வெற்றி வேண்டும் எனில் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் நமது பலம் மற்றும் பலவீனத்தை அறிதல்.
சாதனையாளர்களை நன்கு உற்று கவனித்தால் ஒரு விஷயம் புரியும். அவர்கள் வசதி உள்ளவர்களாக அல்லது வறுமையில் இருக்கலாம்; அவர்கள் தேர்ந்தெடுக்க எத்தனையோ வாய்ப்புகள் வந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் தங்களுடைய விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழு கவனம் செலுத்தியதால் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள்.
எந்த ஒரு பணியை செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறதோ, அதுதான் நம்முடைய பலம். எதை செய்யும்போது நமக்கு விருப்பமே இல்லாமல் கடமைக்கு தொடர வேண்டி இருக்கிறதோ, அதுதான் நம்முடைய பலவீனம். இதை புரிந்து கொண்டாலே நம் வாழ்க்கை வெற்றிகரமாக மாறும்.
உதாரணமாக சமீபத்தில் கார் ரேஸில் வெற்றி பெற்று நாட்டின் கவனத்தைக் கவர்ந்த நடிகரை சொல்லலாம். அவருக்கு மிகவும் பிடித்த கார் ஓட்டுவதையே தனது பலமாக எண்ணி பலவீனங்களை தகர்த்து சாதனை புரிந்தார்.
இந்த உலகில் நிலையானது என்பது எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சூழல்களால் நமது விருப்பங்கள் மடைமாறும் சந்தர்ப்பம் ஏற்படலாம். ஆனால் அந்த சூழலை எப்படி கடந்து விருப்பத்தை ஏற்கிறீர்கள் என்பதே சவால்.
இன்னொரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும். சூழல் அழுத்தத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கை துறையை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால் அதிலிருந்து உங்களுக்கு பிடித்த துறைக்கு மாறுவதற்கு நிறையவே போராட வேண்டும். அந்த மாற்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்பட்டு விட்டால் நீங்கள் விரும்பிய வெற்றி பயணம் அமையும்.
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பார்கள். தகுந்த வயதிலேயே நமக்கான துறை இதுதான் என அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இருந்தால் காலத்துடன் வயதும் ஓடிப்போய் விடும். நம் எனர்ஜி லெவலும் குறைந்து வேகம் மட்டுப்படும்.
ஒரு துறையில் ஈடுபட்டு பொறுப்புகள் கூடிய பிறகு துறை மாறுவதும், பின் நாம் நினைக்கின்ற உயரத்தை அடைவதும் அதைவிட சிரமம். குறிப்பிட்ட வயது வரைதான் நம்மால் ரிஸ்க் எடுக்க முடியும். அதன் பின் நமது திறமையும், தைரியமும் இயல்பாகவே குறைந்துவிடும் என்பது தான் உண்மை.
அதனால் தான் 'பிடித்த வேலையை செய்யுங்கள், மனம் விரும்பி செய்யுங்கள், முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்' என்பதே வெற்றியாளர்களின் ஆலோசனையாக இருக்கும்.
நமது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் நமக்கு பிடித்த துறை எது? அதை எப்படி தேர்வு செய்வது என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அது தொடர்பான நிபுணரை கலந்து ஆலோசிக்கலாம் . இதில் நிபுணர்கள் என்றால் நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த வேலையை செய்யும்போது நம்மை தூங்க விடாமல் அதை முடித்தாக வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதோ அதுதான் நமது பலம் என உணர்ந்து வெற்றி பெறுவோம்.