
நாம் நம் அன்றாட வாழ்வில் சில செயல்களில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும் சந்திக்கிறோம். தொடர்ந்து நாம் சந்திக்கும் வெற்றிகள் நமக்கு வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இந்த தொடர் நம்பிக்கையே நமது ஆழ் மனதில் தன்னம்பிக்கையாக உருவெடுக்கிறது. சில சமயங்களில் நாம் சந்திக்கும் தொடர் வெற்றி நமக்கு தலைக்கனத்தை உருவாக்குகின்றது.
தயக்கமும், பயமும் தன்னம்பிக்கையின் எதிரிகள். தன்னம்பிக்கை உடையவனுக்கு வெற்றி சாத்தியமாவது உறுதி. இறைவனின் படைப்புகளான நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். நாம் படைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை தேடிக் கண்டுப்பிடிக்க ஆறாம் அறிவையும் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறான். அதைத் தேடிக் கண்டுப்பிடித்து நம் வாழ்க்கையை வாழ முனைந்தால், நம்மால் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடன் வாழ முடியும்.
நம் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை, தலைக்கனம் இரண்டும் இருக்கின்றன. ஒரு செயல் தன்னால் மட்டுமே முடியும் என்னும் உணர்வு தலைக்கணம் ஆகும். தன் அறிவு, அனுபவம், திறமை ஆகியவற்றை திறம்பட மற்றவர்களின் உயர்வுக்கும் பயன்படுத்த முடியும் என்னும் உணர்வு தன்னம்பிக்கையாகும்.
பிறரின் பாராட்டுக்களை மூளைக்குள் ஏற்றிக் கொள்வது தலைக் கனமாகும். ஆனால், அது மனதுக்குள் மட்டும் இருந்தால் அது தன்னம்பிக்கையாகும். அது நம் செயல்களுக்கு மெருகூட்டும். தலைக்கனம் சரியாக அணியாத வேட்டியைப் போன்றது. அடிக்கடி அவிழ்ந்து விழுந்து நம்மை அவமானத்தில் தள்ளிவிடும்.
தன்னிடமிருந்தே பெறுவது தன்னம்பிக்கையாகும். அது காலப்போக்கில் நம் பழக்கத்தால்தான் நம்மிடம் வளரும். பிறரிடமிருந்து நம்பிக்கையை தேட செலவழிக்கும் நேரத்தில், நமக்கான தன்னம்பிக்கையை நமக்குள் தேடுவதுதான் நல்லது. தேடத் துவங்கியவுடன் தன்னம்பிக்கை நமக்கு வந்துவிடாது. தேட தேட உள்ளே ஒளிந்திருக்கும் உள்ளூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் நம்முள் புதைந்துக் கிடக்கும் தன்னம்பிக்கையை புலப்பட வைக்கும். தேடிக்கிடைத்த உள்ளூக்கத்தால் மெல்ல மெல்ல தன்னம்பிக்கை துளிர் விட்டு ஒரு நாள் மரமாகி நமது செயல்களில் தன்னம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சும்.
நமது பலத்தையும், பலவீனத்தையும் பட்டியலிட்டு பலவீனத்தை பலவீனப்படுத்தவும், பலத்தை வீரியப்படுத்தவும் நாம் முயற்சிக்க வேண்டும். அதில் தயக்கம், பயம் ஏதுமின்றி தொடர்ந்து பயனிப்பது நற்பலன்களை அளிக்கும். தன்னம்பிக்கையை தன்னுள்ளிலிருந்து கொணரும் தன்னம்பிக்கையாளர், தன்னிகரில்லா வெற்றியாளராக உருவெடுப்பார். நாம் ஏதாவது ஒரு துறையில் மிகவும் அறிவாற்றலோடு திகழத் திகழ அத்துறையில் தன்னம்பிக்கை நம்முள் தானே வளரும். அதற்கேற்ப உழைப்புடன் நிறைய படிக்கவும், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் வேண்டும். நாம் அடிக்கடி செல்லும் பயணங்கள் கூட நமது தன்னம்பிக்கையை வளர்க்கும்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் பிறரின் அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். நமது கடமைகளை செய்து கொண்டு, எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்ற துணிச்சல் நமக்கு பிறக்க வேண்டும்.
நமது மனதை வருத்தும் நிகழ்வுகளையோ, மனிதர்களையோ ஒதுக்கிவிட்டு புதிய வாழ்விற்கான தேவைகளை எண்ணிப் பார்ப்பதே தன்னம்பிக்கையின் அடித்தளம். நாம் முன்னெடுத்து வைக்கும் அடி அளவில் சிறிதாக இருந்தாலும் அதுவே நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். நமது வருங்காலம் எத்தனை பயமுறுத்தினாலும் முயற்சியை கைவிடாமல், நமது ஒவ்வொறு முன்னேற்றத்திற்கும் நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும். அதுவே நம் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
நமது நேரத்தை எப்போதும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதும், நல்ல நட்புகளின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதுவும் நம் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்கும். நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை நபர்களைத் தவிர்க்கவும், நம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நூலகம் சென்று புத்தகம் படிப்பதுவும் நல்லது.
நமக்காக படைக்கப்பட்ட இந்த உலகத்தில் நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள எப்போதும் முனைய வேண்டும். தன்னை வளப்படுத்திக்கொள்ள என்ன வழி என்று யோசித்தாலே நம்முள் உள்ள தன்னம்பிக்கை தலை தூக்கும். திருடுவதும், பொய்ச் சொல்லுவதும் தன்னம்பிக்கை வளர உதவாது.
முதுமையில் நம்மை நமது குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவது நம்பிக்கை. எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் என்னையும் மனைவியையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று நம்புவது தன்னம்பிக்கை. நமது இதயத்தைப் பின்பற்றி நமது உள்ளுணர்வைக் கேட்கும் போது தன்னம்பிக்கை வளரும்.