்பு மிகவும் குறைவு. அதற்கு சாதி, மத, இன, பண மற்றும் மனரீதியான காரணங்கள் பலவும் இருக்கின்றன. ஆனால், எந்தப் பிரச்சனையையும் பேச்சுவார்த்தை, புரிதல் என்ற முறையில் அணுக ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். உயிர் பலியைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.
இதற்குத் தன் உயிர் போல அனைத்து உயிர்களையும் நேசிப்பவர் மனதில் இறைவன் இருக்கிறான் என்று சொல்கின்ற வள்ளலாரின் மனப்பக்குவம் வரவேண்டும்.
இந்த இடத்தில், மகாகவி சுப்பிரமணி பாரதியின் பாடல் ஒன்றை பார்க்கலாம். இதில் காதலைப் பற்றிய அவருடைய ஆழ்ந்த ரசனையும் கவித்துவமான சிந்தனையும் தெரிய வருகிறது..
"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! "
காதலினால் என்னென்ன நன்மைகள் என்று பட்டியலிட்டு அவர் பாடியிருக்கிறார்.
மேலும் "அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம்" என்றும் எழுதியிருக்கிறார்.
ஆனால் காதலிக்கிறவர்களுக்குத் தான் இப்போது மரணமும் நேரிடுகிறதே என்று யோசிப்பவர்களுக்கு, அவருடைய இந்தப் பாடலை, இப்படியும் பொருள் கொள்ளலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.
மகாகவியின் அறிவார்ந்த சிந்தனையும், தீர்க்கதரிசனமும், விடுதலை வேட்கையும், படைப்பாற்றலும், இந்த உலகத்தார் வியந்து போற்றக்கூடிய ஒன்று. அவர் இந்தப் பாடலில் திருமணத்திற்குப் பின்பு தங்கள் இணையோடு கொள்ள வேண்டிய காதலைச் சொல்கிறாரோ என்ற அர்த்தத்தில் பார்த்தால்…
ஆண் பெண் இருபாலரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டிய அன்பு என்ற செயலை பிரதானப்படுத்தி, அதைக் காதல் என்று குறிப்பிட்டுப் பாடியிருப்பாரோ என்ற சிந்தனையும் வருகிறது.
ஆதலினால் அன்பு செய்வீர், உலகத்தீரே!