ஓவர் புத்திசாலியா இருந்தா இதுதான் பெரிய பிரச்சனையா... பலரும் அறியாத பகீர் உண்மை!

நீங்கள் உலக மகா அறிவாளியாக இருந்தாலும், களத்தில் இறங்கி செயல்படாவிட்டால் எந்தப் பயனும் இல்லை என்பதை விளக்கும் வாழ்வியல் தத்துவமே உங்களின் உண்மையான வெற்றி எதில் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
Stop overthinking in life உண்மையான வெற்றி
Stop overthinking in life உண்மையான வெற்றி
Updated on

பள்ளிக்காலத்தில் நம் வகுப்பில் ஒரு பையன் இருப்பான். கணக்கு முதல் அறிவியல் வரை எல்லாவற்றிலும் அவனுக்கு அத்துப்படியாக இருக்கும். ஆசிரியர்கள் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்பாகவே அவனிடம் இருந்து துல்லியமான விடை வந்துவிடும். இவன் பிற்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானியாக வருவான் என்று நாமெல்லாம் வியந்து பார்த்திருப்போம். ஆனால், பல வருடங்கள் கழித்து ஒரு ரீயூனியனில் சந்திக்கும் போது, அவன் ஏதாவது ஒரு சாதாரண வேலையில் எந்தவொரு வளர்ச்சியும் இன்றி முடங்கிப் போயிருப்பான். 

இதற்கு முக்கிய காரணம் அவனிடம் இருக்கும் அதீத அறிவை வைத்துச் சரியான நேரத்தில் களத்தில் இறங்கத் தவறியதுதான். உலகில் பல அறிவாளிகள் சாதிக்காமல் போனதற்குப் பின்னால் ஒரு பெரிய உளவியல் உண்மை மறைந்திருக்கிறது. வெறும் IQ எனப்படும் புத்திசாலித்தனம் மட்டும் இருந்தால் போதாது, களத்தில் இறங்கிச் செயல்பட்டால் மட்டுமே உண்மையான வெற்றி ஒரு மனிதனுக்குக் கிடைக்கும். இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.

அதிக சிந்தனை எனும் மிகப்பெரிய பிரச்சனை!

மிகச் சிறந்த அறிவாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஓவர் திங்கிங் எனப்படும் அதீத சிந்தனைதான். இவர்கள் ஒரு செயலைத் தொடங்கும் முன் நூறு முறை யோசிப்பார்கள். எல்லாமே நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்று எதார்த்தத்திற்கு ஒவ்வாத பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக ஒரு சிறிய பிசினஸ் தொடங்க நினைத்தால், அதில் வரப்போகும் லாப நஷ்டங்களை பல மாதங்களாக காகிதத்தில் மட்டுமே கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள். 

Stop overthinking in life உண்மையான வெற்றி
Stop overthinking in life உண்மையான வெற்றி

சிறு தவறு கூட நடந்துவிடக் கூடாது என்ற பயமே அவர்களைச் செயல்பட விடாமல் முடக்கிவிடும். ஒரு ஐடியா எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருந்தாலும், அது மூளைக்குள் உறங்கிக் கொண்டிருந்தால் ஒரு பைசாவுக்குக் கூடப் பிரயோஜனம் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அறிவை மிஞ்சும் அசுர உழைப்பு!

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இன்று நாம் கொண்டாடும் பல மாபெரும் மனிதர்கள் தொடக்கத்தில் அறிவாளிகளாக இருந்தவர்கள் கிடையாது. உதாரணமாக, தாமஸ் எடிசன் (Thomas Edison) தனது சிறு வயதில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது விடாமுயற்சியும் தொடர்ச்சியான பரிசோதனைகளுமே உலகிற்கு வெளிச்சத்தைக் கொடுத்தன. 

இதையும் படியுங்கள்:
Book Quotes: வாழ்க்கையில் துவண்டு போகும் போது படிக்க வேண்டிய 10 சிறந்த புத்தக வரிகள் இதோ!
Stop overthinking in life உண்மையான வெற்றி

அதேபோல, ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஒரு சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் கிடையாது. ஆனால், தனது ஐடியாவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற அதீத களப்பணி அவரிடம் இருந்தது. புத்திசாலித்தனத்தை விட உழைப்புக்கும் துணிச்சலுக்கும் தான் இங்கே எப்போதுமே மவுசு அதிகம்.

செயலில் இறங்கும் தந்திரம்!

அதீத சிந்தனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி இருக்கிறது. புகழ்பெற்ற பேச்சாளர் மெல் ராபின்ஸ் (Mel Robbins) என்பவர் எழுதிய 5 Second Rule என்ற புத்தகம் இதை அழகாக விளக்குகிறது. ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று உங்கள் மூளைக்குத் தோன்றினால், அடுத்த ஐந்து வினாடிகளுக்குள் அந்த வேலையைத் தொடங்கிவிட வேண்டும்.

அதற்கு மேல் நேரம் கொடுத்தால், அந்த வேலையை ஏன் செய்யக் கூடாது என்று மூளையே ஆயிரம் சாக்குப்போக்குகளை உருவாக்கி உங்களைக் கட்டிப்போட்டு விடும். தவறுகள் நடந்தாலும் பரவாயில்லை என்று முதல் அடியை எடுத்து வைப்பவர்கள் மட்டுமே இங்கே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சாவியை தொலைச்சிட்டு வாசல்லயே நிப்பீங்களா? வாழ்க்கையில் ஜெயிக்க இந்த 2 ரகசியம் போதும்!
Stop overthinking in life உண்மையான வெற்றி

வாழ்க்கையில் சாதிக்க நீங்கள் ஒரு மாபெரும் ஜீனியஸாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமே கிடையாது. உங்கள் மூளையில் ஆயிரம் உலகத்தரம் வாய்ந்த ஐடியாக்கள் இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் தைரியம் இல்லை என்றால் எந்தப் பயனும் இல்லை. தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இன்றே உங்களின் முதல் காரியத்தைத் தொடங்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com