

பிறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்றார் கவிஞர் கண்ணதாசன். இதுவரை நீங்கள் ஏதாவது சாதனை நிகழ்த்தி உள்ளீர்களா?
சாதனை என்பது எவரெஸ்டை தொட்ட டென்சிங்கின் அளவு இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் ஊரில் ஒரு மரம் நட்டால் கூட சாதனை தான். உங்கள் தெருவில் 100 பேர் வசிக்கலாம். உங்கள் அலுவலகத்தில் 100 பேர் பணிபுரியலாம். அதில் உங்கள் அடையாளம் என்ன?. உங்கள் பணி, துறை எதுவாக வேண்டுமானாலூம் இருக்கட்டும். உங்கள் வயது எதுவாக இருந்தாலும் இருக்கட்டும். ஆனால் உங்களுக்காக ஒரு சாதனைக் கனவு உள்ளதா?.
அது இளமைக் கனவாக இருக்கலாம். நேற்று இரவு தோன்றிய கனவாக கூட இருக்கலாம். உங்கள் கனவை அடைவதற்கு நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்?. திருமணம் ஆகிவிட்டது. பொருளாதாரம் சரியில்லை என்று புலம்பல் வேண்டாம்.
உங்களுக்கான கனவு நிறைவேறினால் அது உங்களை அடையாளப்படுத்தும். உங்களை அடையாளம் காட்டும் கனவை எக்காரணம் கொண்டும் தூக்கி எறியாதீர்கள். உங்கள் கனவு எதுவானாலும், அது சமூகத்திற்கு உதவும் சாதனையாக மலரட்டும்.
சிறுவயதில் கனவு நாளடைவில் உங்கள் பிரச்னைகள் காரணமாக காணாமல் போயிருக்கலாம். பருவ வயதில் இருந்தே திறமை திருமணத்திற்குப் பின் மறைந்து போயிருக்கலாம். நீங்கள் அந்தக் கனவை உங்களுக்குள்ளேயே புதைத்திருக்கலாம். யாரோ ஒருவர் உங்கள் கனவைப் சார்ந்து வெற்றி பெரும் போதெல்லாம் உங்கள் மனசு தவிக்கும். நாம் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கம் எழும். எனக்கும் இதுபோல் கனவு இருந்தது. ஆனால் அடைய முடியவில்லையே என்று புலம்பாதீர்கள். சோர்வை தூக்கி எறியுங்கள். புத்துணர்வோடு எழுந்திருங்கள்.
பிரச்னைகள் இங்கு யாருக்குத்தான் இல்லை?. பிரச்னைகள் வாழ்க்கை முழுவதும் நிழலாகத் தொடர்ந்து வரக்கூடியவைத்தான். அதை எதிர்த்து சமாளிப்பவன் தான் மனிதன். உலகமே இருட்டான பார்வையற்றோர், கைகால் இல்லாத ஊனமுற்றோர் சாதனை படைக்கவில்லையா?.
உலகம் போற்றும் சார்லின் சாப்ளினின் கனவு உலகம் போற்றும் நடிகனாக வர வேண்டும் என்பது தான். சார்லின் சாப்ளின் என்றால் தொப்பியும், ஹிட்லர் மீசையும், ஸ்ட்டிக்கும் தான் நமக்கு நினைவு வரும். நம்மை சிரிக்க வைக்கும் அம்மேதையின் அடையாளமே சிரிப்புதான். இந்த சார்லி சாப்ளின் இளவயதில் லண்டன் மாநகரில் கூத்தாடி பிச்சை எடுத்து வாழ்வு நடத்தியதுதான் அவரின் இளமை வரலாறு. 1913ல் ஊமைப்படம் தான் முதல் படம். இதில் தோல்வி தான். ஆனால் சார்லி விடவில்லை.
வேகம், ஓட்டம், கடுமையான உழைப்பு இயக்கம் நடிப்பு என ஒரே ஆண்டில் 35 படங்கள். மூன்று ஆண்டு இடைவெளியில் உலகப்புகழ். ஒரு பிச்சைக்கார கூத்தாடி தன் கனவைச் சிதைத்திருந்தால் உலகப்புகழ் அடைந்திருக்க முடியுமா? தன்னம்பிக்கையாளனுக்கு வறுமை கனவுகளை உடைக்காது. தன்னம்பிக்கையாளன் பிரச்னைகளைத் தவிடுபொடியாக்கி விடுவான். கனவுகளை அல்ல.
நீங்கள் சார்லின் சாப்ளின் போல் வேண்டாம். சராசரி மனிதனாகப் சிந்தியுங்கள் உங்களிடம் மூடிவைத்த திறமை ஏதாவது உள்ளதா?. அடக்கி வைத்த கனவு உள்ளதா? உங்களுக்குள் அரித்துக் கொண்டிருக்கும் ஏக்கம் உள்ளதா? அது புதைகுழிக்குள் போனதாக நீங்கள் எண்ணியதை திரும்ப எடுத்துத் தூசி தட்டுங்கள். அல்லது தற்போதைய கனவை எழுச்சியாக்குங்கள். காலம் ஓடிவிடவில்லை. இப்போதுகூட கனவை தோற்றுவியுங்கள்.
நடக்காதவன் காலில் சிலந்தி கூடு கட்டும் என்கிறது ஒரு எகிப்திய பழமொழி. நீங்கள் இதுவரை நடக்காதிருந்தால் பரவாயில்லை. எழுங்கள். வீறிட்டு எழுங்கள் உங்கள் கனவுகளை அடையத் தயாராகுங்கள். உங்கள் கனவுகளே உங்களை அடையாளப்படுத்தும். எப்படியோ பிறந்தோம். எப்படியோ வளர்ந்தோம் என்பதல்ல மனித வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை உங்களைப் பேச வேண்டும்.
இந்த வாசிப்பிற்குப் பின், உங்கள் பழைய தோல்விகளையும் வறுமையையும் மறந்து, உங்களுள் புதைந்து கிடக்கும் கனவை மீண்டும் தூசி தட்டி எடுத்து சாதிக்கத் தொடங்குவீர்கள்.