

நாம எல்லாருமே வாழ்க்கையில ஜெயிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நாலு பேர் மதிக்கிற மாதிரி இருக்கணும்னுதான் ஆசைப்படுறோம். அதுக்காக ராப்பகலா கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனா, சில சமயங்கள்ல நாம பண்ற சின்னச் சின்னத் தப்பு, நம்ம உழைப்பு எல்லாத்தையும் வீணாகிடுது. அது என்ன தப்பு தெரியுமா? நம்ம வாய்தான்!
"மீன் வாயைத் திறந்துதான் மாட்டிக்கிது"னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான் மனுஷங்களும். நமக்குத் தெரியாம நாம சொல்ற சில விஷயங்கள், நமக்கே வினையா வந்து முடியுது. சாணக்கியர்ல இருந்து நவீன உளவியல் வரைக்கும் சொல்ற ஒரு முக்கியமான விஷயம், "சில ரகசியங்களை யார்கிட்டயும் சொல்லாதீங்க" என்பதுதான். அப்படி நாம ரகசியமா காக்க வேண்டிய அந்த 5 விஷயங்களை வாங்க பார்க்கலாம்.
முதல் மற்றும் முக்கியமான ரூல், உங்க வருமானத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க. ஏன் தெரியுமா? நீங்க குறைவா சம்பாதிக்கிறேன்னு சொன்னா, இந்த உலகம் உங்களை ஏளனமா பார்க்கும், உங்களுக்கு உரிய மரியாதையைத் தராது. சரி, அப்போ அதிகமா சம்பாதிக்கிறேன்னு சொல்லலாமா?
அது இன்னும் ஆபத்து. நீங்க அதிகமா சம்பாதிக்கிறேன்னு சொன்னா, உடனே கடன் கேட்க ஒரு கூட்டம் வரும், இல்லன்னா உங்க மேல பொறாமைப் படுவாங்க. அதனால, உங்க பாக்கெட்ல எவ்வளவு இருக்குங்கறது மத்தவங்களுக்கு எப்பவுமே ஒரு புரியாத புதிராவே இருக்கட்டும்.
நம்மல பல பேருக்கு ஒரு பழக்கம் இருக்கு. ஒரு கார் வாங்கப் போறோம்னா, வாங்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்போம். "நான் பிசினஸ் தொடங்கப் போறேன், வீடு கட்டப் போறேன்"னு சொல்லிக்கிட்டே இருப்போம். ஆனா, உளவியல் என்ன சொல்லுதுன்னா, நீங்க உங்க லட்சியத்தை வெளிய சொல்லிட்டீங்கன்னா, அதைச் செய்யணும்ங்கிற வெறி குறைஞ்சிடுமாம். அதுமட்டுமில்லாம, கண் திருஷ்டி, பொறாமை இதெல்லாம் உங்க வளர்ச்சியைத் தடுக்கும். அதனால, காரியத்தை முடிச்சுட்டு சத்தம் போடுங்க, அதுவரைக்கும் அமைதியா காயை நகர்த்துங்க. செயல்ல காட்டுங்க, சொல்லுல வேணாம்.
எல்லார் வீட்டுலயும் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். பாத்திரமா இருந்தா உருளத்தான் செய்யும். ஆனா, புருஷன்-பொண்டாட்டி சண்டையோ, குடும்பப் பிரச்சனையையோ தயவுசெஞ்சு மூணாவது மனுஷங்க கிட்ட சொல்லாதீங்க. நீங்க ஆறுதலுக்காகச் சொல்வீங்க, ஆனா அவங்க அதை ஒரு கிசுகிசுவா மாத்தி, ஊர் முழுக்க பரப்பிடுவாங்க. கடைசியில, உங்க குடும்ப மானம்தான் கப்பலேறும். உங்க பலவீனம் தெரிஞ்சா, அதை வச்சு உங்களை அடிக்க இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு.
"வலது கை கொடுக்கிறது இடது கைக்குத் தெரியக்கூடாது"னு சொல்லுவாங்க. நீங்க மத்தவங்களுக்குச் செய்யுற உதவியை விளம்பரப்படுத்தாதீங்க. அப்படிச் சொன்னா, அந்த உதவியோட புண்ணியம் போயிடும், அதுக்கு பதிலா தலைக்கனம்தான் வரும். அமைதியா உதவி செய்யுங்க, இயற்கை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.
கடைசியா, உங்க பலவீனம் என்னன்னு எதிரிக்குத் தெரியவே கூடாது. "எனக்கு இது வராது, எனக்கு இதைப் பார்த்தா பயம்"னு நீங்களே சொல்லிக் கொடுத்தா, உங்களை வீழ்த்த அவங்க கஷ்டப்படவேத் தேவையில்லை. உங்களை ஒரு இரும்பு மனிதனா காட்டிக்கோங்க.
வார்த்தைங்கிறது அம்பு மாதிரி. விட்டா திரும்பப் பிடிக்க முடியாது. மேல சொன்ன இந்த 5 விஷயங்களையும் உங்க மனசுக்குள்ளேயே பூட்டி வைங்க. உங்க வெற்றி சத்தம் போடட்டும், ஆனா உங்க முயற்சிகள் அமைதியா இருக்கட்டும்.
இந்த ரகசியங்களைக் கடைப்பிடிச்சுப் பாருங்க, உங்க வாழ்க்கை தரம் உயர்றத நீங்களே உணருவீங்க.