
இன்றைய உலகில் எல்லோரும் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலையே ஓடிக் கொண்டிருக்கிறோம். சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள், சினிமா என எல்லா பக்கங்களிலிருந்தும், "பணம் தான் எல்லாம்", "அதிகமாக சம்பாதித்தால் மட்டுமே சமூகத்தில் மதிப்பு” போன்ற எண்ணங்கள் நம் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளன. குறிப்பாக இந்த மனப்பான்மை இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், உண்மையில் பணம் மட்டுமே ஒருவரின் வெற்றியை தீர்மானிக்காது. வாழ்க்கையின் உண்மையான வெற்றி எது? என்பதை இந்த கட்டுரையில் வாசித்து தெரிந்து கொள்வோம்.
பணம் ஒரு அத்தியாவசியமான தேவை என்பதில் சந்தேகமே இல்லை. நம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, வாழ்க்கையை வசதியாக வாழ, குடும்பத்தைப் பாதுகாக்க பணம் மிகவும் முக்கியம். பணம் இருந்தால் தான் ஒருவித நிம்மதி கிடைக்கும். எதிர்கால பயம் இருக்காது. பிடித்ததை வாங்க, பிடித்த இடத்திற்கு செல்ல, நல்ல கல்வி பெற பணம் உதவும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், வாழ்க்கையில் வெற்றி
என்பது பணம் சம்பாதிப்பதைத் தாண்டி பல விஷயங்களில் நம்மை உணரச் செய்கிறது. நம்மில் பலர் இதைப் பற்றி சிந்திப்பதில்லை. உண்மையான வெற்றி பணத்தில் மட்டும் இல்லை. மனம் திறந்து பேச ஒரு நண்பன், அரவணிக்க ஒரு குடும்பம் என்பதே நிம்மதியான வாழ்க்கையின் அடையாளம். இவை எல்லாம் பணத்தால் வாங்க முடியாத சொத்து என்றே சொல்லலாம்.
அதே போல், மன அமைதியே வெற்றியின் அடிப்படை. எவ்வளவு பணம் இருந்தாலும், மனதில் அமைதியின்றி தூக்கமில்லா இரவுகளைச் செலவிட வேண்டியிருந்தால் அதில் வெற்றி இல்லை. சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி காண தெரிந்தால் தான் மன அழுத்தமில்லாமல் வாழ முடியும். உடல் ஆரோக்கியமே இவை அனைத்திலும் மேலானது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனச் சொல்வது போல, பணம் இருந்தாலும் ஆரோக்கியமின்றி அதை அனுபவிக்க முடியாது. நல்ல உணவுமுறைகள், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவை. நாம் வாழும் சமூகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதும், ஒரு சிறிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதும், நம் மனதில் திருப்தியை உருவாக்கும்.
அதேபோல, தனிப்பட்ட வளர்ச்சியும் வெற்றிக்கான முக்கியக் கட்டமாகும். புதியதொரு விஷயத்தை கற்றுக் கொள்வது, திறமைகளை வளர்த்துக் கொள்வது, ஒரு நல்ல மனிதராக மாறுவதும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இவை அனைத்துக்கும் மேலாக, நேர சுதந்திரம் என்பது மிக முக்கியமான ஒன்று. பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கும்போது, நம்மால் நமக்கோ அல்லது நம் குடும்பத்தினருக்கோ நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் அது வெற்றி அல்ல. நேரம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பணம் தேவையில்லை எனச் சொல்லுவது யாரும் ஏற்க முடியாதது. அதே சமயம், பணம் தான் எல்லாம் என்று கருதி மற்ற அனைத்தையும் புறக்கணிப்பதும் ஆபத்தானது. இந்நிலையில், பணத்தையும், மற்ற வாழ்க்கையும் சமநிலையில் வைத்திருப்பதுதான் உண்மையான வெற்றி.