
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் கல்பனா சாவ்லா. இந்தியாவில் பிறந்து வளர்ந்த கல்பனா சாவ்லா பின்னர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றவர்.
காணும் கனவு ஒருநாள் நிஜமாகும் என்பது உண்மைதான் போலும். கல்பனா இளம் வயதிலிருந்தே விண்ணில் பறக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தார். இந்த கனவு ஒரு நாள் பலித்தது. உலகம் கல்பனா சாவ்லாவை அதிசயமாக பார்த்தது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை உடையவர்கள் என்ற நம்பிக்கை கல்பனா சாவ்லாவின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா சாவ்லா 1961 ல் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை கர்னலில் உள்ள தாகூர் பால் நிகேதன் பள்ளியில் படித்தார். சண்டிகரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாடிகல் இஞ்சினியரிங் படித்து 1982 ல் பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்கா சென்று 1984 ஆம் ஆண்டில் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை ஏரோநாடிகல் எஞ்சினியரிங் பிரிவில் முடித்தார். 1988 ல் ஏரோநாடிகல் பிரிவில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். நாசாவின் ஏம்ஸ் ரிசர்ச் சென்ட்டரில் பணியில் சேர்ந்தார். சாவ்லா அமெரிக்க பிரஜையானார். அமெரிக்காவில் விமான பைலட் பயிற்சியை முடித்தார்.
கல்பனாவிற்கு சின்னஞ்சிறு வயது முதலே விமானங்களின் மீது ஆர்வம் இருந்தது. சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்பனா விமானத்தின் படங்களை வரைவதை விருப்பமாகக் கொண்டிருந்தார். ஓவியப்போட்டிகளில் சாவ்லா வரையும் படம் நிச்சயமாக ஏரோப்பிளேனாகத்தான் இருக்கும். மேலும் வானம் நட்சத்திரம் போன்றவற்றையும் வரைவார். இவரது பதினோராவது வகுப்பில் பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தார்கள். இந்த ப்ராஜெக்டிற்கு கல்பனா தேர்வு செய்த தலைப்பு மார்ஸ் கிரகம். புவியியல் பாடத்தில் பிராஜெக்ட் செய்ய நேரும் பட்சத்தில் உலக உருண்டையைச் செய்வதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். கல்பனா சிறிய வயதிலேயே தனது அறை முழுக்க விண்வெளி சம்பந்தப்பட்ட படங்களையே சுவற்றில் ஒட்டி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இளம் வயதில் தான் ஒரு விமானி ஆகவேண்டும் என்றும் வானத்தில் பறந்து மகிழ வேண்டும் என்று கனவு கண்டார் சாவ்லா. 1994 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி நிலையம் விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்ணப்பங்களை வரவேற்றது. கல்பனா சாவ்லாவும் விண்ணப்பித்தார். மொத்தம் 2962 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்து தகுதிவாய்ந்த 19 பேர்களை நாசா விண்வெளிக் கழகம் தேர்வு செய்தது. இந்த 19 பேர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
1994 ஆம் ஆண்டு நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். STS-87 கொலம்பியா விண்வெளி ஓடத்தில் 19 நவம்பர் 1997 முதல் 05 டிசம்பர் 1997 வரை முதன்முறையாக கல்பனா சாவ்லா பயணம் செய்தார். இந்த விண்வெளி ஓடம் பூமியை 252 முறைகள் சுற்றி வந்தது. 376 மணி நேரம் 34 நிமிடங்கள் இந்த ஓடத்தில் பயணித்த கல்பனா 6.5 மில்லியன் மைல்கள் பயணித்தார்.
நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்புகிறீர்களோ அதை மையமாக வைத்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருங்கள். நீங்கள் சாதிக்க விரும்புவதை ஒரு திரைப்படத்தைப்போல அவ்வப்போது உங்கள் மனதிற்குள் ஓட்டிப்பாருங்கள். நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.