நாம் சந்திக்கும் பல்வேறு சூழல்களில் மிகவும் நீண்டு கொண்டே செல்லும் இரவுகளுக்கு சொந்தமான நேரங்கள் எதுவென்றால் நாம் கவலையில் ஆழ்ந்து விடும் நேரங்களே. நாம் மகிழ்ச்சியில் இருக்கும் போது அது சில நிமிடங்கள் நீடித்தாலும் கூட அது நம்முடைய மனதில் நீங்காத நினைவுகளாக பதிந்து விடுகிறது. ஆனால் நம்மை அழுத்தக்கூடிய சிறு கவலைகள் நம்முடைய பொழுதுகளை மிகவும் நீண்டதாக மாற்றி விடுகிறது.
இன்றைய காலகட்டங்களில் ஒவ்வொருவருடைய மனதும் சிறைச்சாலைகளுக்கு சமமானது தான். ஏனெனில் பல நேரங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டறிய முடிவதில்லை. இருப்பதிலேயே நமக்கு வாழ்க்கை கொடூரமாக தோன்றக்கூடிய ஒரு பொழுது என்றால் அது நாம் மனச்சோர்வுடனும் கவலையுடனும் கடக்க கூடிய பொழுதுகள் தான். இன்றைய காலகட்டங்களில் பல நேரங்களில் நம்முடைய மனக்குறைகளையும் மன ஆற்றாமையையும் பகிர்ந்து கொள்வதற்கு பெரும்பாலும் உறவுகள் இருப்பதில்லை. நம்மை புரிந்து கொண்டு வழிநடத்தக்கூடிய உண்மையான நண்பர்களும் உறவுகளும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதுமில்லை.
எனவே நாம் சந்திக்கும் ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் நாமே கஷ்டப்பட்டு வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நெருக்கடியான மனநிலை என்பது 5 வயது குழந்தைக்கும் உள்ளது, 50 வயது முதியோருக்கும் உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலை நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்வதற்கு நமக்கு கிடைத்த ஒரே வழி அமைதி தான்.
நாம் எப்பொழுதெல்லாம் மனக்கவலையில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் அமைதியாக அதனை கடந்து வருதல் பல பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சினையை சரி செய்வதற்காக குழம்பிய மனநிலையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பல நாட்களாக உருவாகிய பனிமலைகள் உருகுவதற்கு சில நாட்கள் தேவை படுவதைப் போல நம்முடைய கவலைகளை மறப்பதற்கும் கடப்பதற்கும் சில மணி நேரங்கள் தேவைப்படுகின்றன. அதுவரை நாம் அமைதியாக இருந்து விட்டாலே மனதில் இருக்கும் பாரத்தில் பெருமளவு குறைந்து விடுகிறது.
இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலும் இந்த அமைதி ஒன்றே நமது மன காயங்களுக்கு மருந்தாகிறது. பல்வேறு இக்கட்டான சூழல்களில் இத்தகைய அமைதியை கடைபிடிப்பதோடு, நல்ல புத்தகங்களை படிப்பதும், நல்ல இசையை கேட்பதும் பசுமையான இடங்களில் பயணம் செய்வதும் நம்முடைய மனப்பாரத்தை குறைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இத்தகைய கடினமான சூழ்நிலைகளை நாம் கடந்து வரும் போது தான் மனம் மேலும் பக்குவப்பட்டு சக்தி வாய்ந்ததாக மாறத் தொடங்குகிறது. புளிப்பான நெல்லிக்காயை கடித்துத் தின்ற பின்பு வாயில் படும் ஒரு துளி நீரால் புளிப்பு மறைந்து இனிப்பு சுவை உணரப்படுவதைப் போல எந்த ஒரு அழுத்தமான சூழலுக்கு பின்பும் ஒரு அமைதியான புரிதல் இருக்கிறது. எனவே வாழ்வின் ஏற்படும் எந்த ஒரு கசப்பான சம்பவங்களுக்கு பின்பும் ஒரு முன்னேற்றத்திற்கான திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை அதன் பாதையில் பயணித்து வளைவு நெழிவுகளோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.